எயிட்ஸ் எமக்கு ஒரு பாடம் -விக்கிரமன்

அகச்சூழல்,புறச்சூழல் மற்றும் நோய்க்காரணி என்பவற்றின் இடைத்தாக்கத்தின் விளைவாக தொற்று நோய்கள் தோன்றுகின்றன என்பது நோயியல் சமன்பாட்டின் அடிப்படையாகும். அவ்வகையில் பல்வேறு நோய்க்காரணிகள் அல்லது நுண்ணுயிர்கள் காலத்துக்கு காலம் மனித குலத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றில் பக்டீரியாக்களும், வைரசுக்களும் உலகளாவிய அதியுச்ச இழப்புகளை மனிதருக்கு ஏற்படுத்தி கொண்டே இருக்கின்றன.

இவற்றுள் கொள்ளை நோய் (பிளேக்), ஸ்பானிய காய்ச்சல், சின்னம்மை என்பன பதிமூன்று முதல் 19ம் நூற்றாண்டு வரை ஒரு பில்லியனுக்கு அதிகமான மனிதர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தன. எனினும் சமூக பொருளாதார,மருத்துவ விஞ்ஞான வளர்ச்சி இவ்வகை நோய்களை முற்றாக இல்லாதொழிக்க வழிவகுத்தது.

ஆனால் காசநோய் மற்றும் மலேரியா என்பன பல்லாயிரம் வருடங்களுக்கு மேலாக மனிதகுலத்திடையே தாக்கம் செலுத்தி வருவதுடன், கொலரா நோய் பதினாறாம் நூற்றாண்டு முதல் தாக்கம் செலுத்தி வருகிறது. இந்நோய்களும் ஏறத்தாழ ஒரு பில்லியன் உயிர்களை காவு கொண்டிருக்கும் என கணிப்பிடப்படுகிறது எனினும் மருத்துவ விஞ்ஞானம் இந்நோய்களின் தாக்கத்திலும் மனித பேரழிவிலுமிருந்து காத்து வருகிறது.  இந்நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரதான உலகளாவிய நோயாக எயிட்ஸ் அல்லது வலிந்து பெறப்படும் நோயெதிர்ப்பு குறைபாட்டு நோய் (acquired immunodeficiency syndrome (AIDS)) நோயே விளங்கி வருகிறது.38CB0926 F2D8 44EB 800D BED14A6E3523 எயிட்ஸ் எமக்கு ஒரு பாடம் -விக்கிரமன்

மனித நோயெதிர்ப்பு குறைபாட்டு  வைரசின் ( Human Immuno deficiency virus /HIV)  தாக்கமும் அதன் வெளிப்பாடான எய்ட்ஸ் 19ம் நூற்றாண்டு (1981) முதல் அதிக பரம்பலையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் கொடிய நோயாகவும் இன்றளவும் திகழ்ந்து வருகிறது. இதனால் முப்பத்தெட்டு  ஆண்டுகளில் எழுபத்தைந்து  மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டும் அவர்களில் முப்பத்தியிரண்டு மில்லியன் உயிர்கள் காவுகொள்ள பட்டுள்ளதாக கணக்கிடப்படுகிறது.

மேலும் முப்பத்தெட்டு மில்லியன் மக்கள்,மனித நோயெதிர்ப்பு குறைபாட்டு   வைரசின் (HIV) தாக்கத்திற்கு உள்ளாகி வாழ்ந்து வருகின்றனர் என மதிப்பிடப்படுகிறது. இவர்களில் 49.6% பெண்கள், 45.9% ஆண்கள், 4.5% சிறுவர்கள்.

இந்நோயுடையோர்  56.5% அபிரிக்கநாடுகளிலும், 11.5% இந்தியாவிலும் , 3% இந்தோனேசியாவிலும் ஏனைய 29% போன்ற நாடுகளிலும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிலும் வாழுகின்றனர். நவீன உலகில் எப்படி இவ்வாறான ஒரு நோய் மனிதர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது? அந்நோய் பரம்பலடையும் முறையென்ன அதனை எதிர்கொள்ள எவ்வாறான உத்திகள் பயன் படுத்த படுகின்றன என்பன நோயியலையும் மீறி இயற்கையின் வாழ்க்கை தத்துவங்களை எமக்கு உணர்த்தி நிற்பதாகவும் நாம் கொள்ளலாம்.

நோய்த்தொற்றும், நுண்ணுயிரியலும் , நோயியலும்:

எய்ட்ஸை உருவாக்கும் வைரசுக்கள் தொற்று ஏற்பட்ட ஒரு மனிதன் அல்லது விலங்கிலிருந்து இன்னொரு மனிதனுக்கு மனித உடல் கலங்களினூடனான நேரடித்தொடர்பினூடே தொற்றுகிறது.

இவ்வாறான பரவல் பல்லின மற்றும் தன்னின பாலியல் உடலுறவின் போதே பெருமளவில் ஏற்படுகின்றன, எனினும் குருதி பாச்சல்,தாயிடமிருந்து சேய்க்கான குருதி தொடர்பு மூலமும், ஊசி மூலமான போதைப்பொருள் பாவனை, மருத்துவ உபகரணங்கள், சவரம் செய்யுமிடங்கள் போன்ற உடல் கலங்களில் உரசல்களை ஏற்படுத்த கூடிய மறைமுகத் தொடர்பினூடாகவும் பரவுகின்றன.

இவ்வாறு பரவும் வைரசு பின்பு உடற்பாயங்களினூடே பிற மனிதர்களுக்கு தொற்றுகிறது. இச்செயற்பாட்டின் போது  நிணநீர்க் குளியங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு அவற்றிலிருந்து உருவாகும் பிறபொருள்களை வேறுபிரித்தறியும் புரதக்கூட்டு (cluster of differentiation 4 (CD4)) தொகுப்பும் தடுக்கப்படுகிறது. இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி வெகுவாக குறைந்து பிற தொற்றுக்களுக்கும் அவற்றின் தொடர் விளைவுகளுக்கும் வழிவகுக்கிறது. இப்போது வலிமை குறைந்த நுண்ணுயிர்கள் கூட உடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தொற்று ஏற்பட்டவரை நலிவடையச்செய்யும்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு செயற் பொறிமுறைகள்:

  1. எய்ட்ஸ்நோய் தாக்கத்துக்கு உள்ளாக கூடிய வாய்ப்புள்ள அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நோய் தொற்றை ஆரம்பத்திலேயே இனங்காணல்.
  2. மருத்துவவிஞ்ஞான மேம்பாட்டினால் கண்டுபிடிக்க பட்டுள்ள எய்ட்ஸ் வைரசு தாக்கத்தை மட்டுப்படுத்தும் மருந்துகள் மூலமான சிகிச்சை பெறும் வாய்ப்பினை அனைவருக்கும் ஏற்படுத்துதல்.
  3. மனிதநோயெதிர்ப்பு குறைபாட்டு  வைரசின் (HIV) தாக்கத்திற்கு உள்ளாக கூடியவர்களுக்கான விழிப்புணர்வு மூலம் நோய் பரவுவதை தடுப்பதற்கான முறைகளை பரப்புதலும் அவர்களின் வலுவை மேம்படுத்தலும் (குறிப்பாக பெண்கள்)
  4. எதிர்பார்க்கப்படும்அளவுக்கதிகமாக நோய் தாக்கம் ஏற்படும் சமூக குழுக்களை இனங்கண்டு உடனடி மருத்துவ ஆய்வு, சிகிச்சை மற்றும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

மேற்படி பிரதான செயற்றிட்ட இலக்குகளுடன் உலகெங்கும் உள்ள எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள மக்களை இனங்கண்டு உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது எயிட்ஸ் நோயின் தாக்கத்தை மட்டுப்படுத்த முடியும்.

அவ்வகையில் புதிய அணுகுமுறைகள் குறைந்தது பத்தொன்பது மில்லியன் மக்களுக்கு கிடைக்கப் பெற்றிருப்பதுடன் ஒன்பது மில்லியன் உயிர்களை காத்திருக்கிறதென கணக்கிட பட்டுள்ளது. இவ்வாறான தொடர் செயற்பாடுகள் 2030 ஆண்டளவில் 40மில்லியன் உயிர்களை காப்பித்தூடாக 4 டிரில்லியன் பண சேமிப்பை உலகுக்கு ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேற்படி செயற்றிட்டங்கள் உரிய வகையில் கிடைக்க மக்கள் எய்ட்ஸ் தொடர்பாக அறிந்து கொள்ளவும், தமது தேர்வை தாமே செய்யவும், பாதிப்புகளில் இருந்து தடையின்றி மீண்டு வரவும் தம் தேவைகளை வலியுறுத்தி பெற்றுக்கொள்ளவும் வலுவூட்டப்பட வேண்டும் என  ஐக்கியநாடுகள் அவையின் எயிட்ஸுக்கான செயற்றிட்டம் தனது 30வது ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்திற்கான அறைகூவலில் தெரிவித்துள்ளது.

எய்ட்ஸ் நோய் உடலை தாக்கும் பொறிமுறை, அதனை தடுக்கவும் அதன் தாக்கத்தை குறைக்கவும் நாம் பிரயோகிக்கும் செயற்றிட்டங்கள் மற்றும் அதன் விளைவுகள் என்பன மனிதருக்கிடையே இன்று நிலவும் ஆதிக்கப்போட்டிகளும் அவற்றின் தாக்கங்களுக்கும் ஒப்பானதாக கொள்ளமுடியும்.

இங்கு ஆதிக்க சக்திகள், வைரசை போல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் மக்களை கொள்ளை கொண்டு மக்களின் வளங்களை சுரண்டி அவர்களை நலிவடையச்செய்து ஒரு பிரதேசத்தில்  இருந்து இன்னொன்றுக்கு பரவிய வண்ணம் உள்ளன. அதனை எதிர்கொள்வதற்கு, அச்சக்திகளின் கபடத்தனத்தை இனங்காணல், உடனடி உள்ளக பரிகாரம் தேடல், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் சமூக வலுவூட்டல் என்பன இன்றைய தேவையாக உள்ளது என்பது எய்ட்ஸ் எமக்கு கற்றுத்தரும் பாடமாக உள்ளது.