சுதந்திரம் எனும் சூலாயுதம் –  சுடரவன்

360 Views

சிங்களவர்களின் முதல் மூத்த மூதாதை எனக்கூறப்படும் விஜயன் இலங்கைத் தீவில் கால்பதிக்கும் முன்னமே தமிழரின் மூதாதையர் ஆகிய நாகர், இயக்கர் போன்றோர் இத்தீவில் வாழ்ந்துவந்தனர்  என்பது வரலாறு.  அன்றைய  வடஇந்தியாவின் லாலா நாட்டிலிருந்து தனது குரூர செயல்களுக்காக  தந்தையால் நாடுகடத்தப்பட்ட விஜயன், தனது 700 தோழர்களுடன் இலங்கையில் கரைதட்டியபோது, அப்பகுதியை குவேனி என்ற  தமிழர் முன்னவள் ஆட்சிசெய்தாள்  என்பதும் சிங்களவர்கள் மறைக்க முயன்று தோற்ற வரலாறு.  சிறந்த  வீரனும் சிவபத்தனுமான தமிழ்மன்னன் இராவணன் இலங்கையை ஆண்டதும், அவன் இலங்கைவேந்தன் என அழைக்கப்பட்டதும் தமிழரின்  எழுச்சிமிகு வரலாறு.      சுதந்திரம் எனும் சூலாயுதம் -  சுடரவன்

தமக்கென தொன்மையான வரலாற்றையும் உயரிய  கலாசாரத்தையும், செழிப்பான தொன்மொழியையும் கொண்ட தமிழர்களின் வாழ்வும்,  ஆட்சியும் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகைவரை இத்தீவில் நீடித்து நிலைத்திருந்துள்ளது வெளிப்படை.1505 இல் போத்துக்கேயரும், அதன்பின் ஒல்லாந்தரும்  இத்தீவிற்கு வந்தபோது தமிழர்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களை  தாமே ஆட்சி செய்ததை  அவர்களின் ஆவணக்குறிப்புகள் அறிவித்து நிற்கின்றன. இது தொடர்பான ஆவணங்களை அவர்கள் இன்னும் தமது ஆவணக்காப்பகங்களில் பேணிவருகின்றனர்.

போத்துக்கேயரின் ஆட்சியிலும், பின்வந்த ஒல்லாந்தரின் ஆட்சியிலும் தனித்தனி இராசதானிகளாக இருந்த இலங்கைத்தீவின் பௌதீக நிலப்பகுதிகள் தனித்தனி நிருவாக அலகுகளாகவே பெரும்பாலும் தொடர்ந்து பேணப்பட்டன. இறுதியில் பிரித்தானியரால் இலங்கைத்தீவு ஆக்கிரமிக்கப்பட்டபோது இலங்கைத்தீவின் இராசதானிகள் யாவும் ஒருங்கிணைக்கப்பட்டன.

தமிழ் மன்னர்கள் ஐரோப்பிய ஆக்கிரமிப்புக்கு எதிராக தீவிரமாகப் போராடினார்கள். இலங்கைத்தீவில் அப்போது இருந்த எந்த சிங்கள மன்னர்களையும் விட போர்க்களங்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு  இவர்களே பெரும் சவாலாக இருந்தனர். குறிப்பாக பண்டாரவன்னியனும், சங்கிலியனும் பல காலங்களில் களங்களில் எதிரிகளை புறங்கண்டார்கள்.

மாவீரன் பண்டாரவன்னியன் பிரித்தானியப் படைகளை பலமுறை தோற்கடித்தான். அவர்களின் பலம்வாய்ந்த முல்லைத்தீவு கோட்டைமீது தாக்குதல் நடாத்தி அங்கிருந்த இரு பீரங்கிகளையும் கைப்பற்றினான். நேர்வழியில் வீழ்த்தமுடியாத  வீரனை துரோகம் துணைகொண்டு  வெள்ளையர் வீழ்த்தினர்.      சுதந்திரம் எனும் சூலாயுதம் -  சுடரவன்

பண்டாரவன்னியனின் முடிவுடன் தமிழர் தயாகப் பகுதிகளின் ஆட்சியதிகாரம்  முழுமையாக  பிரித்தானியர் கைகளுக்குச் சென்றது. தமிழரின் இராச்சியங்கள் போர்முனையிலேயே தமது இறையாண்மையை இழந்தன. இவ்வாறு தமிழர்களின் வரலாற்று ரீதியான தாயக  இறைமையை  பிரித்தானியர்கள் அடாத்தாக அபகரித்துக் கொண்டனர். 1796இல்  தமது ஆதிக்கத்தை ஆரம்பித்த பிரித்தானியர்   1833இல் இலங்கைத்தீவு  முழுமையையும் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.

ஒன்றரை நூற்றாண்டுகள் ஆட்சிச்செய்த பிரித்தானியர் இறுதியில் 1948இல் இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த ஆட்சியதிகாரத்தை முழுமையாக சிங்கள பௌத்த அரசியல்வாதிகளிடம் தாரைவார்த்துவிட்டு வெளியேறினார். அவர்கள் தமிழர்களிடம் இருந்து அபகரித்த இறையாண்மையை சிங்களவர்களிடம் தாம்பாளத்தில் வைத்துக்கொடுத்தனர்.

இலங்கைத்தீவின் பண்டைய வரலாற்று ரீதியான எந்தவொரு நியமங்களையும் கருத்தில் கொள்ளாது, எதிர்கால நற்தொலைநோக்கு எதுவுமின்றி இடம்பெற்ற இலங்கைத் தீவுக்கான  ‘ சுதந்திரம்’  என்ற நிகழ்வு தமிழர் வரலாற்றில் இரத்தம் தோய்ந்த சகாப்தங்களுக்கான அடித்தளமாக அமைந்தது. இந்த நீதியற்ற சுதந்திரம் இலங்கைத்தீவில் பல்வேறுபட்ட பிரச்சனைகளையும் பிணக்குகளை ஏற்படுத்தும் என்பது பிரித்தானியர் அறியாததல்ல.

இலங்கைத்தீவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட அதே ஆண்டே பௌத்தசிங்கள பேரினவாதம்  தமிழர்களின் இருப்பை இலங்கைத்தீவில் இல்லாதொழிக்கும்  தனது ஆட்டத்தை ஆரம்பித்தது.1948இல் சிங்களப் பேரினவாத அரசால்  கொடுவரப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டத்தின் அடிப்படையில், இந்த தீவின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய பொருண்மிய நலன்களுக்குமாக  தமது வியர்வையையும் குருதியையும் கொட்டி நூற்றாண்டுகளாக உழைத்த ஒரு மில்லியன் மலையகத்தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

பின்னர் 1964இல் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில்   350,000தமிழர்கள் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். இந்த அநீதிகள் எதனையும் கண்டுகொள்ளாது கண்மூடியிருந்தது, பிரித்தானியா தமிழர்களுக்கு இழைத்த மிகப்பெரிய துரோகச்செயலாகும். இந்த துரோகத்திற்கு  தமிழ்த்தலைமைகளும் துணைபோனமை, தமிழர் வரலாற்றில்  மிக்க கேவலமானதொரு  நிகழ்வென்றே கொள்ளவேண்டும்.chapter 4 causes of sri lanka conflict 20 638       சுதந்திரம் எனும் சூலாயுதம் -  சுடரவன்

மலையகத்தமிழரை ஒருவழி பண்ணிவிட்ட வெற்றிக்களிப்பில் சிங்கள பேரினவாதம் தமிழ்மொழி மீது தனது கவனத்தை திருப்பியது.  ஒரு இனத்தின் மிகமுக்கிய அடையாளமாக இருப்பது அதன் மொழியாகும். மொழியை இழக்கும் இனம்  தனது ஆன்மாவை, அடையாளத்தை இழந்துவிடும். அதன்பின் அவ்வினம் இருப்பிழந்து பிற இனங்களுள் கரைந்து போய்விடும். இதுவே  உலக வரலாறு.

1944இல் கொண்டுவரப்பட்டிருந்த தீர்மானம் தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளுக்கும் நிருவாகச் செயல்பாடுகளில்  சம தகுதிநிலையை உறுதி செய்திருந்தது. 1956இல் இலங்கையின் பிரதமரான S.W.R.D பண்டாரநாயக்கா தனது முதன்மை தேர்தல் வாக்குறுதியின்படி சிங்களம் மட்டும் சட்டமூலத்தை கொண்டுவந்தார். இதன்படி சிங்களம் மட்டுமே அரசநிருவாக மொழியாக ஆக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம் என்பன முற்றாகப் புறந்தள்ளப்பட்டன.Cartoon Sinhala Only       சுதந்திரம் எனும் சூலாயுதம் -  சுடரவன்

அத்துடன் தமிழர்களின் பூர்வீக நிலங்களை சூறையாடும் நுட்பமான திட்டங்கள் தீட்டப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன. விவசாயக்குடியேற்றங்கள் என்ற போர்வையில்  சிங்களக்குடியேற்றங்கள் தமிழர் வாழ்விடங்களை விழுங்கத் தொடங்கின. பட்டிப்பளை  எனப்பட்ட தமிழரின் பூர்வீக நிலப்பகுதி ‘கல்லோயா’ என சிங்களக்குடியேற்றப் பகுதியாக மாறத்தொடங்கியது.

இவற்றிலும் திருப்திகொள்ளாத சிங்கள பேரினவாதம் தமிழரை நேரடியாக கொன்றொழிக்கும் நிகழ்ச்சிநிரலை கையிலெடுத்துக்கொண்டது.1956 ஆனிமாதம் 11ம்திகதி  தமிழர்  கல்லோயா பகுதியில் மிகத்திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை நடவடிக்கையில் 150 அப்பாவித் தமிழ்ப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு எஞ்சியவை எரித்தழிக்கப்பட்டன. இது போன்ற தமிழருக்கு எதிரான படுகொலைகள் 1958 இலும் இடம்பெற்றன. இதில் 300இற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.

தமிழர் வாக்குரிமைப்பறிப்பு, மொழிப்புறக்கணிப்பு, நிலப்பறிப்பு, உயிரழிப்பு என சுதந்திரத்தின் பெயரால் சிங்களம் தனது இனவழிப்பை இடைவிடாது செய்துகொண்டிருந்தது.அடுத்து தமிழ் மக்களின் பெரும்சொத்தான  கல்வியில் கைவைக்கப்பட்டது.  1971இல் கல்வி தரப்படுத்தல் சட்டத்தை அமுலாக்கிய சிறிலங்கா, தமிழ் இளையோரின் கல்வி வாய்ப்பைப் பறித்துக்கொண்டது

இவற்றிற்கும்மேலாக 1972இல் புதிய அரசியல் அமைப்பின் மூலம்  இலங்கைக்கு சிறிலங்கா என்ற பௌத்த சிங்களப்பெயர் சூட்டப்பட்டது.  பௌத்த மதத்திற்கு சிறப்புரிமை வழங்கப்பட்டது. இந்த அரசியல் யாப்பு எஞ்சியிருந்த அற்பசொற்ப உரிமைகளையும், தமிழர்களிடமிருந்து பறித்தெடுக்கும் ஒன்றாகவும் அமைந்தது.

இதுவரை சுதந்திரத்தின் பெயரால் தமிழ் இனத்தின் மீது இழைக்கப்பட்ட அத்தனை அநீதிகளுக்கும் எதிராக தமிழர்கள் தமது அகிம்சைரீதியான எதிர்ப்பைமட்டுமே காட்டிவந்தனர். தமிழர்கள் தமது குறைந்தபட்ச உரிமைகளுக்காக கையேந்திய போதெல்லாம், பேரினவாதிகள் அவற்றை வன்முறைகொண்டு அடக்கினர்.

இறுதியாக  தனது இழந்த இறைமையை மீட்டெடுத்தால் அன்றி  தமிழருக்கு சுதந்திரம் கிட்டாது என்ற முடிவிற்கு தமிழினம் வந்தது. முள்ளிவாய்க்கால் வரை பல்லாயிரம் உயிர்கொடுத்து தனது இறைமையை நிலைநிறுத்த போராடியது. அந்த போராட்டம் உலக வல்லாதிக்க கூட்டால் அமைதியாக்கப்பட்டாலும்   தமிழர் இறைமைமீட்புத் தொடர்பில் அது ஒரு உறுதியான அடித்தளத்தைத்  தந்துள்ளது.

இறைமைமீட்பு என்பதற்கான வழிமுறைகள் மாறுபடலாம். ஒவ்வொரு காலத்து உலக ஒழுங்கின் தாக்கத்திற்கு உட்பட்டு,  அவை வேறு வடிவங்கள் எடுக்கலாம். இந்த இறைமையை நிலைநிறுத்த தமிழினம் ஒன்றிணைந்த சக்தியாக சாத்தியமான வழிகள் அனைத்திலும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இழந்த இறைமையை தமிழர்கள் மீளப் பெறும்வரை   உண்மையான சுதந்திரத்தை அவர்கள் அனுபவிக்க முடியாதென்பதே நிதர்சனம்.

-சுடரவன்-

 

 

 

Leave a Reply