ஜோ பைடனும் மனித உரிமைகளும்: ஒபாமாவின் அணுகுமுறை தொடரும்

446 Views

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த கடந்த நான்கு ஆண்டுகளில் பல முக்கியமான பன்னாட்டு மனித உரிமை ஒப்பந்தங்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் எந்தவித தயக்கமும் இன்றி வெளியேறினார்.

டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் 2015 இல் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றியது மட்டுமன்றி, உலக சுகாதார தாபனத்திலிருந்தும் தனது நாட்டை வெளியே எடுத்தார்.

இவ்வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்று தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தவல்ல ஒரு நிறைவேற்றுக் கட்டளையைப் பிறப்பித்தது மட்டுமன்றி, அதன் முதன்மை வழக்குத் தொடருநரான பற்றூ பென்சூடா (Fatou Bensouda) மீதும் அவரது உயர்மட்ட உதவியாளர் ஒருவர் மீதும் தடைகளை விதித்தார்.

Fatou Bensouda the chief prosecutor of the International Criminal Court attends the trial of Malian Islamist militant Al Hassan Ag Abdoul Aziz Ag Mohamed Ag Mahmoud at the ICC in The Hague ஜோ பைடனும் மனித உரிமைகளும்: ஒபாமாவின் அணுகுமுறை தொடரும்

பல நிபுணர்களை அல்ஜசீரா தொடர்புகொண்ட போது, அவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில், 2021 ஜனவரியில் ஜோ பைடன் சத்தியப்பிரமாணம் எடுத்தவுடன், ட்ரம்பின் நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட பல முடிவுகளை அவசரமாக மாற்றியமைப்பார் எனத் தெரிவித்தனர்.

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் சேருவதற்கும், உலக சுகாதார தாபனத்தில் மீண்டும் இணைந்து கொள்ளவும் வழிவகுக்கும் நிறைவேற்றுக் கட்டளைகளில், தான் ஒப்பமிடுவேன் என்று பைடன் தனது முதல் நாளிலேயே தெரிவித்திருக்கிறார். மேலும் ஈரான், லிபியா, சோமாலியா, போன்ற முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள் மேல் விதிக்கப்பட்டிருக்கின்ற பயணத்தடையையும் மாற்றியமைப்பதாகவும் கூறியிருக்கிறார்.

‘முதலில் அமெரிக்கா’ என்ற டொனால்ட் ட்ரம்பின் கொள்கை பலதரப்பு உறவுத்தன்மைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட்டது (multilateralism). ரெம்பிள் பல்கலைக்கழகத்தின் (Temple University) சட்டப் பேராசிரியரான மெக் டி குஸ்மானின் (Meg de Guzman) கருத்துப்படி, எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகின்ற ட்ரம்பின் உலக கண்ணோக்கு, பைடனால் உடனடியாகவே மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் காரணமாக மனித உரிமைகள் தொடர்பாக பல சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

வெளியுறவுக் கொள்கைக்கான இலக்குகள்   

அமெரிக்காவின் முன்னைய அதிபரான பராக் ஒபாமா (Barrack Obama) மனித உரிமைகள் தொடர்பாகக் கொண்டிருந்த கொள்கைகளையே பைடனின் மனித உரிமைகள் தொடர்பான அணுகுமுறை பெரும்பாலும் கொண்டிருக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பல்தரப்பு தன்மை வாய்ந்ததும், மனித உரிமைகள் மற்றும் சனநாயகக் கோட்பாடுகளுக்கு அதிக ஆதரவை வழங்கும் தன்மை வாய்ந்ததுமான ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளையே, பைடனின் தலைமைத்துவ அணுகுமுறை பெரும்பாலும் கொண்டிருக்கும் என்று அமெரிக்காவின் சென் லூயிஸ் நகரத்திலுள்ள வோஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுச் சட்டப் பேராசிரியராக இருக்கின்ற லைலா சதாத் (Leila Sadat) தெரிவித்தார். அந்த வகையில் ஒபாமா நிர்வாகத்தின் மூன்றாம் கட்டம் போல பைடனின் நிர்வாகம் அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இராஜாங்கத் திணைக்களத்தை (State Department) எண்ணிக்கையிலும், தரத்திலும் நிச்சயமாக அவர் மீளக் கட்டியெழுப்புவார் என்றார் அவர்.

ICC ஜோ பைடனும் மனித உரிமைகளும்: ஒபாமாவின் அணுகுமுறை தொடரும்

அமெரிக்க அரசின் நீதித் திணைக்களத்தில் ஆள்குறைப்புச் செய்யப்பட்ட மனித உரிமைப் பகுதியில் மீண்டும் ஆளணியை அதிகரிக்க வேண்டிய தேவை பைடனுக்கு இருக்கிறது என்று டி குஸ்மான் தெரிவித்தார். ஒபாமாவினால் ஏற்படுத்தப்பட்ட ‘நிறுவனங்களுக்கிடையேயான அத்துமீறல்களைத் தவிர்க்கின்ற கட்டமைப்பைக்கும்’ (Inter-agency Atrocity Prevention Framework) மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டிய தேவை பைடனுக்கு இருப்பதாகவும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் நிதியுதவி செய்யப்படாமல், நிறுத்தப்பட்ட மற்றும் நிதியுதவிக்குறைப்புச் செய்யப்பட்ட பன்னாட்டுக் கட்டமைப்புகள் பலவற்றுக்கு மீண்டும் நிதியுதவி அளிக்கப்படுவது அவசியமாகும். UNRWA என அழைக்கப்படுகின்ற பாலஸ்தீன அகதிகள்  அமைப்புக்கு அளிக்கப்படும் நிதியை 2018 இல் ட்ரம்ப் அரைவாசியாகக் குறைத்திருந்தார்.

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீள இணைவதைப் போன்றே மனித உரிமைகள் ஆணையத்துடனும் அமெரிக்கா இணையும் என்றும், இன்னும் அமெரிக்கா விலகிய மேலும் பல ஆயுதக்குறைப்பு ஒப்பந்தங்களிலும் அது மீண்டும் இணையும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் கொப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் (Copenhagen University) பன்னாட்டுச் சட்டப் பேராசிரியரான கெவின் ஜோண் ஹெலர் (Kevin Jon Heller) தெரிவித்தார்.

முப்பத்தைந்து நாடுகளை உள்ளடக்கிய, ‘திறந்த வான ஒப்பந்தத்திலிருந்து’ (Open Skies treaty) வெளியேறியதனூடாக, மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதில் தனக்கு இருக்கின்ற வெறுப்பை ட்ரம்ப் வெளிப்படுத்தினார். ஆயுதங்கள் அற்ற வேவு விமானங்கள் உறுப்பு நாடுகளின் மேலாகப் பறப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. ஒபாமா காலத்தில் பயன்படுத்தக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்த மனிதர்களுக்கெதிரான நிலக்கண்ணிவெடிகளின் (anti-personnel landmines) மேல் இருந்த தடையை கடந்த பெப்ரவரி மாதம் ட்ரம்ப் நீக்கியிருந்தார்.

சிரிய உள்நாட்டுப் போரின் போது இழைக்கப்பட்ட அத்துமீறல்களுக்கான பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் வாய்ப்பு பைடனுக்கு இருப்பதாக குஸ்மான் கூறுகிறார். சிரியாவில் பொறுப்புக்கூறலை ஆதரிக்கும் போராட்டத்தில் பைடன் விரைவான நடவடிக்கைகளை எடுத்து தடைகளை விதிக்கலாம் என்பது மட்டுமன்றி, சிரியாவில் குற்றமிழைத்தவர்கள் மேல் வழக்குத் தொடர்வதற்கு உதவக்கூடிய சுதந்திரமான பக்கச்சார்பற்ற பன்னாட்டுப் பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM) உருவாக்குவதற்குத் தனது ஆதரவையும் வழங்கலாம் என்றும் அவர் அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார்.

மனித உரிமைகளை அவ்வப்போது மீறுகின்ற சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு ஆயுத விற்பனைகளைத் தடைசெய்வதும், டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளின் காரணமாக பிரிக்கப்பட்ட குடும்பங்களை மீள இணைப்பதற்கான வளங்களை வழங்குவதும் டி குஸ்மானைப் பொறுத்தவரையில் பைடன் மேற்கொள்ளக்கூடிய சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளாகும்.

 “மனித உரிமைகளை மீறுகின்ற நாடுகளான இஸ்ரேல், சவூதி அரேபியா போன்ற நாடுகளுடன் உறுதியான கொள்கையை பைடன் கடைப்பிடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பேச்சுக்கு அப்பால் நடைமுறையில் அவர் ஏதாவது செய்வாரா என்பது கேள்விக்குறியாகும். சவூதி அரேபியாவுக்கான ஆயுத விற்பனையை அவர் தடை செய்வார் என்று நான் நினைக்கவில்லை” என்று கொப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹெலர் கூறுகிறார்.

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம்

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் மீது டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட நிறைவேற்றுக்கட்டளையை (executive order) மீளப்பெறுவதே மேற்படி நீதிமன்றம் தொடர்பான உறவை மேம்படுத்துவதில் பைடனுக்கு இருக்கின்ற முதன்மை முன்னுரிமையாகும்.

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் தொடர்பாக ட்ரம்ப் இரண்டு வகையான தடைகளை விதித்திருக்கிறார். பென்சூடா (Bensouda) போன்ற வரையறுக்கப்பட்ட தனிநபர்கள் மீது முழுமையான தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள யாராவது குறிக்கப்பட்ட எவருக்காவது பொருள் உதவி செய்யும் பட்சத்தில் அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக பொருண்மியத் தடைகளும் குற்றவியல் தடைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர்கள் எவருமே பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கவோ ஊக்குவிக்கவோ முடியாது. “என்னைப் பொறுத்தவரையில் நான் செய்ய வேண்டிய வேலையை என்னால் செய்ய முடியாது என்பதே இதன் பொருளாகும்.” என்று குஸ்மான் தெரிவித்தார்.

UNHRC ஜோ பைடனும் மனித உரிமைகளும்: ஒபாமாவின் அணுகுமுறை தொடரும்

“இதன் அபத்தமான தன்மையை சற்று சிந்தித்துப் பாருங்கள், நாடளாவிய பேரிடர் காலங்களில் விதிக்கப்பட வேண்டிய தடைகள் இப்போது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துக்காக பணியாற்றுபவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிறது. தடைகளை விதிப்பது தொடர்பான ஒரு துஸ்பிரயோகமாகவே இதனை நான் பார்க்கிறேன்” என்று குஸ்மான் தெரிவித்தார்.

பைடன் நிர்வாகத்தில் அமெரிக்கா பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைந்து கொள்ளுமா என்று கேட்டதற்கு, ஒபாமா காலத்தில் அமெரிக்காவுக்கும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துக்கும் இடையே எப்படிப்பட்ட உறவு இருந்ததோ அப்படிப்பட்ட உறவே, பைடன் நிர்வாகத்திலும் இருக்கும் என்று ஹெலர் கூறினார். பைடனின் நிர்வாகம் பன்னாட்டு நீதிமன்றத்துடன் இணைய மாட்டாது. மேற்படி நீதிமன்றத்துடன் இணைவது இல்லை என்பது அமெரிக்காவில் இரண்டு கட்சிகளும் கூட்டாக எடுத்த நிலைப்பாடு ஆகும். அதுமட்டுமன்றி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீனப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையிலும் பைடன் நிர்வாகம் இணைந்து செயற்பட மாட்டாது.

பன்னாட்டு நீதிமன்றத்துடன் அமெரிக்கா இணைந்து கொள்ள மாட்டாது என்றே இதே கேள்விக்கு, வோஷிங்டன் மற்றும் லீ ஆகிய பல்கலைக்கழகங்களில் சட்டப் பேராசிரியராகக் கடமையாற்றுகின்ற மார்க் ட்ரம்பிள் (Mark Drumbl) பதிலளிக்கிறார். “பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துடன் இணையும் செயற்பாடு நடைபெறாது என்ற போதிலும், மேற்படி நீதிமன்றத்துக்கு வழங்கப்படும் சத்தம் சந்தடியற்ற பக்கவாட்டு ஆதரவு, சான்றுகளைத் தேடி எடுத்து, நிபுணத்துவத்தைக் கட்டியெழுப்பி, அரசியற்கலப்பற்ற வழிவகைகளில் செயற்படுவதற்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அது பெருமளவில் உதவியாக அமையும்.”  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சதாத்தைப் பொறுத்தவரையில் அவர் தனது எதிர்பார்ப்புகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். “பைடனைப் பொறுத்தவரையில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிரான இந்தப் பரப்புரையை மாற்றுவார் என்பதோடு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்படி நீதிமன்றத்துடன் அவர் இணைந்து பணியாற்றுவார்” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

(தமிழில்- ஜெயந்திரன்)

நன்றி: அல்ஜசீரா

Leave a Reply