தகவல் தொழில்நுட்பம் உலோகத்தின் மூலப்பொருள்

477 Views

கி.மு. 3000 ஆண்டுகளிலிருந்தே தகவல்களை தேக்குதலும், மீட்டலும், கையாளுதலும், பரிமாறலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. தகவல் தொழில்நுட்பம் எனும் சொல், புத்தியல் காலப்பொருளில் 1958இல் ஆர்வார்டு என்னும் வணிக மீள்பார்வை என்ற கட்டுரையில் முதன் முதலில் தோன்றியது எனலாம்.

தகவல் தொழில்நுட்பம் (Information technology) என்பது, தகவல் அல்லது தரவுகளை கணினியைப் பயன்படுத்தி தேக்குதல், ஆராய்தல், மீட்டல், செலுத்துதல், கையாளல் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பமாகும். இங்கு தகவல் என்பது வழக்கமாகத் தொழில் வணிகம் அல்லது பிற நிறுவனம் சார்ந்ததாக அமையும். தகவல், தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் உட்பிரிவே தகவல் தொழில்நுட்பம் ஆகும். தகவல் இல்லையேல் வாழ்க்கை இல்லை. தகவல் பரிமாற்று ஊடகம் செயலற்றுப் போனால், மனித வாழ்க்கை நிலைகுத்தி போய்விடும் என்ற அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் நம் வாழ்வில் இணைந்துள்ளது.

மனிதன் தோன்றிய காலத்திலேயே தகவல் தொடர்பாடலும் தோன்றி விட்டது. ஆதி காலத்தில் மொழி காணப்படவில்லை. எனினும் அவர்கள், ஓவியங்கள் மூலமும், ஒலி, இசை, தீ என்பன மூலமும் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். அதாவது அவர்களின் எண்ணங்களை ஓவியம் மூலமாக வரைந்து வெளிப்படுத்திக் கொண்டார்கள். இதற்கு ஆதாரமாக உலகில்  பல இடங்களில் குகை ஓவியங்கள் கிடைத்துள்ளன. தென்னமெரிக்கர், பழங்கால சீனர்கள் புகைகளை உருவாக்கி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஒலி, தீ, இசை, சைகை என்பவற்றால் தகவல்களை பரிமாற்றிய மனிதர்கள் பின்னர் கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்பேடு போன்றவற்றின் மூலம் தகவல்களை பிறரிற்கு வெளிப்படுத்தினர்.

அதன் பின் தகவல் தொடர்பு அச்சடித்த காகிதங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள் என்று வளர்ந்தது. பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தபால், தந்தி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி என்று தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் தகவல்கள் உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டன. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்தில் புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டது.

இப்போது நாம் பயன்படுத்தும் தகவல் தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக Telegraph கண்டுபிடிப்பு காணப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் Telegraph தொழில்நுட்பமே மிக வேகமான தகவல் தொழில்நுட்பமாக இந்தியாவில் காணப்பட்டது. ஆரம்ப காலத்தில் உலகம் என்பது மிகப்பரந்துபட்டதொன்றாக காணப்பட்டது. இன்று தகவல் தொழில்நுட்பத்தின் விளைவாக உலகம் சிறு குடும்பமாக சுருங்கி விட்டது.

நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்ள செய்திகளையும், பத்திரிகைகளையும் பயன்படுத்தினர். ஆனால் தற்போது செய்திகளை பார்வையிட பத்திரிகைகளை எதிர்பார்த்து நிற்பதில்லை. உடனுக்குடன் இணையத்தினுள் பிரவேசித்து உலக நடப்புக்களை அறிந்து கொள்கின்றனர். இதற்குக் காரணம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாகும். இதன் மூலம் காலதாமதமும், ஏனைய வீண்விரயமும் தடுக்கப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மூலம் வாழ்க்கைத்தரம், வாழ்க்கை முறை என்பன மாறியுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இத்தகவல் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றது. அதாவது மாணவர்களது கல்வி நடவடிக்கைகளுக்கு வகுப்பறையில் மட்டுமல்லாது, எந்தவொரு இடத்திலும் எந்தவொரு நேரத்திலும் கல்வியைப் பெற்றுக் கொள்ள முடியும். அதாவது அறிவகம் (nanasala.lk ), e – தக்சலாவ, வலைப் பாடசாலை (www. edulanka.lk) விதுமங்பெத (www.vidumanpetha.com) போன்ற வலைத்தளங்களைப் பயன்படுத்தி கல்வியை மேம்படுத்த தகவல் தொழில்நுட்பம் உதவுகின்றது.

மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு காந்தப்பிரிவு விம்பமாக்கற் பொறிமூலம் (Magnetic resonance imaging/ MRI ) உடலின் உட்பகுதிகளை விபரமான ஒளிப்படங்களை பெறவும் மற்றும் மின் இதயவரையப் பொறி (Electro cardio gram /ECG) மூலம் இதயத்துடிப்பை அவதானிப்பதற்கும் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. இதய நோய் திரையிடற்பொறி,(Echo Cardio Graphy) மின்மூளை வரையியற்பொறி,(Electro Encepahlo Gram) குருதியில் குளுக்கோசின் அளவை சோதிக்கும் பொறி (Blood Sugar Glucose meter) எனும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விவசாயத்துறையும் தகவல் தொழில்நுட்பம் மூலம் முன்னேறிச் செல்கின்றது. அதாவது வானொலிச் சைகை அடையாளமிடல் உபகரணம் (Radio signal markers)மூலம் விலங்குகளை கணக்கிடல், அவை இருக்கும் பிரதேசத்தைக் கண்டறிதல் என்பவற்றிற்கு வானொலி சைகை அடையாளமிடல் உபகரணம் பயன்படும். தனது நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு விவசாயம் செய்த விவசாயிக்காக மிகவும் நவீன தொழில்நுட்பவியலைக் கொண்ட பல தன்னியக்கப் பொறித் தொகுதிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளின் பணிகள் எளிதாதல் மாத்திரமின்றி, மிகவும் உயர்ந்த நிலைமையில் உள்ள பயிர்களைச் சந்தைக்கு விடுவிப்பதற்கான ஆற்றலும் விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளது.

தகவல் தொழில்நுட்பவியல் மக்களின் பணிகளை இலகுவாக்குதல் மாத்திரமல்ல, எங்கள் வாழ்வில் ஓர் சிறந்த நண்பனாக மாறியுள்ளது. நாம் நண்பனை தகாத விதத்தில் பயன்படுத்தினால், எங்களுக்கு மாத்திரமல்ல முழுச் சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம்.

அதாவது சமூக வலைப்பின்னலூடாக தகாத நட்பு ஏற்படலாம். இணையத்தில் பொருத்தமற்ற வலைப் பக்கங்களுடன் இணைவதால், ஒருவரிற்கு உள நோய்கள் ஏற்படுவதோடு அவரிற்கும் சமூகத்திற்கும் பாதகம் ஏற்படுகின்றது. மற்றும் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்விற்கு தீங்கு பயக்கும் படங்களையும், ஒளியுருக்களையும் உற்பத்தி செய்தல். இத்தகவல் தொழில்நுட்பத்தால் Hackers வேலைப்பாடு அதிகரித்துள்ளது. இது இன்றைய உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இத்தகைய காரணங்களின் விளைவாக தகவல் தொழில்நுட்பம் பாதகங்களை ஏற்படுத்துகின்றது என்பது பலரின் அபிப்பிராயமாகும். எனினும் அதன் மூலம் அமைக்கப்பட்ட தொகுதிகள் மனிதனின் பல பணிகளை எளிதாக்குகின்றன. எனவேதான் தற்கால உலகிற்கு தகவல் தொழல்நுட்ப வளர்ச்சி இன்றியமையாத ஒன்றாகக் காணப்படும் அதேவேளை, side effect உம் தவிர்க்க முடியாததாக உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி அவதானமாக பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம்.

-உ.டனன்சியா-

Leave a Reply