சுவிஸ் பணியாளரின் பாதுகாப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை

சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டுள்ள சுவிற்சலாந்து தூதரகத்தின் பணியாளர் பனிஸ்ரர் பிரான்சிஸ் இன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் வெள்ளை காரில் கடத்தப்பட்டு சிறீலங்கா புலனாய்வுத்துறைத் தலைவர் நிசந்தா சில்வாவிற்கு எவ்வாறு சுவிஸ் அரசு நுளைவு அனுமதி வழங்கியது என்பது தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் சிறீலங்கா அரசு கடத்தப்பட்டவரை கைது செய்து குற்றவாளியாக்கி சிறையில் அடைத்துள்ளது மேற்குலக நாடுகளை சினம் கொள்ள வைத்துள்ளது. இந்த சம்பவத்தை கையாள்வதற்கு சுவிஸ் அரசு தனது மூத்த அதிகாரியை சிறீலங்காவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள அதேசமயம், சுவிஸ் வெளிவிவகார அமைச்சு கடுமையான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

இதனிடையே, சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்;த்தனாவைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், சுவிஸ் அரசின் நிலைப்பாட்டையே தாம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும், கைது செய்யப்பட்ட பணியாளரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

அதேசமயம், சிறீலங்காவின் உள்ளூர் ஊடகங்கள் ஒரு பக்கச்சார்பாக நடப்பாதாகவும், சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சிறீலங்காவில் ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.