‘சீனாவின் பிடியில் சிறீலங்கா, இனியும் தாங்குமா இந்தியா!’ – காசி ஆனந்தன் அறிக்கை

544 Views

இந்தியா இலங்கையின் தோளைத் தடவிக் கொண்டிருக்கிறது. இலங்கை
இந்தியாவின் காலை வாரிக் கொண்டிருக்கிது என  ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின்  தலைவர் கவிஞர் காசிஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”சிறீலங்கா முற்றிலுமாகச் சீனாவின் பிடியில் சிக்கிவிட்டதை சிங்கள இனவெறி
இரட்டையர் ராஜபக்சாக்களின் ஆட்சிக் காலத்தில் பார்க்கிறோம்.

பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா அண்மையில் வெளியிட்டுள்ள ஓர்
அறிக்கையில் சிறீலங்கா அரசின் சீன முகத்தைப் பார்க்க முடிகிறது.

ஐ.நா. மன்ற மனித உரிமை ஆணையத்திலும் சரி – பாதுகாப்புச் சபையிலும்
சரி – இலங்கைக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் சீனா எங்களைக் காப்பாற்றும் என்று
மார்தட்டி எக்காளம் இட்டிருக்கிறார் இனிவெறிச் சிங்களப் பாதுகாப்பு அமைச்சர்.

அம்பாந்தோட்டையில் உள்ள துறைமுகத்தோடு ஒப்பிடும் போது கொழும்புத்
துறைமுகம் அளவில் சிறியதே.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் முழுவதையும் இலங்கை அரசு சீனாவுக்கு 99
ஆண்டுகள் குத்தகைக்குக் கொடுத்தபோது வெடிக்காத சீன எதிர்ப்பு – இன்று
கொழும்புத் துறைமுகத்தை முமுமையாக அல்ல – அதன் கிழக்கு முனையத்தை –
நிலையான நெடுங்காலக் குத்தகைக்கு அல்ல – பணி நிமித்தம் இந்தியாவுக்கு
ஒப்படைக்க வேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்படும் போது –
சிங்களவர்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பு வெடித்திருக்கிறது.

சிங்களப் புத்த பீடங்கள் – சிங்களக் கலாசார மன்றங்கள் – சிங்களத்
தொழிற்சங்கங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு எதிராகச் சினங்கொள்வதைப்
பார்க்கிறோம்.

சஜித் பிரேமதாசாவின் தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் கட்சியைச்
சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. ஹர்ணிக்கா இரண்டு நாட்களுக்கு முன்பு
வெளியிட்ட ஓர் அறிக்கை சிறீலங்கா அரசு பற்றிய சரியான கணிப்பாக இருக்கிறது.
‘இலங்கையில் உள்ள துறைமுகங்களுக்குப் பொறுப்பாக விரைவில் ஒரு ‘சீன
அமைச்சர் நியமிக்கப்பட்டாலும் வியப்பேதும் இல்லை’ என்று ஒரு சிங்களவரான
ஹிர்ணிக்கா அம்மையாரே கூறி இருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இலங்கையில் ‘ராஜபக்சா இரட்டையர்கள் அரசு கட்டில் ஏறிய பின்பு சுடச்
சுடச் சீனாவோடு செய்து கொண்டுள்ள இந்தியாவுக்கு எதிரான ஓர் உடன்படிக்கையை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்
இந்தியாவின் தெற்கு எல்லையான தமிழ்நாட்டின் கரையில் அமைந்துள்ள
தமிழீழத்தின் நிலப்பகுதிகளான அனலைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில்
‘மின்சார வசதி’ செய்து கொடுப்பதற்கான பொறுப்பைச்  சீனாவிடம்
ஒப்படைத்திருக்கிறது இலங்கை.

இந்தியாவின் தெற்கு எல்லைக் கடலில் – மிக நெருங்கிய இந்தியாவின்
காலடியில் நாளை வந்து இறங்கப் போகும் சீனாவின் ‘மின் பணியாளர்கள்’ சீனப்
பாதுகாப்புத் துறையின் உளவாளிகளாகவோ – படைத்துறைத் தொழில்நுட்பப்
பிரிவைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இந்திய எதிர்ப்பு – சீன சார்பான சிறீலங்கா அரசை அணைத்துக் கொண்டு –
அவர்களைக் கொஞ்சிக் கொண்டு அரசியல் செய்யும் இலங்கை குறித்த வெளியுறவுக்
கொள்கையை இந்தியா கைவிட வேண்டும்.

தமிழீழமே இந்தியாவின் உண்மையான ‘நட்பு நாடு’ என்பதையும், சிங்கள
சிறீலங்கா இந்தியாவின் ‘எதிரி நாடு’ என்பதையும் இந்தியா காலம் தாழ்த்தாமல்
உணர வேண்டும் என்பதே தமிழீழ மக்களின் விருப்பமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply