ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. டோட்முண்டில் தமிழர்களின் கடைகள் அமைந்துள்ள றைனீச ஸ்ராஸவிற்கு அண்டியுள்ள இரண்டு வீதிகள் மறிக்கப்பட்டு, அதில் கடைகளும் அமைக்கப்பட்டு, மேடையில் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
வீதிகள் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. குதிரையாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் சினிமாப் பாடல்கள், தாயகப் பாடல்கள், மேற்கத்திய நடனங்கள், பரதநாட்டியம் போன்றவைகளும் இடம்பெற்றன.
உணவகங்களில் தமிழர்களின் பல்சுவை உணவுகள் விற்பனையாகின. தமிழர்கள் மட்டுமன்றி பல வெள்ளையின மக்களும் வந்து நிகழ்வுகளைப் பார்வையிட்டும் உணவுகளை உண்டும் மகிழ்ந்தார்கள்.