தமிழர்கள் மட்டும் நினைவேந்தல் செய்ய முடியாத வாறு அடக்குமுறை – சபா குகதாஸ்

இலங்கைத் தீவில் தமிழர்கள் மட்டுமே தங்களது இறந்த, படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவேந்துவதற்கும் அவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் அமைப்பதற்கும் ஆளும் ஆட்சியாளர்கள் தடை விதித்து அடக்கு முறைகளை இரும்புக் கரம் கொண்டு மேற்கொள்கின்றனர் என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

தியாகி பொன் சிவகுமாரனின் 47 வது நினைவு தினத்தில்  அவரது நினைவுத்தூபியில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அஞ்சலி செலுத்த முயற்சித்த போது,  கொரோனா பரவல் காரணத்தைக் கூறி, காவல் துறையினர் அஞச்சலிக்கு தடை ஏற்படுத்தினர்.

இந்த சூழலில் தனது கருத்தை தெரிவித்துள்ள குகதாஸ்,

“கொரோனாவை தற்போது காரணம் காட்டி நினைவேந்தலை உறவினர்கள் செய்வதற்கு கூட மறுக்கப்படுகிறது வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் மட்டுமே இவ்வாறான பாகுபாடுகள் தென்னிலங்கையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் உறவுகளுடன் நடைபெறுகின்றன எவ்வித தடைகளும் இல்லாது காவல் துறையினர் கை கட்டி பார்த்த வண்ணம் உள்ளனர்.

வடக்கு கிழக்கில் புலனாய்வாளர்கள் மறைமுக அச்சுறுத்தல், காவல் துறையினர் நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களில் குவிக்கப்பட்டு தடுத்தல் மற்றும் நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளை எடுத்தல் போன்ற ஐனநாயக அடக்குமுறைகள் சொல்லில் அடங்காது.

கடந்த காலங்களில் தமிழர் தாயகப் பகுதியில் பல நினைவுச் சின்னங்கள் உடைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சி தற்போதும் தொடர்கிறது. தியாகி பொன். சிவகுமாரனின் நினைவுச் சிலை ஐந்து தடவைகள் கடந்த காலத்தில் உடைக்கப்பட்டது. அதே போல தமிழாராச்சிப் படுகொலை நினைவுச் சின்னம்,  தியாகி தீலிபனின் நினைவு தூபி . யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மேலும் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஆகியன முன்னதாக  உடைக்கப்பட்டன. மேலும்  பல நினைவுச் சின்னங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

உண்மையில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர்களை படுகொலை செய்தது மட்டுமல்ல அவர்களது நினைவுச் சின்னங்களையும் உடைத்தார்கள் தற்போது நினைவேந்தலை செய்வதற்கும் அரச இயந்திரத்தின் மூலம் தடை செய்கின்றனர் இது ஐனநாயகம் என்ற பெயரளவு ஆட்சியில் நடைபெறும் அராஐகம்” என்றார்.

Leave a Reply