தமிழக சட்டப்பேரவை தேர்தல் – 234 தொகுதிகளில் 3,998 பேர் போட்டி

448 Views

தமிழக சட்டப்பேரவைக்கு  வரும் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதில் 6,183 பேர் ஆண்கள், 1,069 பேர் பெண்கள், மூன்று பேர் மூன்றாம் பாலினத்தவர். மொத்தம் மனு தாக்கல் செய்த 7,255 பேரில் 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 451 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த தேர்தலில் அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள், அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள், குறைந்தபட்சமாக பவானிசாகர் மற்றும் வால்பாறையில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட 48 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தற்போது 28 பேர் களத்தில் உள்ளனர்.

அதிமுக, இந்திய அம்பேகர் கட்சி, அமமுக, அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கழகம், திமுக, மக்கள் நீதி மய்யம், மை இந்தியா கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழர் இளைஞர் கட்சி, சுயேச்சைகள் 17 பேர் களத்தில் உள்ளனர். அதிமுக சார்பில் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக சார்பில் சம்பத்குமார், அமமுக சார்பில் பூக்கடை சேகர், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தாசப்பராஜ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

ஸ்டாலின் தொகுதியில் 36 பேர் போட்டியிடுகின்றனர். கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த 55 பேரில் 9 பேர் பெண்கள். இதில் 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இறுதியாக ஸ்டாலின் உள்பட 36 பேர் களம் காண்கிறார்கள்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகின்றார்.

இந்த தொகுதியில் போட்டியிட 51 பேர் மனு தாக்கல் செய்த நிலையில், 26 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 25இல் ஒருவர் மனுவை திரும்பப் பெற்றார். இதையடுத்து இறுதியாக களத்தில் 24 பேர் உள்ளனர்.

இந்த தொகுதியில் அதிமுக, திமுக, அகிதல இந்திய திரிணமூல் காங்கிரஸ், அமமுக, அண்ணா திராவிடர் கழகம், அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, மக்கள் நீதி மய்யம், மை இந்திய கட்சி, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் 15 பேர் களம் காண்கிறார்கள். அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், அமமுக சார்பில் பி. முத்துசாமி, திமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட 44 பேர் மனு தாக்கல் செய்த நிலையில், அதில் 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 3 பேர் திரும்பப் பெற்றுக் கொண்ட பிறகு இறுதியாக டி.டி.வி. தினகரன் உள்பட 26 பேர் களம் காண்கிறார்கள்.

இங்கு அகில பாரத் ஹிந்து மகாசபா, அதிமுக, அகில இந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம், அமமுக, பகுஜன் திராவிட கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் 16 பேர் போட்டியிடுகின்றனர்.

அதே போல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.  இங்கு 20 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சார்பில் கே. குப்பன், அமமுக சார்பில் எம். செளந்தரபாண்டியன், திமுக சார்பில் கே.பி.பி. சங்கர், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டி. மோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் உள்ளிட்டோர் களம் காண்கிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் கமல் உள்பட 21 பேர் இந்த தொகுதியில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அமமுக சார்பில் துரைசாமி என்கிற சேலஞ்சர் துரை, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வஹாப், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர்  போட்டியிடுகின்றனர்.

Leave a Reply