சிறீலங்கா எதிர்நோக்கும் பொருளாதாரப் போர் – பூகோள அரசியல் உருவாக்கிய களம்

371 Views

ரஸ்யாவுடன் எஸ்-400 என்ற அதி நவீன ஏவுகணை ஒப்பந்தத்தை துருக்கி மேற்கொண்டதால் பதற்றம் அடைந்துள்ளது அமெரிக்கா. ரஸ்யாவுடன் அதிக நெருக்கங்களைக் கொண்ட சிரியா அமெரிக்காவின் போரில் இருந்து தப்பிப்பிழைத்துள்ளதும் நாம் அறிந்ததே.

அமெரிக்காவுடன் முரன்பட்ட ஈரான் ரஸ்யாவுடனும், ஏனைய பிராந்திய வல்லரசுகளுடனும் தனது உறவுகளை வலுப்படுத்திக் கொண்டதால் முன்னர் ஈராக்கில் ஏற்பட்ட போன்றதொரு அழிவில் இருந்து அது தற்போது தன்னைக் காத்துக்கொண்டுள்ளது.

சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கை போல தக்கன பிழைக்கவும், தகாதன அழியவும் செய்கின்றன, அதுவே இயற்கையின் நியதியும் கூட. அதாவது தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளவதுடன், அதனை புரிந்து செயற்படும் இனம் தப்பிப் பிழைப்பதற்கான அதிக தகமைகளைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.

எனவே தான் சிறீலங்கா அரசானது, பிராந்திய வல்லரசுகளையும், உலக வல்லரசுகளையும் அனுசரித்து போவதில் பலத்த சிரத்தை எடுத்து செயற்பட்டுவருகின்றது. சிறீலங்காவின் தற்போதைய நிலையில் ஒரு புள்ளியில் சறுக்கினாலும் பிரிவினை ஒன்றைச் சந்திக்கும் நிலையை அதனைச் சுற்றியுள்ள புறச்சூழல் உருவாக்கிவிடும்.

அவ்வாறான ஒரு புறச்சூழலை முன்னர் உருவாக்கவே 1980 களில் இந்தியா தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சியையும் ஆயுதங்களையும் வழங்கியது.

எனவே தான் 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரின் பின்னர் வெளியுறவுக் கொள்கைகளை சிறீலங்கா மறுசீரமைத்துள்ளது. அதன் விளைவுதான் அம்பாந்தோட்டையில் சீனாவின் துறைமுகமும், மாத்தளையில் அனைத்துலக வானூர்தி நிலையமும் நிறுவப்பட்ட நிலையில் வடபகுதியை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது சிறீலங்கா அரசு. பலாலி வானூர்தி நிலையமும் தற்போது இயங்கும் நிலையை அடைந்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தை சீனாவுக்கு வழங்கிபோதும், அதற்கு அண்மையாக உள்ள கொழும்புத்துறைத்தின் அபிவிருத்தியை யப்பானுக்கும் இந்தியாவுக்கும் வழங்கியுள்ளது சிறீலங்கா அரசு.

sl habour 1 சிறீலங்கா எதிர்நோக்கும் பொருளாதாரப் போர் – பூகோள அரசியல் உருவாக்கிய களம்ஆசியப் பிராந்திய வல்லரசுகளை உள்வாங்கிக் கொண்ட சிறீலங்கா அரசு உலக வல்லரசான அமெரிக்காவின் விடயத்தில் மிகவும் ஒரு நெருக்கடியான நிலையில் உள்ளது. அதாவது போரின் போது எல்லா நாடுகளிடமும் உதவியை பெற்றுக்கொண்ட சிறீலங்கா தற்போது அவர்களை அனுசரித்துப்போவதில் மிகப்பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாக றொய்ட்டர் செய்தி ஆய்வு ஒன்று அண்மையில் தெரிவித்திருந்தது.

யப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் பிரசன்னமும், ஆதிக்கமும் அமெரிக்காவின் பிரசன்னத்தில் பின்னடைவை ஏற்படுத்தி வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். எனவே தான் அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் திட்டம் நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளது.

மிலேனியம் சலஞ் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முற்பட்ட 480 மில்லியன் டொலர்கள் அந்தரத்தில் தொங்குவதால் தற்போது யப்பானிடம் உதவியை கோரி நிற்கின்றது சிறீலங்கா. கொழும்புத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை இந்தியாவுக்கும், யப்பானுக்கும் வழங்கிய சிறீலங்கா அரசு தற்போது யப்பானிடம் 500 மில்லியல் டொலர்களை சாமுராய் பிணை முறி என்ற திட்டதின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள முற்பட்டுள்ளது.

பெரும் கடன் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ள சிறீலங்கா அரசு அனைத்துலக நாணயநிதியத்தின் உதவியை நாடியபோதும், அனைத்துலக நாணயநிதியம் முன்வைத்த நிதிக்கான கட்டுப்பாடுகள் சிறீலங்காவின் பெருளாதாரத்தை மேலும் பாதாளத்திற்குள் தள்ளும் என்றே கருதப்படுகின்றது. அதுவும் ஆறாவது ஆய்வுக்குப் பின்னரே அனைத்துலக நாணயநிதியம் நிதியை வழங்க தீர்மானித்துள்ளது.

88 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை உடைய சிறீலங்கா 55 பில்லியன் டொலர் கடன் சுமையை கொண்டுள்ளது. இந்த கடன் சுமையில் 10 விகித்தை சீனா கொண்டுள்ளதுடன், தற்போதைய சமூராய் நிதி உதவியுடன் யப்பானும் சீனாவுக்கு ஈடாக உயர்ந்துள்ளது.

அதாவது வெளிநாட்டு நிதியில் தான் சிறீலங்கா அரசு இயங்கவேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையே இது காட்டுகின்றது. தென்ஆசிய நாடுகளின் பொருளாதாரம் 5.9 விகித வளர்ச்சியை நோக்கி நகரும்போது சிறீலங்காவின் பொருளாதாரம் 2.7 விகிதமாகவே இருக்கும் என்று கூறப்படும் கருத்துக்கள் சிறீலங்காவின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கைகள் அனைத்துலக மட்டத்தில் குறைந்துள்ளது ஒருபுறமிருக்க பூகோள அரசியலில் சிக்கியுள்ள சிறீலங்கா மீது போட்டியிடும் நாடுகள் ஏற்படுத்தியுள்ள ஒரு பொருளாதார போராகவே இதனை நாம் பார்க்கத் தோன்றுகின்றது.

அதாவது அரச தலைவர் தேர்தலில் வெற்றியீட்டுபவர் யாராக இருந்தாலும் இந்த பொருளாதாரப் போரில் சிக்கும் நபராகவும், அதற்காக வல்லரசுகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியும் நபராகவுமே இருக்க முடியும். தற்போது இந்த போரில் கோத்தபாயா சிக்கியுள்ளார்.

அவ்வாறு ஒரு நிழல் போர் ஒன்று சிறீலங்காவை சூழ்ந்து நிற்குமானால் அது தமிழ் இனம் தனது விடுதலைக்கான பாதையை தேட ஒரு வழியை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இலக்கு இணையம்.

Leave a Reply