தமிழினம் வலிசுமந்த நினைவுகள் -முள்ளிவாய்க்கால் வரையான அனுபவ பகிர்வு- திருமதி.றூபி செல்வராஜ்

498 Views

மனிதகுல வாழ்வியல் வரலாற்றில் தமிழீழத் தாயகத் தமிழினம், ஆளும் சிறீலங்கா அரசின் வன்கொடுமைகளில் அனுபவித்த அதியுச்ச வலிகளையும், இழப்புக்களையும் ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் வரையான அவலங்களை கடந்து பன்னிரெண்டு ஆண்டுகளானாலும், நேற்று நடந்தவைபோல எங்கள் மனத்திரையில் அலை வீசிக் கொண்டே இருக்கின்றன.

இது ‘போருக்குள் வாழ்ந்தோம்’ என்ற இரு சொற்பதங்களுக்குள் அடக்கக் கூடிய அல்லது சொல்லி விட்டுக் கடந்து செல்லக் கூடிய விடயம் அல்ல இந்த முள்ளிவாய்க்கால் 18 மே 2009 வரையான பேரவலம். மனித வாழ்வுக்கு அடிப்படையான, அத்தியாவசியமானவை எவை என்றால்? உணவு, உடை, உறையுள் என கல்விக்குரிய போதனைகளில் ஒன்றாக இருந்த காலம் மாறி, இடப்பெயர்வு போர்க்கால வாழ்வில் உயிரைக் காக்க ஒரு நேரக் கஞ்சி, உடலை பாதுகாக்க ஒரு பதுங்கு குழி என்ற நிலைக்குள் சிறுமைப்பட்டுக் கொண்ட வாழ் நிலையில் ஒரு வயது குழந்தை, ஏழுவயது பிள்ளையென இரு மகள்களின் தாயாகவும், ஆசிரியத்துவ பணியில் ஓர் ஆசிரியை என்ற நிலையிலும் வாழ்ந்து வந்து, நாம் கடந்த பாதையில் முள்ளிவாய்க்கால் வரையான மனித பேரவல பயணத்தின் பன்னிரெண்டாண்டுகள் கடந்த நிலையில் என் ஆழ்மன பதிவின், நாம் அனுபவித்த – சந்தித்த அவலங்களின் காட்சிப் படிமானங்களின் ஒரு பகுதியினை இப்பத்தியூடாக பதிவிட முனைகின்றேன்.

தாயக விடுதலைக்கான அளப்பரிய தியாகங்களின் 25 வருடங்களின் மீட்பின் பயனாக 2001 சமாதான காலம் தனியரசுக்குரிய சூழமைவு கனிந்த காலம். கிளிநொச்சி மண்ணில் தேசிய கடமையின் நிமித்தம் எனது கணவருக்கான பணியும், எனது ஆசிரிய பணிக்காகவும் கிளிநொச்சி நகரில் குடியமர்ந்தோம். போர்க் காலம் ஓய்ந்து சமாதான காலம் மலர்வு பெற்ற தருணம். தமிழீழ தனியரசின் அடிப்படைக் கட்டுமானங்களும், விரைவான பார்வையில் உருவாக்கப்பட்டு சர்வ தேச இராஜதந்திரிகள் அடிக்கடி வரும் நிலமாக கிளிநொச்சி நகர் களைகட்டியது. குறுகிய காலத்திற்குள் பாரிய, நிலையான அபிவிருத்திப்பணிகளில் பாடசாலைகள், அரச திணைக்கள கட்டிடங்கள், கலைக்கூடங்கள், மருத்துவமனைகள், வீதிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தமிழீழ அரசுக்குரிய நிர்வாக துறைசார் கட்டமைப்புக்கள். வன்னி மண்ணுள் நுழையும் ஒவ்வொரு வெளிநாட்டவரையும், புலம்பெயர் தேசத்து உறவுகளையும் வியப்பில் ஆழ்த்திய இடமாக, கிளிநொச்சி மண் முக்கிய மையப்பகுதியாக அமையப் பெற்றிருந்தது.

1200px Kilinochchi court of de facto State Tamil Eelam தமிழினம் வலிசுமந்த நினைவுகள் -முள்ளிவாய்க்கால் வரையான அனுபவ பகிர்வு- திருமதி.றூபி செல்வராஜ்

இவ்வாறான சூழ்நிலையில் நான் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றினேன். இப்பாடசாலை கிளி.நகரின் மத்தி யில் 1AB தர முதல் நிலைப் பாடசாலை. 1800 இற்கும் மேற்பட்ட மாணவர்களையும் 85இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் கொண்டிருந்தது. ஆண்டு தோறும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில், க.பொ.த.சா/த, க.பொ.த.உ/த என்பவற்றில் சிறந்த பெறுபேறுகளை உருவாக்கிக் கொடுத்துவரும் தலைசிறந்த பாடசாலையில் பணியாற்றுகின்றேன் என்ற மனநிறைவு மேலோங்கியிருந்தது. சமாதான காலம் ஆறு வருடங்கள் நகர்ந்து மீண்டுமொரு போரை சிறீலங்கா அரசு திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது நடத்தத் தொடங்கியது.

இந்தப் போர், கடந்த காலத்தைவிட மக்களை சொந்த வாழ்விடங்களில் இருந்து அடியோடு அழிக்கும் திட்டமாக அமைந்தது. 2008 ஆம் ஆண்டு தொடக்க காலம். மக்கள் இடப்பெயர்வு ஆரம்பமாகியது. வவுனியா, மன்னார், வடமராட்சி கிழக்கு மக்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு நோக்கி இடம்பெயர்ந்தனர். இந்த சமகாலத்தில் கிளிநொச்சி நகரையும், குடியிருப்புகளையும் நோக்கி அடிக்கடி வான்படை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு, மக்களை நிலைகுலையச் செய்தது. அனைத்துப் பாடசாலைகளிலும் மாணவர் கல்விக்காக கழித்த காலத்தைவிட, பதுங்கு குழிக்குள் வைத்து பாதுகாத்து வீட்டிற்கு அனுப்பிய நேரம் அதிகம். இவ்வாறு பாடசாலைகள் விமானத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, அன்று பாடசலைக்கு வராத மாணவர்கள் வீடுகளில் இருந்த வேளை கிபிர் விமானக் குண்டுத் தாக்குதலில் பலியான சோகமான நிகழ்வுகள் தொடக்கமாக அமைந்தது. இவ்வாறு நாங்களும் எனது இரண்டு பிள்ளைகளுடன் பதுங்கு குழிக்குள் சென்று தற்காத்து கொள்ளும் நிலையினை எங்கள் வாழ்வில் இயல்பாக்கிக் கொண்டோம். 2008 செப்டம்பர் மாதம் போரின் உச்சமாக சிறீலங்கா அரசின் படை நகர்வு கிளிநொச்சியை நோக்கி தீவிரமாகின. கிளிநொச்சியை மையமாக கொண்டு இயங்கிய நிர்வாக அலகுகள், மக்கள் என அனைவரும் தர்மபுரம், விசுவமடு நோக்கி இடம் பெயர்ந்த வேளையில், நாங்களும் எங்கள் வீட்டிலிருந்த பாவனைப் பொருட்களுடன் இடம்பெயர்ந்தோம். எங்கு போகின்றோம் எதுவரை மட்டும் போவோம் என்பது பற்றி எந்த இலக்குமின்றி புறப்பட்டோம். காணியை விளை நிலமாக்கி, வீடு கட்டி சிறிது சிறிதாக சேமித்த உழைப்பின் அறுவடையின்றி வியர்வை காயுமுன் புறப்பட்ட மனக்கனதி இன்னும் ஆறவில்லை. இப்படித்தானே ஒவ்வொரு மக்களதும் வாழ்வு நிலை இருந்திருக்கும்.

phoca thumb l Children waiting to get kanchchi at TRO center.. தமிழினம் வலிசுமந்த நினைவுகள் -முள்ளிவாய்க்கால் வரையான அனுபவ பகிர்வு- திருமதி.றூபி செல்வராஜ்

வீதியெங்கும் ஒவ்வொரு குடும்பமும் தங்களால் முடிந்தளவு பொருட்களை கொண்டு நகர்ந்தனர். ஒரு சைக்கிளில் கொண்டு செல்லக்கூடிய பொருட்களை ஒரு மனிதன் சுமப்பதையும், ஒரு லாண்ட் மாஸ்டரில் கொண்டு செல்லக்கூடிய சுமையை சைக்கிளில் அல்லது மோட்டார் சைக் கிளில் சுமப்பதையும், ஒரு உழவு இயந்திரத்தில் ஏற்றக்கூடிய சுமையை லாண்ட் மாஸ்டரிலும் ஒரு பாரஊர்தியில் ஏற்றக்கூடிய சுமையை உழவு இயந்திரத்திலும் சுமந்து சென்றது இடப்பெயர்வின் பேரவலம். மனிதரில் இருந்து பாரஊர்தி வரை பன்மடங்கு சக்தியை பயன்படுத்தி பொருட்களை சுமந்தன. பரந்தன் – முல்லைத்தீவு வீதி பரந்தனில் இருந்து தர்மபுரம் விசுவமடு வரை வட்டக்கச்சியென சனநெருசலாலும் வாகனங்களாலும் நிரம்பி வழிகின்றன. நாங்களும் உழவனூர், தர்மபுரத்தில் அறிமுகமான ஒருவரது காணிக்குள் தற்காலிக கொட்டில் மற்றும் பதுங்கு குழி அமைத்து இருந்தோம். இடம்பெயர்ந்த சூழமைவுக்கு ஏற்ப மாணவர் கல்விக்காக பாடசாலைகளும் தற்காலிக இடங்களில் இயங்கத் தொடங்கி செயற்பட்டது.

கிளி. மத்திய கல்லூரி, கிளி.தர்மபுரம் அ.த.க.பாடசாலை வளாகத்திற்குள் இயங்க ஆரம்பித்தது. இடநெருக்கடியை கவனத்தில் கொண்டு, காலையில் ஒரு பாடசாலையும், பிற்பகல் ஒரு பாடசாலையுமென பல பாடசாலைகள் இயங்குவதற்கு கல்வி நிர்வாக அலகுகள் திட்டங்களை வகுத்து செயற்படத் தொடங்கின. இரண்டு மாதங்கள் கூட இவ்விடங்களில் இயங்கக் கூடிய சூழ்நிலை அமையவில்லை. சிறீலங்கா அரசின் வான் படைத் தாக்குதலுடன் கிளிநொச்சியில் இருந்து எறிகணைத் தாக்குதல்கள் தர்மபுரம், விசுவமடு என வரத் தொடங்கின. இடம்பெயர்ந்து வந்த இவ் விடங்களும் பாதுகாப்பற்ற இடங்களாக மாறிக் கொண்டன. மக்களை தொடர்ச்சியாக நிலைகுலைய வைத்த சிறீலங்கா இராணுவம், பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் சுதந்திரபுரம், உடையார்கட்டு பகுதிக்கு செல்லுமாறு பொது அறிவிப்புக்களை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலம் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை மக்கள் இருந்த தற்காலிக இடங்களிலிருந்து உயிரிழப்புக்களுடனும் மீண்டும் மேற்குறிப்பிட்ட மக்களுடன் நாமும் இடம் பெயர்ந்தோம். மார்கழி 2008 தொடர்ச்சியான மழை வெள்ளம் இயற்கையின் சீற்றங்கள் கூட மக்கள் துன்பியலில் மேலும் வேதனையை ஏற்படுத்தின.

தொடர் இடப்பெயர்வுக்குள்ளும் தமிழீழ நிர்வாக அலகுகள், உரிய அரச திணைக்களங்களையும், மருத்துவமனைகளையும் ப.நோ.கூ.சங்கங்களையும் இருக்கின்ற வளங்களைக் கொண்டு பணிசெய்ய ஏற்புடைய ஒழுங்குகள் மேற்கொண்டு செயற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா அரசு அறிவித்த பாதுகாப்பு வலயமான சுதந்திரபுரம், உடையார்கட்டில் இரண்டு வாரங்கள் கூட மக்கள் சென்று ஆற அமர கொட்டில் பதுங்குகுழி அமைத்து இருக்கவில்லை. அடுத்தடுத்து தரைவழி, வான்வழி, கடல் வழி ஊடாக அதிகளவான மக்களை கொன்று குவித்தது சிங்கள இராணுவம். கண் முன்னே அறிந்தவர்கள், அறியாதோர் உடல்சிதறிப் பலியாகினர். இதனைக் கண்ட எங்களுக்கு மேலும் மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தியது. இதே சமகால பகுதியில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை, மக்கள் குடியிருப்புக்கள் என எல்லா இடங்களிலும் சமகாலத்தில் சிறீலங்கா அரசின் விமானத் தாக்குதலினாலும், எறிகணைத் தாக்குதலினாலும் அதிகளவு மக்கள் கொல்லப்பட்டனர். அங்கும் செல்ல முடியாத நிலை.

அவற்றைக் கடந்தும் இனி அதிக மக்கள் இரணைப்பாலை, புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்கால் இடங்களை நோக்கி நகரத் தொடங்கிய போது, நாங்களும் நகரத் தொடங்கினோம். பெருமளவு மக்கள் தேவிபுரம் காட்டுப்பகுதி ஊடாக நகர்ந்தனர். நாங்கள் இரணைப்பாலை செல்வதற்கு புதுக்குடியிருப்பு வழியாக சென்றோம். செல்லும் வழியில் துப்பாக்கி ரவைகள் எங்களைக் கடந்து சென்றன. எறிகணைகள் வழியெங்கும் முன் பின்னாக வெடித்தன. பலரது உயிர் பாதி வழியில் காவு கொள்ளப்பட்டன. யார் யார் போகும் வழியில் உயிர் தப்புவோம் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஏதோ இரணைப்பாலைக்கு சென்று விட்டோம். அங்கு இரண்டு நாட்கள்கூட தரித்து இருக்க முடியவில்லை. செந்தூரன் சிலையை அண்மித்த தென்னங் காணியில் மக்கள் நெருக்கமாக அருகருகே கூடாரம் அமைத்து இரு ந்தோம்.

mullivaakkal 05 80498 445 தமிழினம் வலிசுமந்த நினைவுகள் -முள்ளிவாய்க்கால் வரையான அனுபவ பகிர்வு- திருமதி.றூபி செல்வராஜ்

தொடர்ந்து அங்கிருந்து வலைஞர்மடம் சென்று மேரி முன்பள்ளி அருகில் மணற்பாங்கான நிலத்தில் சிரமத்தின் மத்தியில் பதுங்கு குழி அமைத்து அதன்மேல் தறப்பாள் கூடாரமும் அமைத்து இருந்தோம். எம்மைப்போல பலரும் அவசர அவசரமாக கூடாரங்கள் அமைத்து அனைவரும் மிக நெருக்கமான சூழ்நிலைக்குள் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் தொடக்கம் முள்ளிவாய்க்கால்வரை நீரேரி விழிம்பிலும், கடற்கரையிலும் இருந்தோம். அவலமான துன்பியல் வாழ்வுக்குள் சிறீலங்கா அரசு எம்மை நிர்க்கதியாக்கியது எம் மனங்களில் ஆறாத வடுவாகியுள்ளது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக் குண்டுகளாலும், எறிகணைகளாலும் கொல்லப்பட்டுக் கொண்டே இருந்ததை கண்முன்னே கண்டு தவித்து நின்றோம். மற்றொரு புறம் அவையங்களை இழந்து தவித்துக் கொண்டிருந்த மக்கள். பட்டினியின் விளிம்பில் தவிப்போர் ஒரு புறம். விடிகின்ற ஒவ்வொரு பொழுதும் இரவாகின்ற ஒவ்வொரு பொழுதும் யார் யார் உயிரோடு இருப்பார்கள் என்று நம்பிக்கை இழந்த வாழ்வு இக்காலப்பகுதியில் இருந்தது. ஒரு நாள் மேரி முன்பள்ளியின் அத்தியாவசிய மருத்துவ சேவை வழங்கிக் கொண்டிருந்த உளநல மருத்துவர் சிவமனோகரனும் சிகிச்சை பெற வந்த 20இற்கு மேற்பட்ட மக்களும் கொத்துக் குண்டினால் துடிக்கத்துடிக்க கொல்லப்பட்டதை கண்முன்னே கண்ட அவலமான காட்சியை நினைவில் கொள்கிறேன்.

இவ் அவலமான நிலையிலும் மக்களின் துயரினை போக்கி தங்கள் செயற்திறன் உள்ள வரை தங்களை நம்பி வந்த மக்களை காக்க வேண்டுமென்ற இலட்சியத்தோடு தமிழீழ நிர்வாக அலகுகள். ஆங்காங்கு இறந்தவர்களின் உடல்களை உரிய வகையில் தகனம் செய்தும். காயமடைந்த ஒவ்வொரு உயிர்களும் காக்கப்பட வேண்டியதற்கு உரிய வளங்களை கொண்டு அர்ப்பணிப்புடன் காத்த மருத்துவப் பணியும். பசியாலும் பட்டினியாலும் எவரும் துவண்டு விடக் கூடாது என ஒரு நேரக்கஞ்சி, வாய்ப்பன் குழந்தைகளுக்கான பால் மா என சிறுவர் தொடக்கம் வயோதிபர் வரை வழங்கி காப்பாற்றினர்.

அரச ஊழியர்களுக்கு மாத ஊதியம் கிடை க்க வாய்ப்பில்லாத போதும், அவர்களது தற்துணிவால் பிரத்தியேக கொடுப்பனவு வழங்கி வழிப்படுத்தினர். மேலும் சிறீலங்கா அரச படையினரை அனைத்து திட்டமிட்ட இனப் படுகொலையிலிருந்து இறுதி வரை காக்க வேண்டுமென வழிநடத்திய உத்தமமானவர்களை நினைத்து நெஞ்சு கனக்கிறது.Mullivaikal Tamil Genocide 84 1 தமிழினம் வலிசுமந்த நினைவுகள் -முள்ளிவாய்க்கால் வரையான அனுபவ பகிர்வு- திருமதி.றூபி செல்வராஜ்

எல்லாம் நிறைவேறியது போல சர்வதேச பார்வைக்குள் எங்கள் அவலங்கள் கண்ணுக்கு தெரியாது போய்விட்ட நிலையில், புதுமாத்தளன், வலைஞர்மடம், அம்பலவன் பொக்கணை, இரட்டை வாய்க்கால் கடந்து மேலும் இவ்விடங்களில் இருந்து 20 ஏப்ரல் 2009இற்கு பின் முள்ளிவாய்காலுக்குள்ளே முடங்கிய துர்ப்பாக்கிய நிலை. எங்கும் மரணஓலம் கந்தக புகையின் மணத்தைத் தவிர எதையுமே எவரும் அறிய முடியாத அவலம். நாட்கள் ஒவ்வொன்றும் எல்லோருக்கும் மரணத்தின் விளிம்பு எவ்வகையானது என்பதை உணர்த்தி நின்றது. எஞ்சிய 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒடுங்கிய நீரேரிப் பகுதியில் வாழ்ந்த ஒவ்வொரு மக்களின் குடும்பங்களுக்குள் ஏற்பட்ட இழப்புக்களும் துன்பியல் அவலமான சம்பவங்களும் ஒவ்வொரு வரலாறுகள். இவ்வாறு வலிந்த இராணுவ சூழமைவுக்குள் எஞ்சியோர் அகப்பட்டது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட் டது. இவர்களுள் நாங்களும் ஒருவராகி, நடைப் பிணங்களாய் கடலாலும், தரையாலும் ஒரு கொலை வலையத்தில் இருந்து இன்னொரு கொலை வலையத்துக்குள் வந்து வாழ்ந்ததும், வருந்தியதும், வலிசுமந்து வெளியேறியதும் எம் மரணம் வரை நினைவுகளாக இருக்கும். இது எமது சந்ததிக்கும் உலக மக்களுக்கும் கடத்தப் படும்.

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் அவர்கள் சர்வதேச மனித உரிமை ஆணையகத்திற்கு ஆதாரமாக வழங்கிய தகவலுக்கு அமைய முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிக் கணம்வரை இருந்து, காணாமல்போன 146,769 மக்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான பதிலை மனித குலம் ஆய்வுக்குட்படுத்தி, எம்மினத்தின் மீதானதும் மனித குலத்தின் மீதானதுமான வன்கொடுமையை முடிவுக்கு கொண்டு வருவதும், மீள நிகழாமையை உறுதிப்படுத்தும் கண்ணியமான தீர்வை பெற்று வழங்க வேண்டியதும், மனித நீதியின் மறுக்க முடியாத பணியாக உள்ளது. இதற்காக உழைப்போமென உளமார உறுதி பூண்டு செயற்படுதலே விடுதலை வேண்டிநின்று வீழ்ந்த எம்மக்களுக்கும், எம்மைக்காக்க போராடி மடிந்த போராளிகளுக்கும் நாம் செய்யும் கை மாறாக அமையும்.

Leave a Reply