சீனாவை அடக்க இரு புதிய படைத்தளங்கள் – வேல் தர்மா

காகிதம், அச்சு இயந்திரம், திசையறிகருவி, வெடிமருந்து போன்றவற்றைக் கண்டுபிடித்த சீனா, அந்த தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்தி தனது உலக ஆதிக்கத்தை உயர்த்தத் தவறியது. ஒன்பதாம் நூற்றாண்டில் சீனா வெடிமருந்தைக் கண்டு பிடித்தது.

அதை அம்புகளில் வைத்து வில்மூலம் எதிரிகளின் மேல் ஏவியது. ஆனால் 13ஆம் நூற்றாண்டில் சீனா, மொங்கோலியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தியாவில் இரும்புக் குழாய்க்குள் வெடிமருந்தை வைத்து மைசூரியன் ரொக்கெட் என்னும் எவுகணை முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்தியாவில் இருந்து மேற்கு ஆசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளுக்கு வெடிமருந்து, வர்த்தக அடிப்படையில் பரவலானது.

வர்த்தக ரீதியாக வெடிமருந்து கடைசியாகப் போன இடம் ஐரோப்பாவாகும். தற்போது சீனா தனது தொழில்நுட்பங்களை திருடுகின்றது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. சீனா திருடிய தொழில்நுட்பங்களால் உருவாக்கிய படைக்கலன்களை வைத்துக் கொண்டு தன் அயல் நாடுகளை அச்சுறுத்துவதாகவும், தனது உலக ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் சீனா தனது வளர்ச்சியை அமைதியான எழுச்சி என்கின்றது. தான் மற்ற நாட்டு விவகாரங்களில் தலையிடுவதுமில்லை; மற்ற நாடுகளுக்கு தன் படையை அனுப்பி அழிவு விளைவிப்பதுமில்லை என்பது சீனாவின் கருத்து.

Nakanoshima Kagoshima சீனாவை அடக்க இரு புதிய படைத்தளங்கள் – வேல் தர்மா

பசுபிக் பிராந்தியம்

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் வசமிருந்த பல தீவுகளை அமெரிக்கா கைப்பற்றியதுடன், ஜப்பான் மீது அணுக்குண்டுகளை வீசி அதை சரணடையச் செய்து ஜப்பானில் தன் படைத்தளங்களை நிறுவிக்கொண்டது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆசியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் உள்ள பசுபிக் பிராந்தியத்தின் பரப்பளவு 165.2மில்லியன் சதுர கிலோ மீட்டர்களாகும். இனி வரும் காலங்களில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உலக ஆதிக்கப் போட்டியில் பசுபிக் பிராந்தியம் முக்கிய பங்கு வகிக்கவிருக்கின்றது. சீனாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், அது அமெரிகாவின் நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சீனாவின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டும் அமெரிக்கா பசுபிக் கடற்பிராந்தியத்தில் பல படைத்தளங்களை வைத்துள்ளது.

உலக ஆதிக்கத்திற்கு கடலாதிக்கம் அவசியம்

கடற்பரப்பை ஆள்வதன் மூலம் உலகை ஆளலாம் என அமெரிக்கா செயலில் காட்டியது. அமெரிக்க புவிசார் அரசியல் நிபுணர் அல்பிரட் மஹான் அதையே தனது புவிசார் அரசியல் கோட்பாடாக முன்வைத்தார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிற்கு எதிராகப் போர் செய்த அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக் ஆதர் தைவானை மூழ்கடிக்க முடியாத விமானம் தாங்கிக் கப்பல் என்று வர்ணித்திருந்தார். தைவானை ஜப்பானிடமிருந்து கைப்பற்றி அதை சீனாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா, சீனாவில் நடந்த பொதுவுடமைப் புரட்சியின் பின்னர் அதை சீனாவுடன் இணைக்கப்படுவதை எதிர்க்கின்றது. இப்போது தைவான் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டிக்களமாக மாறியுள்ளது. பதினைந்திற்கு மேற்பட்ட துறைமுகங்களைக் கொண்ட சீனா, தைவானைக் கைப்பற்றினால் அதன் கடல் வலு பல மடங்காக அதிகரிக்கும்.

தைவானை தனதாக்கத் துடிக்கும் சீனா

2019 ஜனவரியில் அமைதியான வழியில் அல்லது அது முடியாதவிடத்து ஒரு போர் மூலமாகாவேனும் தைவான் சீனாவுடன் இணைக்கப்படும் என்று சீன அதிபர் ஜீ ஜின்பிங் சூளுரைத்தார். அதன் பின்னர் தைவான் வான்பரப்புக்கு சீன விமானங்களும் அதன் கடற்பரப்பினுள் சீனப் போர்க்கப்பல்களும் அத்துமீறுவது அடிக்கடி நடக்கின்றது. தைவான் கணினி உதிரிப்பாக உற்பத்தித் துறையிலும் அதிலும் முக்கியமாக கப்பாஸிட்டர்களை உற்பத்தி செய்வதில் முன்னணி வகிக்கின்றது. அமெரிக்கா அந்த உற்பத்தி பொருட்களை சீனாவிற்கு விற்பனை செய்வதை தடைச் செய்துள்ளது.

அமெரிக்காவின் இரண்டு தீவுச் சங்கிலிகள்.

யொக்கோசுக்கா, ஒக்கினோவா ஆகிய ஜப்பானியத் தீவுகள், தென் கொரியத் தீபகற்பம், பிலிப்பைன்ஸ் தீவுகள் ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் முதற் சங்கிலித் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. ஜப்பானியத் தீவுகள், குவாம் தீவு, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் இரண்டாம் சங்கிலித் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் மீது சீனா கடுமையான தாக்குதலை மேற்கொள்ளும். ஆனால் முற்றாக அழிக்க முடியாது. இதில் இரண்டாவது சங்கிலியில் அமெரிக்கா பலௌ தீவுக் கூட்டத்தையும் ஜப்பான் ககோகஷிமா தீவிலும் இரு புதிய படைத்தளங்களை நிர்மாணிக்கின்றன.

பலௌ தீவுக் கூட்டம்

உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான பலௌ, மேற்குப் பசுபிக் கடலில் குவாம் தீவில் இருந்து 830மைல் தொலைவில் உள்ள ஒரு 340 தீவுகளின் கூட்டமாகும். தற்போது இருபதினாயிரம் மக்களைக் கொண்ட பலௌ தீவை இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா கடும் போரின் பின் ஜப்பானிடமிருந்து கைப்பற்றியது. அதன் பின்னர் அதன் பாதுகாப்பு அமெரிக்காவிடமே இருந்து வருகின்றது. 1974ஆம் ஆண்டு சுதந்திரம் பெற முன்னர், பலௌ அமெரிக்காவின் ஒரு நம்பிக்கைப் பிராந்தியமாக இருந்தது(Trust Territory of the Pacific Islands). பலௌ ஆட்சியாளர்கள் அமெரிக்காவை தமது நிலத்தில் படைத்தளம் அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

IMG 20200706 090929 590 சீனாவை அடக்க இரு புதிய படைத்தளங்கள் – வேல் தர்மா

மேற்குப் பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து தமது நாட்டை அமெரிக்கா பாதுகாக்க வேண்டும் என்பது பலௌ ஆட்சியாளர்களின் நிலைப்பாடாகச் சொல்லப்படுகின்றது. 2020 செப்டம்பர் முதல் வாரத்தில் அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் மார்க் எஸ்பர் பலௌ தீவிற்கு சென்று அதன் அதிபர் Tommy Remengesau Jrஐச் சந்தித்து உரையாடினார். பலௌவிற்கு சொந்தமான பாரிய கடற்பரப்பை அந்த சிறிய நாட்டால் பாதுகாக்க முடியாத நிலை இருக்கின்றது. பலௌ நாட்டிற்கு என்று ஒரு படைத்துறை இல்லை. 1994ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் பலௌ செய்த ஒப்பந்தத்தின் படி அந்த நாட்டிற்கான பாதுகாப்பை அமெரிக்கா வழங்கி வருகின்றது. பலௌ நாட்டின் வேண்டுகோளின் படி அமெரிக்கா சீனாவை இலக்கு வைத்து அங்கு தனது பெரிய படைத்தளம் ஒன்றை நிர்மாணிக்கின்றது.

ககோகஷிமா தீவு

ஜப்பான் தனது ஆள்நடமாட்டமில்லா ககோகஷிமா தீவில் ஒரு பெரிய தளத்தை உருவாக்குகின்றது. இந்தத் தீவில் அமெரிக்கா ஆண்டுக்கு இரண்டு தடவைகள் தனது விமானம் தாங்கிக் கப்பல்கள் மூலம் போர்ப்பயிற்ச்சிகள் மேற்கொள்கின்றது. இதில் இரண்டு விமான ஓடுபாதைகள், ஒரு துறைமுகம், ஒரு விமானத் தரிப்பிடம் ஆகியவை இருக்கும்.

சீனாவின் படைத்துறை வளர்ச்சி

சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா, ஆகிய நான்கு நாடுகள் இணைந்து அமைக்கும் கூட்டமைப்பில், ஏற்கனவே தென் கொரியாவும் வியட்நாமும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இது சீனாவை இட்டு இந்த நாடுகள் கொண்டுள்ள கரிசனையை எடுத்துக் காட்டுகின்றது.