ஜி -20 மாநாடு ஒரு பார்வை

493 Views

இம்முறை ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் ஜி-20 மாநாடு நடந்தது. இந்த ஜி- 20 மாநாடு என்றால் என்ன என்பதை விரிவாக பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற ஜி 8 நாடுகளும், ஆர்ஜென்டீனா, அவுஸ்திரேலியா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, ரஸ்யா, சவுதி அரேபியா, தென்னாபிரிக்கா, தென் கொரியா, துருக்கி ஆகிய 12 வளரும் நாடுகள் சேர்ந்து மொத்தம் 20 நாடுகள் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

உலகின் உயர்ந்த தரத்திலிருக்கும் 20 நாடுகளின் சங்கமம் தான் இந்த G 20. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஜி 20 நாடுகளும் சந்தித்துக் கொள்வார்கள். இந்த 20 நாடுகளின் பொருளாதாரம் மொத்த உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கு சமனானதாக இருக்கும்.  உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 65 சதவீத மக்கள் இந்த 20 நாட்டைச் சேர்ந்தவர்கள்.

ஒவ்வொரு டிசம்பர் மாதத்தில் ஒரு நாடு தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்த தலைவர் நாடு தான், அடுத்த ஆண்டுக்கான அனைத்து ஜி 20 சந்திப்புக்களை நடத்த வேண்டும். இந்த தலைவர் நாடு நினைத்தால் ஜி 20இல் உறுப்பினராக இல்லாத நாடுகளைக்கூட விருந்தாளிகளாக அழைக்கலாம். உதாரணமாக எல்லா ஜி 20 மாநாட்டிலும் ஸ்பெயின் அழைக்கப்படுவதை சொல்லலாம்.

முதல் ஜி 20 மாநாடு ஜேர்மனியின் பெர்லின் நகரில் 1999ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஜி 20 மாநாடு ஒரு ஜி 8 நாடுகளின் விரிவாக்கம் என்றுகூட சொல்லலாம் உலகின் வளர்ந்த பணக்கார நாடுகள், உலகின் வளரும் உயர் பொருளாதாரம் கொண்டு நாடுகளான சீனா, இந்தியா பிரேசில் போன்ற நாடுகளையும் சேர்த்து உருவாக்கியது தான் இந்த ஜி 20 மாநாடு.

தொடக்கத்தில் இந்த ஜி 20 மாநாடுகளில் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் நாட்டின் மத்திய வங்கித் தலைவர்கள் தான் சந்தித்தார்கள். ஆனால் 2008 பொருளாதார சரிவுக்குப் பின் ஜி 20 உறுப்பு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் என அனைத்து பெரிய தலக் கட்டுகளும் சேர்ந்து சந்திக்கத் தொடங்கினார்கள்.

எல்லா ஜி 20 உறுப்பு நாடுகளும் தங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் நிதி சார்ந்த விடயங்களைப் பேசுவார்களாம். அதோடு உறுப்பு நாடுகள் கொண்டு வரும் பெரிய திட்டங்களுக்கு மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவையும் கேட்பார்களாம். இந்த ஆண்டில் தீப்பற்றி எரியும் வர்த்தகப் போர், காலநிலை மாற்றங்கள், ஈரானுடனான உறவு போன்றவைகள் விவாதிக்கும் முக்கிய விடயமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக உலகப் பொருளாதாரமும் முக்கிய விடயமாக இருக்கும்.

2009ஆம் ஆண்டு ஜி 20 மாநாட்டில், ஐந்து லட்சம் கோடி டொலரை பணத்தை உலக பொருளாதாரத்தில் புழக்கத்தில் விடப் போவதாக ஒரு பெரிய முடிவு எடுத்தார்கள். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உலகப் பொருளாதாரம் 2008 சரிவில் இருந்து மீண்டு வந்தது.

உலகின் பெரும்பாலான நாடுகள் இதில் இல்லை என்பது தான் வருத்தம். வெறும் 20 உறுப்பினர்கள் என்பதால் முடிவுகள் கொஞ்சம் வேகமாக எடுக்க முடியும். அவ்வளவுதான். இந்த ஜி 20 கூட்டத்தில் வழக்கமாக ஐ.நாவில் வழங்குவது போல வாக்களிக்கும் உரிமை எல்லாம் கிடையாது. அதேபோல ஜி 20 போடும் ஒப்பந்தங்களும் சட்டப்படி பெரிதாக செல்லுபடியாகாது. ஆனால் இந்த ஜி 20 மாநாட்டை ஒட்டி பெரிய போராட்டங்கள் எல்லாம் நடக்கும். 2009இல் லண்டனில் நடந்த ஜி 20 மாநாட்டில் செய்தித் தாள் வியாபாரி கொல்லப்பட்டார். அவருக்காக ஆர்ஜென்டீனாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

 

Leave a Reply