ஜெர்மனி சென்று மருத்துவராகி சாதனை படைத்த உமேஸ்வரன்

1,013 Views

இலங்கை  உள்நாட்டுப் போரின் போது உயிர் தப்பி வந்து ஜேர்மனியில் கல்வி கற்று இன்று அந்நாட்டின் புகழ்மிக்க ஒரு மருத்துவராக விளங்கும் இதயமாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் அருணகிரிநாதன் உமேஸ்வரனின் வாழ்க்கைப் பயணத்தை சற்று நோக்குவோம்.

ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில்  இரண்டாவது குழந்தையான இவர், குடும்பத்தின் முதல் ஆண்குழந்தையாவார். இவருக்கு ஒரு அக்கா, இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி என பெரிய குடும்பமாக யாழ்ப்பாணம் அருகிலுள்ள புத்தூரில் வாழ்ந்து வந்தார்.

இறுதி யுத்த காலத்தில் இவருக்கு எட்டு வயதிருக்கும். அப்போது அவருக்கு உள்நாட்டுப் போரின் தீவிரம் பற்றி தெரிந்திருக்கவில்லை. அப்போது இவர் இறந்த ஒருவரின் உடலை முதன்முதலாக பார்த்திருந்தார்.

அவரது வீட்டருகே நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவரை பார்ப்பதற்காக   சென்றிருந்தபோது,   அவரின் கண்களை அம்மா கையால் மூடிக்கொண்டார். ஆனால், எப்படியோ கண்ணை கொஞ்சம் திறந்து படுகாயங்களுடன் உயிரிழந்திருந்த அந்த நபரை பார்த்து விட்டார்.

Uma 2 ஜெர்மனி சென்று மருத்துவராகி சாதனை படைத்த உமேஸ்வரன்அன்றைய தினம் முதல் இன்றுவரை அந்த காட்சிகள் மனதில் ஓடும் போதெல்லாம் உடல் முழுவதும் வியர்த்து, பயம் ஏற்படுவதாக,  உள்நாட்டுப் போர் பற்றி   உமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

போரின்போது சிறிலங்கா  ராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களை தாங்கள் முதலை என்று அழைத்ததாக கூறும் உமேஸ்வரன், தனக்கு சுமார் பத்து வயதிருக்கும்போது, தங்களது குடியிருப்பு பகுதிகளை சுற்றி வளைத்த ராணுவம் முதலைகளை (ஹெலிகாப்டர்களை) கொண்டு குண்டு மழை பொழிந்ததாக கூறுகிறார்.

அந்த வேளையில் தனது தாயார், தங்களை வீட்டின் முன் இருந்த மரத்தின் கீழ் தனித்தனியாக உட்கார வைத்ததாக தெரிவித்த அவர்   . அப்போது அந்த செயல் தனக்கு கோபத்தை மூட்டியதாகவும் ஆனால் தற்போது அதன் காரணத்தை தான் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

போர் தீவிரமாக நடைபெற்ற போது தனது மூத்த சகோதரி சிறுநீரகம் செயலிழந்ததால், சிகிச்சை அளிக்க வசதியில்லாத காரணத்தினால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார். அப்போது தனது தாயார் தங்கள் வீட்டில் ஒரு மருத்துவர் இருந்திருந்தால் தனது சகோதரி உயிரிழந்திருக்க மாட்டார் என்று கூறியதே தனது இந்த மருத்துவர் பதவியில் தான் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் என்றும் கூறுகிறார்.

போரின் காரணமாக பாடசாலைக் கல்வியை சீராக பெற முடியாத நிலையில் ஆறாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்தி, மண்ணெண்ணை விற்று தனது குடும்பத்தினருக்கு உதவியதாக  கூறும் அவர், மேலும் கூறுகையில், இந்த வேளையில் தான் தன்னை ஜேர்மனிக்கு அனுப்புவதற்கு தனது குடும்பத்தினர் திட்டமிட்டதாகக் கூறுகின்றார்.

Uma 4 ஜெர்மனி சென்று மருத்துவராகி சாதனை படைத்த உமேஸ்வரன்ஜேர்மனி செல்வதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து தானும் தனது தாயாரும் மிகவும் கடினமான பயணத்தினை மேற்கொண்டு, எட்டு நாட்களின் பின்னர் கொழும்பிற்கு வந்து சேர்ந்ததாகவும், அங்கு தங்குவதற்கு வீடு எதுவும் இல்லாததால் வாகனத் தரிப்பிடத்தில் தங்கி தனது கடவுச்சீட்டு ஒழுங்குகளை மேற்கொண்டதாகவும், இது பற்றி ஜேர்மனியில் இருக்கும் தனது தாய் மாமனிடம் பேசி முழு வேலைகளையும் முடிப்பதற்கு ஆறு மாதங்களாகியதாகவும் தெரிவித்தார்.

குறித்த நாள் அன்று காலையில் தன்னை எழுப்பிய தனது தாயார், தான் தனியாகவே ஜேர்மனி செல்வதாக தனக்கு தெரிவித்த போது, தான் அழுது விட்டதாகக் கூறினார். அப்போது ”நீ நன்றாகப் படித்து, ஒரு டாக்டராக வேண்டும் என்றும், இரகசியங்களை வெளியிடக் கூடாது, குடிப்பழக்கத்தை மேற்கொள்ளக் கூடாது என்றும் கூறியவை தற்போதும் தனது நினைவில் உள்ளதாக தெரிவிக்கின்றார்.

புறப்பட்ட நாளிலிருந்து ஜேர்மனி வந்து சேர்வதற்கு தனக்கு ஆறு மாதங்கள் சென்றதாக தெரிவித்த அவர், பல நாடுகளில் தங்கியிருந்து பல கஸ்டங்களை அனுபவித்ததாகவும், இருவேளைகளில் மட்டுமே உணவு உண்ண முடிந்ததாகவும், இவ்வேளையில் தனது குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற தகவலைக்கூட தன்னால் பெறமுடியவில்லை என்றும், இந்நிலையிலேயே இறுதியில் ஜேர்மனியின் பிராங்பேட் நகரை சென்றடைந்ததாகவும் கூறினார்.

.ஜேர்மனிக்குள் வந்த நேரம் தான் நித்திரையாகி விட்டதாகவும், விழித்த போது ஜேர்மனிய காவல்துறை அதிகாரி ஒருவரும், மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் தன்னுடன் இருந்ததாகவும்,  நாட்டிலுள்ள பிரச்சினை காரணமாக அந்தப் படையினரை பார்த்ததும் தனக்கு பயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் தன்னை நன்றாக கவனித்ததாகவும் தெரிவித்தார். அவர்களிடம் தனது நாட்டில் தான் அனுபவித்த சம்பவங்கள் பற்றி தெரிவித்த போது, அவர்கள் தனக்கு சொக்கிளேற் ஒன்றை கொடுத்ததாகவும் தெரிவித்தார். தனது மாமாவின் தொலைபேசியைப் பெற்று, ஆவணங்களை சரிபார்த்த பின்னர், தன்னை தனது மாமனாருடன் அவர்கள் அனுப்பி வைத்ததாக கூறினார்.

மொழி தெரியாத நாட்டில் ஆறுமாதங்கள் மொழிப் பயிற்சி பெற்ற பின் நேரடியாக தான் 7ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டதாக கூறுகின்றார்.

. ஏழாம் வகுப்பு முதல் ஜெர்மன் மொழி மட்டுமின்றி, அதன் மக்கள், வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள், உணவு முறை போன்றவற்றை படிப்படியாக கற்றுக்கொண்டு வந்த உமேஸ்வரனுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும்போது அவரது வாழ்வின் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று நடந்ததாக கூறுகிறார்.

9ஆம் வகுப்பு படிக்கும்போது ஜெர்மன் மொழியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உரையாட கற்றுக்கொண்ட சமயத்தில், இலங்கையில் ஆறாம் வகுப்பு வரை படித்த போது, மாணவ தலைவனாக செயல்பட்டதை போன்று, இங்கேயும் இருக்க விரும்புவதாக  தெரிவித்த போது, வகுப்பின் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமின்றி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தனது ஒட்டுமொத்த பள்ளியின் தலைவனாகவும் விளங்கியதாக கூறுகின்றார்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பில் கல்வி கற்கும் போது, ஜேர்மனியை விட்டு வெளியேற வேண்டும் என்ற தகவல் தனக்கு தரப்பட்டதாகவும், இதனை தாங்க முடியாது தான் ஒருதடவை தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவிக்கும் இவர், தனது தாயார் பட்ட கஸ்டத்தை நினைத்து, தன்னை தேற்றிக் கொண்டு மறுநாள் பாடசாலை சென்று விபரத்தினை தன் ஆசிரியர், தனது நண்பர்களுக்கு தெரிவிக்க, அவர்கள் பணம் திரட்டி அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த போது, இறுதியில் கல்வி முடியும் வரை தான் ஜேர்மனியில் தங்கியிருக்க தனக்கு அனுமதியளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ஹம்பர்க் நகர மாணவ தலைவர்கள் குழுவில் ஒருவனான தன்னை, அம்மாகாணத்தின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, தன் வாழ்க்கை பயணத்தை விளக்கியதுடன்,தான் ஜெர்மனிலேயே இருப்பதற்கான அனுமதியை அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியதாகவும்,  தனது பள்ளி வாழ்க்கையின் முக்கிய தருணங்களை உமேஸ்வரன் விளக்கினார்

ஹம்பர்க் மாகாண நாடாளுமன்றத்தில் உமேஸ்வரனது உரையை கேட்டவர்கள், அவரை தொடர்ந்து ஜெர்மனிலேயே தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் ஒருபகுதியாக, பள்ளிப்படிப்பை முடித்த அவரது கனவான மருத்துவத்தில் சேர்ப்பதற்கு உதவியது மட்டுமின்றி, அவரை தற்காலிகமாக டென்மார்க் அனுப்பி, அங்கிருந்து பல்கலைக்கழக படிப்பை படிப்பதற்காக மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்க வைத்து, அவரை மீண்டும் ஜெர்மனிக்கு வரவழைப்பது வரையிலான பல்வேறு உதவிகளை அவரின் ஆசிரியர் ஒருவர் தானே முன்னின்று செய்ததாகவும் அவர் கூறுகிறார்.

1999ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டு, பகுதி நேரமாக வேலை செய்ததாகவும், இதனால் ஆறாண்டுகளில் முடிக்க வேண்டிய படிப்பை தான் எட்டாண்டுகளில் முடித்ததாகவும், அதன் பிறகு, இருதய அறுவை சிகிச்சை நிபுணருக்கான பயிற்சியை கடந்த பதினோரு ஆண்டுகளாக மேற்கொண்டு வந்ததாகவும்,

ஜெர்மனி அதிபரின் பாராட்டு

இலங்கை உள்நாட்டுப் போர் முதல் ஜெர்மனியின் புலம்பெயர்ந்தவர்கள் சமுதாயத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாளராக உயர்ந்தது வரையிலான தனது வாழ்க்கை பயணத்தை அடிப்படையாக வைத்து, உமேஸ்வரன் இதுவரை இரண்டு புத்தகங்களை ஜெர்மானிய மொழியில் எழுதியுள்ளார்.

“மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற எனது புத்தகங்கள் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தான் பேசியதை கேட்ட ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சர், அந்நாட்டு அதிபர் தலைமையில் நடைபெறும் அகதிகள் தொடர்பான நிகழ்ச்சியில் தன்னை சிறப்புரை வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி, சென்ற ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான விழாவில், ”நான் பார்ப்பதற்குதான் வேறொரு நாட்டை சேர்ந்தனாக தெரிகிறேன்; ஆனால், உள்ளுக்குள்ளே நான் ஜெர்மானியன்; அது என்னுடன் பழகினால்தான் தெரியும்” என்ற பொருளை உதாரணத்துடன் விளக்கிய போது, அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் தன்னிடம் பேசிய ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல், தன்னை வெகுவாக பாராட்டியதாகவும் கூறினார்.

 

தனது குடும்பத்தினரை நல்ல நிலைக்குக் கொண்டு வந்து, அவர்கள் இப்போது அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வசிப்பதாகவும் தெரிவித்தார். தான் வெளிநாடு வந்து 15 ஆண்டுகளின் பின்னர் குடும்ப உறவினர்களை 2005இல் தான் லண்டனில் சந்தித்ததாகக் கூறினார்.

தந்தையார் காலமாகி விட்டதாகவும், தங்கள் சகோதரர்கள் வெவ்வேறு நாடுகளில் வசித்த போதும், தனது தாயார் இப்போதும் சொந்த மண்ணில் இருப்பதாகவும் கூறுகின்றார்.

கடைசியாக, தனது குடும்பம் சிதறுண்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, உறுப்புகளை இழந்து, லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் நீங்கா வடுவை ஏற்படுத்திய இலங்கை உள்நாட்டுப் போருக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், அதுவே மக்களுக்கு நீதியை பெற்றுத்தரும் ஒரே வழியென்றும் உமேஸ்வரன் கூறுகிறார்.

Leave a Reply