தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பாஜக கூட்டணி தொடரும் – தமிழக முதல்வர்

460 Views

வருகிற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகளில் தமிழக கட்சிகள் இப்போதே இறங்கி விட்டன. அதிமுக- வைப் பொறுத்தவரை, முரலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து தேர்தல் பணியை ஆரம்பித்து விட்டன.

மண்டல வாரியாகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சசிகலா விடுதலைக்குப் பின்பும் அதிமுக- வில் எந்த மாற்றமும் இருக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டார்.

எனவே,சசிகலாவையும் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுக உருவாகுமா என்பது கேள்விக்குறியே. அப்படி இணைந்தால்,பலமான கட்சியாக அதிமுக தேர்தலை எதிர்கொள்ளும். இல்லையெனில், சசிகலாவுக்கு ஆதரவான அமமுக-வின் தினகரன் வாக்குகள் , அதிமுக- வின் வாக்கு வங்கியைப் பாதிக்கும். அது, திமுக- வுக்கு சாதகமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதே சமயம்,அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் உள்ளது. அத்தோடு தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

தொகுதிப் பங்கீடும் இக்கூட்டணியில் சிக்கலாகவே இருக்கும் போல் தெரிகிறது. பாமக தங்கள் வெற்றிக்கான வட மாவட்டங்களையே கேட்கும். அதிக தொகுதிகளை எதிர்பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது. இதே போல், நாடாளுமன்றத் தேர்தலில், கொடுத்ததை வாங்கிக் கொண்ட பாஜக, தற்போது தமிழகத்தில் காலூன்ற துடிக்கிறது. ஆனால்,இவ்விஷயத்தில் எடப்பாடியார் கறாராக இருப்பார் என கூறப்படுகிறது.தேமுதிகவைப் பொறுத்தவரை,கொடுத்ததை வாங்கிக் கொள்ளும் நிலையில் உள்ளது.

திமுக வில் ஏற்கெனவே அதிக அளவில் கூட்டணிக் கட்சிகள் இருப்பதால், அங்கு செல்ல முடியாத சூழலும் உள்ளது. ஆனால், எல்லாவற்றையும் சமாளிக்கக் கூடிய சாணக்கியராக உருவெடுத்துவிட்டார் எடப்பாடியார். திமுக வைப் பொறுத்தவரை, அங்கு தொகுதிப் பங்கீடுப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை.

எப்பொழுதும் அதிகம் கேட்கும் காங்கிரஸ், தற்போது கொடுத்ததை வாங்கிக் கொள்ளும் மனநிலையில் இருக்கிறது. ஸ்டாலினும்,2016 இல் செய்த தவறை திரும்ப செய்ய விரும்பவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை ,திமுக வை விட்டு செல்லப் போவதில்லை. விடுதலைச் சிறுத்தைகளும் பேரம் பேச வாய்ப்பில்லை. ஆனால்,எந்த தொகுதிகள் என்பதில்தான் பெரும்பாலும் திமுக கூட்டணியில் இழுபறி நீடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஏனெனில், இம்முறை  நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல், அறுதிப் பெரும்பான்மையுடன் அரியணையில் ஏறவே திமுக விரும்புகிறது. அடுத்து, நாம் தமிழர் கட்சிக்கு நான்கு விழுக்காட்டிலிருந்து  ஆறு விழுக்காடாக வாக்குகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

மாற்றத்தை விரும்புவோர், இளைய தலைமுறையினர் தங்கள் வாக்குகளை சீமானுக்கு போட வாய்ப்பிருக்கிறது. அவர் எந்த கட்சியுடனும் கூட்டணியில்லை என்று கூறி தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தங்கள் நான்கு விழுக்காட்டை தக்க வைத்துக் கொள்ளும். தேர்தல் சமயத்தில் கூட்டணி வைத்துக் கொண்டாலும் சொல்வதற்கில்லை. தற்போதைய இந்த வியூகத்தில், ரஜினி அரசியலுக்கு வந்தால், வாக்குகள் பிரியுமே தவிர திமுக வெற்றியைப் பாதிக்கப் போவதில்லை. எப்படியும் ஜனவரியிலிருந்து அவரவர் அரசியல் ஆட்டங்களை ஆரம்பிப்பார்கள். அப்போது தெரியும் ராஜா யார்,மந்திரி யார்,கோமாளி யார் என்று. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply