சீனாவை எச்சரிக்கும் இந்திய முப்படைத் தளபதி பபின் ராவத்

இந்திய – சீன எல்லையான ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடையுமிடத்து இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பபின் ராவத் கூறியுள்ளார்.

லடாக்கில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், சீன இராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பாக இரு நாட்டு இராணுவ மற்றும் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், தமது தரப்பில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக டில்லியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பபின் ராவத் நேற்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சீன இராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பாக, அந்நாட்டு இராணுவம் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது. கடந்த மூன்று மாதங்களாக நடத்தப்படும் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இந்தப்  தோல்வியடையும்பட்சத்தில், தமது தரப்பில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க அவர் மறுத்து விட்டார்.