‘தடுப்பதற்கு பொறுப்புக்கள் உணரப்பட வேண்டும்’- வீ.குகதாசன்

446 Views

பிள்ளைகளின் பராமரிப்பு பற்றி நாம் அடிக்கடி பேசும்போது, அவர்களை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவரது மனதிலும் ஆணித்தரமாய் இருப்பதோடு, அதிக கவனமும் செலுத்துவோம். ஆயினும் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி நாம் முழுமையாக அறிந்திருக்கிறோமா என்பது சந்தேகம் தான்.

பிள்ளைகளின் பாதுகாப்பு (Child Protection) என்பது சாதாரணமாகச் சொல்லப் போனால், வெறுமனே காயம் ஏற்பட்ட பின்னர்  மருந்து போடும் விடயம்போன்றது மட்டுமல்ல, மாறாக அந்தக் காயம் ஏற்படாமல் எவ்வாறு  தடுக்கலாம் என்பதிலும் தங்கியிருக்கின்றது.

அதாவது பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல், உள, சமூக, மற்றும் பாலியல் வாரியான துஸ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும், அவ்வாறு துஸ்பிரயோகங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகள் (Prevention) மேற்கொள்வதனையுமே குறிப்பிடுகின்றது.

ஆக சிறுவர் பாதுகாப்பில் துஸ்பிரயோகத்திற்கான நடவடிக்கை (Respond) மேற்கொள்ளல்  மற்றும் தடுத்தல் (Prevention) ஆகிய இரண்டு முக்கிய விடயங்கள் தொடர்புபடுகின்றன.

Prevention is better than cure  என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதனை இன்னொரு வகையில் கூறுவதானால், வெள்ளம் வரு முன்னர் அணை கட்ட வேண்டும் என்று எடுத்துக்   கொள்ளலாம். எந்த ஒருவிடயம் தொடர்பாகவும் நாம் பிரச்சினைக்கு முன்னரான முன்னாயத்த தீர்வு காண்பதனையே சிறந்தது என்கின்றோம். அதுவே பிரச்சனை தீர்த்தலின் நல் அணுகு முறையாகவும் கருதப்படுகின்றது.

ஆயின் துஸ்பிரயோகம் என்பது என்ன என்பதில் இன்று சமூகத்திற்கும் அதேவேளை  சட்டத்திலும் சிக்கல்கள் இருப்பதனை நாம் அறிய முடிகின்றது. இருப்பினும் பொதுவாக நோக்கின் பிள்ளைக்கு அதனது நலனுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவ்வாறேனும், எம்முறையிலேனும் நோவை அல்லது தீங்கை (Pain or Harm)  ஏற்படுத்தக் கூடிய செயற்பாடு  துஸ்பிரயோகம் எனக் கொள்ளப்படுகின்றது.

எனவே எவ்விடயம் எல்லாம் பிள்ளைகளுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை, நோவை ஏற்படுத்தக் கூடியவை என்பதை நாம் ஒரு கணம் பிள்ளைகளாய் இருந்த காலத்தையும் எமது பிள்ளைகளின் செயற்பாடுகளையும் சிந்தித்துணரும் போது  தோன்றக் கூடும்.

பிள்ளைகளுக்கு துஸ்பிரயோகம் ஏற்படாமல் எவ்வாறு தடுக்கலாம் என்பது கூட ஒவ்வொரு பிள்ளையிலும், பிள்ளைக்குப் பொறுப்பானவர்களிலும் தங்கியுள்ளது. இவர்களால் முடியாத பட்சத்திலேயே அரசின் தலையீடு அவசியப்படுகின்றது.

ஒருகணம் இது விடயமாக நான் சிறுவர்களுடன் பணியாற்றுபவன் என்ற வகையிலும் 03 விதமான இலக்குக் குழுக்களை மையமாக வைத்து ஒருசில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். முதலில் பெற்றோருக்கு ஒரு செய்தி பிள்ளைகள் பிறக்கும் போது சகல விடயத்தையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை. பிள்ளையின் இச்சையின்றிய செயல்களைத் தவிர ஏனைய சிந்தனைகள், செயல்கள், நடத்தைகள் அனைத்தும் தான் வாழும் வெளிச் சூழலில் இருந்து  கற்றுக் கொண்ட நடத்தையாகவே வெளிக் காட்டுகின்றது.

சில பெற்றோர் இது திருத்த முடியாதது, இது மாற்ற முடியாதது,  இது அறவே திருந்தாது என்று பல பாணிகளில் பிள்ளைகளைச் சினந்து கொள்வதையும் அதுவே இப்பிள்ளைகளை தொடர்ந்தும் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் மூல காரணமாகவும் வைத்து ஒரு கருத்தியலை (Ideology) உருவாக்கிக் கொள்வது வழமை.

ஒரு விடயம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோரிடமிருந்து பிள்ளைக்கு கடத்தப்படும் மரபணு ரீதியான இயல்புகள், இயல்பூக்கங்கள் சுமார்  25 வீதமானவையே இது விஞ்ஞானம் கூறும் உண்மை. மிகுதி 75 வீதமான பிள்ளையின் இயல்புகளும், இயல்பூக்கங்களும் (Instincs)  பிள்ளை தான் வாழும் சூழலில் இருந்தே கற்றுக் கொள்கின்றது. எனவேதான் பிள்ளையின் இயல்புகளுக்கு பரம்பரைப் காரணி ( Heridity )  மாத்திரமன்றி சூழல் காரணியும் செல்வாக்குச் செலுத்துகின்றது என விஞ்ஞானம் கூறுவதனை நாம் ஏற்றாக வேண்டியிருக்கின்றது. ஏனெனில் இயற்கை விஞ்ஞானத்தின் முடிவுகள் மாறுவதில்லை. அவை  முடிந்த  முடிவே.     எனவே, தான் வாழும் சூழலில் இருந்துதான் பிள்ளை தனக்குத் தேவையானவற்றையும். தேவையற்ற்வற்றையும் கூட கற்றுக் கொள்கின்றது என்பதனை பெற்றோர் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆகவே, எத்தனை பெற்றோர் இதனை விளங்கிக் கொண்டு தமது பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக (Role Model)  இருக்கின்றனர் என சற்று உளமார சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் பிள்ளையின் நடத்தை அரங்கு குடும்பம்தான் அதில் தான் காணும் கதாநாயகன், கதாநாயகி பாத்திரங்கள் பெற்றோர்தான் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

கற்றுக் கொண்ட நடத்தைகள் மாற்றக் கூடிய நடத்தைகளே என்ற உளவிலாளர்களதும், மானிடவியலாளர்களதும் ஆய்வு ரீதியான உண்மைகளுக்கு அமைவாக பிள்ளைகளது நடத்தையினை மாற்ற முடியும் என்பதனாலேயே சமூகமாயமாக்கப்படாத பிள்ளையினை மீள் சமூகமயமாக்க முடியும் (Resocialization) என்ற முடிவும் எட்டப்பட்டது.

மாற்ற முடியாதது என்று எதுவும் இல்லை எமக்கு  மாற்று வழிகள் தெரியாததனாலேயே பிள்ளைகள் பிரச்சனைகளுக்கு  உள்ளாகின்றனர்.

சரீர தண்டனை ஐரோப்பிய கல்வி முறையின் மூலம் அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து  இன்று வரை பிள்ளைகள் குழப்பம் செய்தால் சரீர ரீதியாக தண்டிப்பது வழமை காரணம் மாற்று வழி தெரியாததே.  மாற்ற முடியாதது என்று எதுவும் இல்லை எமக்குமாற்று வழிகள் தெரியாத தனாலேயே பிள்ளைகள் பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.

பிள்ளைககளின் குழப்பம் என்ற பெயரில் எம்மால் அடையாளம் காணப்படும் பிரச்சனைகள் முதலில் பிரச்சனைகள் அல்ல என்பதனை விளங்கிக் கொள்வதே இதற்கான முதல் மாற்று வழி. பிள்ளைகளின் ஒவ்வொரு பராயத்திலும் நடைபெறும் விருத்திச் செயற்பாடுகளை கற்க வேண்டும். இது இரண்டாவது மாற்றுவழி. அடுத்து பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் எதிர் மறையாகவல்ல ( Not negative reinforcement ) நேர்மீள வலியுறுத்தல் மூலமாகவே ( Posoitive Reinforcement ) இந்த நேர்மீள வலியுறுத்தல் தண்டனையினை வார்த்தையில் அணுகும் போது பிள்ளைக்கு சுவரில் இனிமேல் எழுதக் கூடாது என்பதற்குப் பதிலாக சுவரை சுத்தமாக வைத்திருப்போம் என்று கூறுவது பொருந்தும்.

இவ்வாறு செயல் சார்ந்தும் அணுக முடியும். பிள்ளையின் பிரச்சனைக்கான பின்னணியை அறிய வேண்டும். அறிவதன் மூலம் மாத்திரமே நேர்மீள வலியுறுத்தல் தண்டனை சாத்தியம். உதாரணமாக மாணவன் ஒருவன் பாடத்தில் கவனம் செலுத்தாததன் காரணமாக ஆசிரியரால்  உடனடியாக அடித்து தண்டிக்கப்படுகின்றான்.

பின்னர் இதற்கான காரணத்தை வினவும் போது அத்தினத்திற்கு முந்திய தினம் அவனது வீட்டில் பெற்றோருக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப முரண்பாடு அவனது நித்திரையினைக் குழப்பியிருந்தமை தெரிய வருகின்றது. இதற்கு தற்காலிக தீர்வாக ( Temporary Solution ) கருதப்படும் சரீர தண்டனை ( Corporal Punishmen ) சாத்தியமா என்பது குறித்து சிந்திப்பதை விட நீண்ட காலத் தீர்விற்காக ( Long term Solution ) திட்டமிடுவது உசிதமானது. எனவே இங்கு குறிப்பிடப்பட்ட பிரச்சனைக்கு மூல காரணம் பெற்றோரே என்பதனை உணர வேண்டும்.

பெற்றோர் தங்களது பிள்ளை பற்றி முழுமையாக அறிந்தவர்கள்  என்ற  வகையில் சில விடயங்கள் குறித்து அவதானமாக இருப்பதன் மூலம் பிள்ளைக்கு பாதிப்பு ஏற்படாமல் நிச்சயமாகத் தடுக்க முடியும். அத்துடன் எவ்வாறான பெற்றோர்களால் பிள்ளைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதனையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

 • மகிழ்ச்சியற்று கோபம் மற்றும் மன அழுத்தத்திற்கு உட்பட்டு வாழும் பெற்றோர்
 • பிள்ளைகளைத் தற்காலிகமாகப் பராமரிப்போர்
 • வெளிநாடுகளில் தொழில் செய்யும் தாய்மாரின் பிள்ளைகள்
 • பிள்ளையின் தாயினது பாலியல் துணைவர்
 • சட்டரீதியற்ற தத்துப் பெற்றோர்
 • மதுப்பழக்கத்திற்கு அடிமையான பெற்றோர்
 • நெருங்கிய குடும்ப உறவினர்கள்
 • வன்முறைக்குட்படும் குடும்பங்கள்களுடைய பெற்றோர்
 • சிறுவர்களாயிருந்த காலத்தில் இம்சிக்கப்பட்ட பெற்றோர்
 • பாதுகாப்பற்ற சூழலில் வாழும் குடும்பங்களில் உள்ள சிறுவர்கள்

இவ்வாறே பிள்ளைகளும் தங்களது உரிமைகள் மாத்திரமன்றி பொறுப்புக்கள், கடமைகள் குறித்து  கவனம் செலுத்துதல் வேண்டும். குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சிறுவர்கள் என்ற வரையறையுடன் அவர்களுக்கான உரிமைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தொழில்நுட்பம் மிகவும் அபிரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில் இவ்வுரிமைகள் குறித்து பிள்ளைகள் எவரும் அறியாமல் இல்லை. ஆனால் அதனை எவ்வளவு தூரம் தெளிவாக விளங்கியிருக்கின்றனர் என்பதுதான் கேள்விக்குறி  குறிப்பாக உரிமை மீறப்பட்டால் நாம்  சட்ட நடிவடிக்கை எடுக்கலாம் என்பதனை மட்டும் சட்டமோ உரிமையோ சொல்ல வரவில்லை. மாறாக உரிமை மீறலுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு நான் எந்தளவு பொறுப்புடையவானாக இருக்க வேண்டும் என்பதனை ஒவ்வொரு பிள்ளையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதனையும் கூறுகின்றது.

அறிவால் மட்டும் எதனையும் சாதித்து விட முடியாது என்பதனை பல அறிஞர்களும், மேதைகளும் எமக்கு உதாரண புருசர்களாக வாழ்ந்ததன் மூலமும், பலவிடயங்களைக் கற்றுத் தந்ததன் மூலமும் எடுத்துணர்த்தியுள்ளனர். அவற்றுக்கு அப்பால் திறனும், மனப்பான்மையும் மேம்பட வேண்டும் ஆயின் பிள்ளைகள் சிறுவர் பாதுகாப்பு பற்றிய அறிவையும், தங்களுக்கு உரித்தான உரிமையும் தெரிந்து கொள்வதுடன் பொறுப்புகள் அல்லது கடமைகள் குறித்து கவனம் செலுத்துவதன் மூலம் தங்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்.

அவ்வாறியின் பிள்ளைகளின் பொறுப்புக்கள் அவர்களது சிந்தனைகள், நடத்தைகள், செயற்பாடுகள் சார்ந்து உணரப்பட வேண்டும்.

“எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவதென்பதிழுக்கு” என்பது முதுழொழி. இதற்கிணங்க பிள்ளைகள் சிந்தித்தே செயலாற்ற வேண்டும் இந்த வகையில்

 • நான் எனக்குப் பொருத்தமானவாகளுடன் பழகுகின்றேனா?
 • நான் என்னுடன் பழகுவோருக்கு நல்ல நண்பராக இருக்கின்றேனா?
 • நான் எனது பெற்றோருடன் நெருக்கமான தொடர்பைப் பேணுகின்றேனா?
 • நான் தீங்கான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருக்கின்றேனா அல்லது துணை போகின்றேனா?
 • நான் இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றை சரியானவற்றுக்கு மட்டும் பயன்படுத்துகின்றேனா?
 • என்னை நான் சுய ஆய்வு செய்து கொள்கின்றேனா? எனது பொழுதை ஆக்கபூர்வமாகக் கழிக்கின்றேனா?
 • எனக்கென ஒதுக்கப்பட்ட பொறுப்புக் களை சரியாக செய்து முடிக்கின்றேனா ?

என எண்ணி செயற்படும்போது ஒவ்வொரு பிள்ளைக்குமான உரிமை தானாக கிடைப்பதுடன், உரிமைச்  சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டியும் ஏற்படாது. அடுத்தபடியாக பெற்றோர், பிள்ளைகள் இவர்களைத் தாண்டி பொறுப்பு வாய்ந்த ஒரு நிறுவனமாக அமைவது சமூகமாகும். பிள்ளைகள் ஆக்கபூர்மான விடயங்களை பெற்றுக் கொள்வதற்கும் அவர்கள் வாழும் சூழலில் நல்வாழ்வை ( Well being  ) வாழவுமான சந்தர்ப்பங்களை அவர்களது சமூகத்தில் இருந்தே பெரும்பாலும் எதிர்பார்க்கின்றனர்.

பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளின் மூலமாக நான் பிள்ளைகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட வெளிவருதிகள் ( Out puts  ) பல உள்ளன அவற்றுள் சில

பிள்ளைகள் கோருகின்றனர்

1.எங்களது கருத்துக்களையும் கேளுங்கள்

 1. எங்களைத் தனிமைப்படுத்தாதீர்கள்

3.எங்களைக் கொண்டு தீய காரியங்களைச் செய்யச் சொல்லாதீர்கள்

4.பிழையான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவிக்காதீர்கள்

5.எங்களை மட்டும் குற்றவாளியாகப்  பார்க்காதீர்கள்

போன்ற பல அபிப்பிராயங்கள் சிறுவர்களால் முன்மொழியப்பட்டுள்ளன. இவ்விடயங்கள் அனைத்தும் பிள்ளைகள் சமூகத்தில் கண்ட விளைபலன்களே. எனவே இவ்விடயங்களுக்குப் பொறுப்புச்  சொல்லக் கூடியவர்கள் சமூகத்தினரே. இந்த வகையில் எம்மாதிரியான தந்திரோபாயங்களையும், வேலைத்திட்டங்களையும் கொண்டு பிள்ளைகள் கோரும் இவ்விடயங்களை நிறைவு செய்வது என்பது குறித்து சமூகம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். இன்று அயலவனுக்கு ஏற்படும் துன்பம் மறுநாள் எனக்கு ஏற்படாது என்பதல்ல நியதி என்பதனையும் சமூகம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே எமது பிள்ளைகளைப் பராமரிப்திலும், காப்பதில் எமக்கு சுயநலமிருக்காததை எண்ணி மற்றவரின் பிள்ளைகளையும் சமூகம் ஒன்றிணைந்து காப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஒவ்வொருவரது பொறுப்பும் உணரப்படும் அதேவேளை நல்லதொரு சமுதாயம் உருவாக வழிவகை செய்யும் என்பது நிஜம்.

Leave a Reply