செங்கடல் பதற்றம்- 14 பில்லியன் டொலர்கள் இந்திய வர்த்தகம் பாதிப்பு

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா விமானத்தாக்குதல்களை தொடர்ந்து செங்கடல் பகுதியில் குதீஸ் படையினரின் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுப்பதற்கான வழிமுறைகளை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தேடி வருகின்றன.

இணைந்த நடவடிக்கைக்கு பல நாடுகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. உதாரணமான தாம் இந்த கூட்டணியில் இணையப்போவதில்லை என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், துருக்கி கடற்படையினர் ஏடன் வளைகுடா மற்றும் சோமாலியா கடற்கரைகளில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுவதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே இந்தியாவின் கடற்படை கப்பல்களும் பாராசீக வளைகுடா, சோமாலியா கடல் பகுதி மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு இந்திய கப்பல்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடப்போவதாக இந்திய கடற்படையின் கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் குர்சரன் சிங் தெரிவித்துள்ளார்.

6 தொடக்கம் 10 கடற்படை கப்பல்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 14 பில்லியன் டொலர் வர்த்தகம் செங்கடல் பகுதியின் ஊடாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு சாதாரண கொள்கலனுக்கு 600 டொலர்கள் செலவாகின்றது. செங்கடலை தவிர்த்து தென்னாபிரிக்கா ஊடாக செல்வதானால் 1500 டொலர்கள் செலவாகும் என இந்தியா கவலை அடைந்துள்ளது.