தமிழகத்தை ஆளப் போகும் முதல்வரை வாழ்த்தி வரவேற்போம் -மனோ கணேசன்

தமிழக ஆளும் கட்சியை, தமிழக முதல்வரை வாழ்த்தி வரவேற்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்தியா, தமிழக தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திராவிட முன்னேற்ற கழகம் முன்னணியில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் மூலமாக அறியக் கூடியதாக உள்ளது. இந்த நிலையில் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன்  தனது முகநுாலில் கருத்து தெரிவிக்கையில்,

“தமிழக தேர்தல் முடிவுகள் இன்று.

அதில் நேரடியாக தலையிட, நாம் அங்கே வாக்காளர்கள் அல்ல.

ஆனால் அதுபற்றி நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது.

கலைஞர் வளர்த்த கட்சிக்கும், ஜெயலலிதா வளர்த்த கட்சிக்கும் இடையில்தான் பிரதான போட்டி.

மற்றவையெல்லாம் துணை பாத்திரங்கள்தான்.

இன்று, தமிழக உடன் பிறப்புகள் தரும் முடிவை ஏற்று அதை எப்படி எமக்கு பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை மட்டுமே நாம் கணிக்க வேண்டும்.

மற்றபடி, தேர்தல் காலத்திலும் சரி, இன்று முடிவுகளின் போதும் சரி, தமிழக கட்சிகளை பற்றி, தலைவர்களை பற்றி, தரக்குறைவாக பண்பற்று பேசி எமது உணர்வுகளை நாம் கொட்டக்கூடாது.

முதலில், அப்படி ஆத்திரப்பட நம்நாட்டு தமிழ் அரசியல் தலைமைகளும், ஏதோ பிழையே செய்யாத அதி உத்தம யோக்கியர்களுமல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஆகவே, தமிழக ஆளும் கட்சியை, தமிழக முதல்வரை வாழ்த்தி வரவேற்போம். “ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply