தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும்: நவசமசமாஜக் கட்சி

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது என்றும், தமிழ் மக்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருக்கிறார் எனவும் நவ சமசமாஜக் கட்சி தெரிவித்துள்ளது.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான நவ சமசமாஜக் கட்சியின் 42ஆவது ஆண்டு விழா, இம்முறை வலிமையான ஜனநாயகத்துக்கான மாற்றம் என்ற தொனிப்பொருளில், கொழும்பு புதிய நகர மண்டபத்தில், இன்று நடைபெறவுள்ளது. இது குறித்து கட்சி வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

இலங்கை வரலாற்றில், தேசிய இனங்களின் உரிமைகளுக்காகவும், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளுக்காகவும் நவ சமசமாஜக் கட்சி அயராது உழைத்து வருகிறது.

2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர், தென்னிலங்கையில் பேரினவாத சக்திகளுக்குப் பயந்து பல இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்க விற்பன்னர்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திலுள்ள நியாயப்பாடுகளைக் கைகழுவிவிட்டபோதிலும், நவசமசமாஜக் கட்சி எந்த சூழ்நிலையிலும், தனது நிலைப்பாட்டில் துளியளவும் மாறாத நிலையில் தனது பயணத்தைத் தொடர்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்தினூடாக, ஜனநாயக சூழ்நிலை ஒன்று துளிர்விடத் தொடங்கியது. ஆனால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் திசை மாறிய செயற்பாடுகள், 2015 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த 62 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கியுள்ளன.

அத்துடன், தென்னிலங்கை முழுவதும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் முழு அளவில், சிங்கள – பெளத்த வாக்குகளை குறிவைத்து இனவாதப் பிரசாரங்களை முன்னெடுத்தனர். இத்தகைய இனவாதப் பிரசாரங்களை முழு அளவில் முறியடிக்கக்கூடிய வியூகத்தை, ஐக்கிய தேசியக் கட்சியினர் வகுக்கவில்லை. – என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply