மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலா உட்பட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி தலைமையிலான தூதுக்குழுவினர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துவருகின்றனர்.
இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்த தூதுக்குழுவினர் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில் அவுஸ்ரேலியாவின் தெற்கு மற்றும் மேற்கு ஆசியப்பகுதிக்கான உதவி செயலாளர் டாக்டர் லஸியன் ஸரீகம், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான செயலாளர் டோம் டேவிஸ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்றிட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மிகவும் குறைவான நிலையில் இருப்பது குறித்து மாநகர முதல்வரினால் தூதுவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அவுஸ்ரேலிய முதலீட்டாளர்களின் வருகையின் அவசியம் குறித்தும் தூதுவரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் சில அமைச்சுகள் மூலம் ஒதுக்கப்படும் நிதியொதுக்கீடுகளில் மட்டக்களப்பு மாநகரசபை புறக்கணிக்கப்படுவது குறித்தும்,இனவேறுபாடுகள் பார்க்கப்படுவது குறித்தும் தூதுவரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பிற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.