சௌதி அரசிற்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில், செப்டெம்பர் 14அன்று நடத்தப்பட்ட தாக்குதல் சௌதி பாதுகாப்பு அமைப்புகளின் குறைகளை வெளிக்காட்டியுள்ள நிலையில், அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஈரான் புரட்சிகர படை என அழைக்கப்படும் ஈரான் இராணுவத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஹுசேன் சலாமி, “எச்சரிக்கையாக இருங்கள், எந்தத் தவறும் செய்யாதீர்கள்” என்று அமெரிக்கா மற்றும் சௌதி அரேபிய அரசுகளுக்குக் கூறியுள்ளார்.
தலைநகர் டெஹ்ரானில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஈரான் எல்லையை யார் கடந்தாலும் அவர்களைத் தாக்குவோம்.” என்று கூறியுள்ளார்.
ஈரான் புரட்சிகர இராணுவம் அமெரிக்காவில் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. சௌதியில் நடந்த ஆளில்லா விமானத்(டிரோன்) தாக்குதலைத் தொடர்ந்து அந்த நாட்டிற்கு தங்கள் படைகள் அனுப்பப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தப் படைகள் தாக்குவதற்கு அல்லாமல் பாதுகாக்கும் நோக்கத்துடனேயே அனுப்பப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். எனினும், எத்தனை பேர் அடங்கிய படை என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
சௌதியின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தாக்குதல் தடுப்பு அமைப்புக்களை பலப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்தப் படைகள் அனுப்பப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியான ஸ்டாஃப் ஜெனரல் ஜோசப் டன்போர்டு அங்கு அனுப்பப்படும் படைவீரர்களின் எண்ணிக்கை மிதமாகவே இருக்கும் என்றும், அது ஆயிரங்களைத் தொடாது என்றும் கூறியுள்ளார்.
அவர்கள் எதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று அவர் கூறவில்லை. இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக சௌதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சாட்டின.
ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும், பாரசீக வளைகுடாவின் வடக்கு முனையிலிருந்தே இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு கூறியது.
ஈரானின் மத்திய வங்கி மற்றும் அதன் நிதிகளை முடக்கும் நோக்கில் பொருளாதார தடைகள் விதிப்பதாக வெள்ளியன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது அனுப்பப்படும் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்று பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “நாங்கள் இப்போது அந்த நிலையில் இல்லை.“ என்று மார்க் எஸ்பர் கூறினார்.
இந்த தாக்குதலில் தங்களின் பங்கு எதுவுமில்லை என்று மறுத்த ஈரான், எந்தவித இராணுவ நடவடிக்கையையும் சமாளிக்க தாங்கள் எதிர்த் தாக்குதல் நடத்த தயார் என இந்த வாரம் எச்சரித்தது.