சௌதி – ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை

ஏமனில் நடக்கும் போரை முடிவிற்குக் கொண்டுவர சௌதி ஹவுத்தி கிளர்ச்சியாளர்களிடையே மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சௌதியின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில், “ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நிலவும் போரை முடிவிற்குக் கொண்டுவர சௌதி மற்றும் ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெறவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சௌதி மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகள் கடந்த இரண்டு மாதங்களாகப் பேசி வந்துள்ளனர். முன்னதாக, ஏமன் அந்நாட்டின் தென்பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையே சௌதி தலைமையில் அமைதிக்கான ஒப்பந்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகின்றது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சௌதி அரேபியா செயற்படுகின்றது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கின்றது.

மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசிற்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர்.

ஏமனில் நான்கு ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலட்சக் கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.