இனவாத விதைப்பு – துரைசாமி நடராஜா

இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சமமானவர்களாக மதிக்கப்பட வேண்டும். எனினும் மலையக மக்கள் இதில் உள்ளீர்க்கப்படாது தொடர்ச்சியாகவே புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாகவே இருந்து வருகின்றமை தொடர்பில் பலரும் தனது விசனப் பார்வையினை செலுத்தி வருகின்றனர்.’200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி’ நிகழ்வு அண்மையில் நுவரெலியாவில் இடம்பெற்ற நிலையில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேயதாசா தனது உரையிலும் இதனைச் சுட்டிக்காட்டி இருந்தார்.மலையக சமூகம் இந்நாட்டில் ஒரு தனித்துவமான சமூகமாக மேலெழும்பிவரும் நிலையில் இத்தகைய புறக்கணிப்புக்கள் அச்சமூகத்தின் எழுச்சியை மழுங்கடிக்கச் செய்வதாக அமையும்.எனவே ஆட்சியாளர்கள் இச்சமூகத்தின் மேம்பாட்டிற்கு தம்மாலான உச்சகட்ட பங்களிப்பினை வழங்கி கைதூக்கி விடவேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

sajith 1 இனவாத விதைப்பு - துரைசாமி நடராஜாமலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து இந்த வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளும்  ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றன.மலையகத்தில் மட்டுமல்லாது வடக்கு கிழக்கு பகுதிகளிலும் மலையக மக்களின் எழுச்சிக்கும், அவர்களது 200 வருடகால வரலாற்றை நினைவுகூறும் முகமாகவும் நிகழ்வுகள் பலவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.மலையக மக்களின் 200 வருடகால பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுவரும் இத்தகைய நிகழ்வுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களும் இருந்து வருகின்றன.இந்நிகழ்வுகளில் பல இம்மக்களின் அபிவிருத்திக்கு தோள்கொடுப்பதை விடுத்து அரசியல் மற்றும் சுய இலாபம் கருதிய நோக்கில் இடம்பெற்று வருவதாகவும் விமர்சனங்கள் இருந்து வருவதும் தெரிந்ததாகும்.எது எவ்வாறெனினும் இந்நாட்டில் மலையக மக்கள் கால்பதித்து 200 வருட வரலாற்றினை நினைவுகூறும் இத்தருணம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும் என்பதனை மறுப்பதற்கில்லை.

19 ம் நூற்றாண்டில் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் தமிழகத்திலிருந்து அழைத்துச் சென்று குடியேற்றப்பட்ட தமிழ்த் தொழிலாளர்களின் வரலாறு பல நாடுகளில் சோகம் மிக்கதாகவே காணப்படுகின்றது.அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு முதலில் பிரித்தானிய, பிரான்சிய ஆட்சியாளர்களாலும், பின்பு சுதேச ஆட்சியாளர்களாலும், அந்தந்த நாடுகளையும் தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும், தொழிலாளர்களல்லாத ஏனைய தமிழர்களாலும், ஏனைய இந்தியர்களாலும், வணிகர்கள், அதிகாரிகள், தோட்ட உத்தியோகத்தர்கள் பிற அலுவலர்கள் போன்ற பலராலும் இத்தொழிலாளர்கள் கொடூரமான சுரண்டல்களுக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இம்மக்கள் குடியேற்றப்பட்ட நாடுகள் மற்றும் தீவுகளில் வாழும் தமிழ் தொழிலாளர்களில் பலர் இன்று தமிழ் பேசவோ எழுதவோ வாசிக்கவோ தெரியாத நிலையிலேயே இருந்து வருவதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.மேலும் இவர்களில் பலர் சுதேச இனத்தவர்களுடன் கலப்புற்ற விட்டனர்.அவ்வாறு கலப்புற்ற நிலையில் அவர்கள் பெருமளவு உரிமைகளுடனும் சலுகைகளுடனும் ஓரளவு வளத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.இதேவேளை தொழிலாளர்களில் கணிசமானவர்களின் இளந்தளைமுறையினர் கல்வி கற்று பிற வேலைவாய்ப்புகளைப் பெற்று முன்னேறத் தொடங்கியுள்ளனர் என்பதும் புத்திஜீவிகளின் கருத்தாகும்.

இந்த வகையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு புறக்கணிப்பிற்கும் உள்ளானமை தெரிந்த விடயமாகும்.ஏனைய இனத்தவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இவர்கள் அவர்களின் அலட்சியத்திற்கும் உள்ளாகி இருந்தனர்.இம்மக்களுக்கான உரிமைகள் உரியவாறு கிடைக்காத நிலையில் ஒதுக்கப்பட்டவர்களாகவே இவர்களின் வாழ்க்கை நிலைமைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.இந்திய தமிழ்த் தொழிலாளர்கள் இங்கு தருவிக்கப்பட்டு குடியேற்றப்பட்ட தோட்டங்கள் பெரும்பாலும் மலைப்பாங்கான தொலைப்பிரதேசங்களில் அமைந்திருந்ததால் அவர்களது பல்வேறு தேவைகளையும் தோட்டங்களுக்குள்ளேயே பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.இம்மக்களின் நலன்கருதி சில வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட போதும் இவ்வசதிகள் ஒருபோதும் ஆகக்குறைந்த மட்டத்திற்கும் மேலாக இருக்கவில்லை என்று பேராசிரியர் மு.சின்னத்தம்பி குறிப்பிடுவதும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

மலையக சமூகத்தினர் கல்வியினைப் பெற்று விடக்கூடாது என்பதில் நிர்வாகத்தினர் கவனமாக இருந்தனர்.இவர்கள் கல்வியை பெற்று விட்டால் அது தமது பணிகளுக்கு இடையூறாக அமையும் என்றும் கருதினர்.இதைப்போன்றே இம்மக்களுக்கு வாக்குரிமை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும் எதிர்ப்புகள் வலுப்பெற்றன.டொனமூர் ஆணைக்குழுவினுடைய சிபாரிசில் அபாய அறிவித்தலாக அமைந்தது இந்தியத் தொழிலாளருக்கு வாக்குரிமையளிக்கும் பிரேரணை என்று டி.எஸ்.சேனநாயக்கா கூறியிருந்தார்.

jeevan இனவாத விதைப்பு - துரைசாமி நடராஜாஇந்தியாவை பொறுத்தவரையில் சிங்களவர் சிறுபான்மையினர் மாத்திரமன்றி அநீதிக்குப் பலியாவர் என்றும் அவர் கூறினார்.தோட்டத் தொழிலாளரை அரசியலில் இருந்து வெளியேற்றுதல் 1920 களின் பிற்பகுதியில் சிங்கள பூர்ஷ்வாக்களால் தலைமை தாங்கப்பட்டது.வர்க்க உணர்வு கொண்ட தோட்டத் தொழிலாளர் இலங்கையின் ஏனைய தொழிலாளர்களுடன் இணைதல் என்பது, நிலவும் சிங்கள சமூக அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும் என்பதை உணர்ந்த சிங்கள அரசியல்வாதிகள் தமது பலம் நாட்டில் குறைந்துவிடும் என்று பிரச்சாரம் செய்தனர்.1920 களின் பிற்கூற்றில் இந்தியத் தொழிலாளரின் அரசியல் உரிமைகளுக்கு எதிராக இனவாதப் பிரசாரம் சிங்கள அரசியல்வாதிகளால் முதன் முதலில் முன்னெடுக்கப்பட்டது.எனினும் ஏ.ஈ.குணசிங்கவின் சமூக – ஜனநாயக தலைமையில் இன ஒற்றுமை, வர்க்க ஒருமைப்பாடு ஆகியவை உச்சநிலையில் இருந்த காலகட்டத்தில் சிங்கள தொழிலாள வர்க்கம் தோட்டத் தொழிலாளருக்கு எதிரான நடவடிக்கைகளை வன்மையாக எதிர்த்தது என்ற வலியுறுத்தல்களுமுள்ளன.

மக்களின் உரிமைக்குரல்

மலையக மக்களின் குடியிருப்பு பிரச்சினை இன்னும் துன்பத் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றது.1996 ம் ஆண்டின் தகவலொன்றின்படி பெருந்தோட்ட எல்லைக்குள் 213321 பழைய லயன் முறையை அடிப்படையாகக் கொண்ட வீடுகளும் அதில் 104556 அலகுகள் இரட்டை லயன் காம்பரா முறையைக் கொண்டதாகவும் இருந்தன.108825 அலகுகள் ஒற்றை லயன் காம்பரா முறையைக் கொண்டதாகவும் 70 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாகவும் காணப்பட்டது.சமகாலத்தில் மலையக மக்களின் குடியிருப்பு பிரச்சினை உக்கிரமடைந்து காணப்படும் நிலையில் சிலர் தற்காலிக வீடுகள், தற்காலிக குடிசைகள் என்பவற்றில் வாழ்ந்து வருகின்றனர்.லயத்து வாழ்க்கை முறையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தனிவீட்டு கலாசார முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் இவையனைத்தும் ஆமை வேகத்திலேயே இடம்பெறுகின்றன.இதனிடையே ‘நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பு செய்து வரும் தோட்ட மக்களின் வாழ்க்கையை உயர்த்த ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

இன்னும் அவர்கள் லயன் அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.அடிப்படை வசதிகள் கூட இன்னும் செய்து கொடுக்கப்படாமல் இருக்கின்றன.200 வருடங்களாகியும் பெருந்தோட்ட மக்களுக்கு வீடும் இல்லை.மரணித்தால் மயானமும் இல்லை.தோட்ட மக்களின் சம்பள பிரச்சினையும் இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றது.200 வருடங்களாக அவர்கள் தோட்டங்களில் வேலைசெய்து வந்தாலும் இன்னும் நாட்சம்பளத்துக்கே தொழில் புரிந்து வருகின்றனர்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் அண்மையில் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்திருந்தார்.

Malayakam 1 இனவாத விதைப்பு - துரைசாமி நடராஜாமலையக மக்களின் சுகாதார, மருத்துவ நிலைமைகளும் திருப்தி தருவதாக இல்லை . தேசிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார, மருத்துவ வேலைத்திட்டங்கள் மலையகத்திற்கு எட்டாக்கனியாகவே இன்னுமுள்ளது.தோட்டப்புற வைத்தியசாலைகள் பல குறைபாடுகளுடன் இயங்கி வரும் நிலையில் இவ்வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று சிறந்த சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

இலங்கையில் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் அதிகமுள்ளன.இந்நிலையில் இவற்றை தீர்த்துவைக்கும் நோக்கில் அழுத்தம் கொடுக்காது முரண்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி ஒற்றுமைக்கு குந்தகமாக செயற்பட்ட அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.’இலங்கை நாடானது அதன் 75 சதவீத மக்களான சிங்களவர்களுக்கே சொந்தமானது.

சிறுபான்மையினர் எங்களுடன் இந்நாட்டில் வாழலாம்.ஆனால் அவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் என்ற அடிப்படையில் சாத்தியமற்றதான எவற்றையும் கோரிக்கையாக முன்வைக்க முடியாது.இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நிலையில் ஏனைய சிறுபான்மையினர் அவர்களுடன் வாழத் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்ற ரீதியில் இலங்கையின் முக்கிய அரசியல்வாதியொருவர் கடந்த காலத்தில் ‘கனடியன் நெஷனல் போஸ்ட் ‘ நாளிதழுக்கு நேர்காணலொன்றினை வழங்கி இருந்தார்.இத்தகையோரால் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகள் கேள்விக்குரியாகின.

இனவாத சிந்தனையாளர்கள் மலையக மக்கள் உரிமைக்குரல் கொடுத்தபோதெல்லாம் அவர்களின் குரல்வளையை நசுக்குவதிலேயே ஆர்வம் செலுத்தினர்.அம்மக்களின் இருப்பை சிதைத்து அம்மக்களை நிர்வாணப்படுத்தும் முயற்சிகளே முடுக்கி விடப்பட்டன.பெருந்தோட்ட தேயிலை நிலச் சுவீகரிப்பு, சிறுதோட்ட அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட மழுங்கடிப்பு, பொருளாதார முடக்கம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளும் மலையக மக்களின் எழுச்சிக்கு ஆப்பு வைத்து அவர்களின் தேசிய நீரோட்டக் கனவை வேரறுப்பதனை நோக்கமாகக் கொண்டதாகும்.இந்நடவடிக்கைகள் மூலமாக இனவாதிகள் வெற்றி கண்ட சந்தர்ப்பங்களும் அதிகமுள்ளன.

இலங்கையின் அரசியல் யாப்பிற்கமைய சகலரும் சமமாக மதிக்கப்படுதல் வேண்டும்.இன,மத,மொழி ரீதியாக எவருக்கும் வேறுபாடு காட்டப்படலாகாது.எனினும் இது எந்தளவுக்கு சாத்தியமாகி இருக்கின்றது என்பது தொடர்பில் திருப்தியற்ற வெளிப்பாடுகளே அதிகமுள்ளன.இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அண்மையில் நுவரெலியாவில் கருத்து தெரிவித்திருந்தார்.

Nirmala 2 இனவாத விதைப்பு - துரைசாமி நடராஜா200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி நிகழ்வு  அண்மையில்  நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் பல முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார்.’இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சமமானவர்கள் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அவர்கள் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.அரசியலமைப்பில் அவ்வாறு கூறப்பட்டாலும் தற்போது வரையிலும் யதார்த்தத்தில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பலமும் இன்னும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மலையக மக்கள் உயிர்வாழ்வதற்கான வாழ்வாதார உரிமையை நாம் எமது ஆட்சியில் பெற்றுக் கொடுப்போம்.மலையக மக்கள் தொழிலாளர்களவே அடையாளப்படுத்தப்படும் நிலையில் தேயிலைத் தொழிற்றுறையின் தொழில் முயற்சியாண்மை உடையவர்களாக மாறவேண்டும்’ என்று கூறும் சஜித், மலையக மக்களை தமக்கான காணி உரிமையைக் கொண்ட சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான அழுத்தம் தமது ஆட்சியில் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கின்றார்.கல்வி, சுகாதாரம், குடியிருப்பு போன்ற பல துறைகளிலும் இம்மக்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியமும் அவரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.எவ்வாறெனினும் நாடுயர தம்மை அர்ப்பணித்த மலையக சமூகம் நடுத்தெருவில் உரிமையின்றி அல்லல்படுவது விரும்பத்தக்கதல்ல.இதனை கருத்தில் கொண்டு அம்மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.