“டீக்ரே பிராந்தியத் தலைநகரை இராணுவம் பிடித்துவிட்டது, இனி போர் இல்லை” – பிரதமர் அறிவிப்பு

டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லியைப் பிடித்ததோடு இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக பிரதமர் அபிய் அகமது  அறிவித்துள்ளார்.

2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், இராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது.

அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அமைத்தார். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டிபிஎல்எஃப் எனப்படும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது.

அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதியது.

டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு அளவை மீறிப் போய்விட்டதாகவும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அபிய் அகமது. ஆனால், அந்த ராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி.

இதையடுத்து பிராந்தியத்தின் ஆளும் கட்சியான டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு (டீ.ம.வி.மு.) எதிரான தாக்குதலை தீவிரப்படுத்திய மத்திய அரசுப் படைகள். இந்த நடவடிக்கையில் மத்திய அரசின் படைகளால், எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது நடத்திவரும் தாக்குதலில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அவர் “‘டீக்ரே பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கை நிறைவடைந்ததையும், நிறுத்தப்படுவதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய கவனத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய அவர், டீ.ம.வி.மு. கைது செய்த சிப்பாய்கள் விடுவிக்கப்பட்டதாகவும், விமான நிலையமும், பிராந்திய அலுவலகங்களும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அறிவித்தார்.

அழிக்கப்பட்டவற்றை மறுகட்டுமானம் செய்வதும், போரினால் வெளியேறியவர்களை மீண்டும் திரும்பிக் கொண்டுவருவதும்தான் தற்போது முன்னால் இருக்கும் பணி என்று”   தெரிவித்துள்ளார்.