சைபீரியாவில் அடுத்தடுத்து தோன்றும் பிரமாண்ட பள்ளங்கள்

554 Views

ரஷ்ய நாட்டின்  சைபீரியாவில் உள்ள தந்த்ரா பகுதியில் திடீரென 100 அடி ஆழமும், 70அடி விட்டமும் கொண்ட பிரமாண்டமான பள்ளம் தோன்றியுள்ளதால் விஞ்ஞானிகள் குழப்பத்தில் உள்ளனர்.

2013ஆம் ஆண்டு வடமேற்கு சைபீரியாவில் யாமல் பெனின்சுலா பகுதியில் 70 அடி ஆழமும் 30 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட பள்ளம் ஒன்று திடீரெனத் தோன்றியது. அந்தப் பள்ளம் தோன்றியதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது இந்தப் பள்ளம் தோன்றியுள்ளது.

2013ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தப் பகுதியில் அடுத்தடுத்து ஒன்பது பிரமாண்ட பள்ளங்கள் தோன்றின. திடீர் பள்ளங்கள் தோன்றுவதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ததில், காலநிலை மாற்றங்கள்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

சைபீரியா நிலத்தடி பகுதியில் ஏராளமான மீதேன் வாயுக்கள் இருக்கின்றன. காலநிலை மாற்றத்தால் இந்தப் பகுதியில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் இந்த மீதேன் வாயுக்கள் சூடாகி ஒரேயிடத்தில் திரண்டு வெடிப்பதால் அந்தப் பகுதியில் உள்ள தரை வலுவிழந்து உள்வாங்கி விடுகின்றன. இதனாலேயே இந்த இடங்களில் பள்ளங்கள் தோன்றுகின்றன என்று விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் சில விஞ்ஞானிகள் இதை மறுத்து வருகின்றனர்.

இதேவேளை ஸ்கோல்கோவோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் துறை ஆராய்ச்சியாளர் எவ்கெனி சுவிலின் கருத்துத் தெரிவிக்கையில், “இதுவரை இந்தப் பள்ளங்கள் ஏன் தோன்றுகின்றன என்பதைக் கூறும் கருதுகோள்கூட ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. திடீர் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply