சர்வதேச அல்லது கலப்பு நீதிமன்ற விசாரணையை நான் கோரி வருகிறேன் -டாக்டர் மனோகரன்

ஓய்வு பெற்ற வைத்தியரும் 2006 ஜனவரியில் திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தையுமான திரு மனோகரன் அவர்கள், நீதிக்குப் புறம்பான பாரிய மனித உரிமை மீறலுக்கு நீதி கோரி கடந்த 14 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். அவரது இந்தக் காத்திரமான தொடர் முயற்சி தொடர்பாக இலக்கின் நூறாவது சிறப்பிதழுக்காக செவ்வி கண்டோம் .

கேள்வி:

தாயகத்தில் மருத்துவராக மனிதநேயப் பணியாற்றிய நீங்கள், உலக மன்றில் மனித உரிமை கோரிப் போராட நேர்ந்த 14 ஆண்டுகளைப் பற்றி விளக்கமாகக் கூற முடியுமா?

பதில்:

2006 ஜனவரி மாதம் 2ஆம் திகதி எனது மகன் உட்பட ஐவர் சிறீலங்கா அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். தங்களைத் தாக்க வந்த விடுதலைப்புலிகளின் கைக்குண்டு வெடித்ததில் ஐவர் கொல்லப்பட்டனர் என்பதே இராணுவப் பேச்சாளரின் கருத்து. அதற்கு உடனடியாகவே நான் மறுப்புத் தெரிவித்திருந்தேன். பின்னர் வைத்தியசாலைக்கு நான் சென்ற போது அங்கு படையினர் என்னைத் தடுத்தனர். அதனையும் தாண்டி நான் உட்சென்று ஒரு மருத்துவத் தாதியின் உதவியுடன் பிரேத அறைக்குச் சென்றேன். அங்கு என்னுடைய மகன் உட்பட ஐவரின் சடலங்களையும் கண்டேன். எனது மகனின் உடலிலிருந்த காயத்தை வைத்து எனது அறிவுக்கெட்டியவரை அவர் துப்பாக்கியால் அண்மையிலிருந்து சுடப்பட்டிருந்ததை நான் உணர்ந்து கொண்டேன்.

அவ்வேளையில் எனது கைபேசி மூலம் அதனைப் படமெடுத்துக் கொண்டேன். இறந்தவர்கள் விடுதலைப்புலிகளென ஒப்பமிடுமாறு பொலிசார் கேட்டனர். அதனை மறுத்து மறுநாள் நீதிபதியின் பிரேத பரிசோதனையை அடுத்து அண்மையிலிருந்து துப்பாக்கியால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மரண விசாரணையின்போது இந்தப் படுகொலையை செய்தது அதிரடிப் படையினர் தான் என்பதை உறுதிப்படுத்தினேன். மற்றைய இளைஞர்களின் பெற்றோர்களிடமும் பிரேத பரிசோதனை செய்த வைத்தியரிடமும் பெற்றுக் கொண்ட தகவல்களின்படி ஐந்து மாணவர்களின் மரணமும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலையெனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர்  இது தொடர்பான தகவல்களைச்  சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு அறிவித்திருந்தேன்.

எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் நாட்டைவிட்டு வெளியேறும்படி தொலைபேசியிலும் கடிதம் மூலமாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவ்விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மதிப்புக்குரிய கோபி அனானின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அதன்படி எனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி இராணுவத் தளபதிக்கும், சிறீலங்கா அரசாங்கத்துக்கும், பொலீஸ்மா அதிபருக்கும் அறிவித்திருந்தார். அச்சுறுத்தல்கள் தொடர்ந்த நிலையில், 2006 டிசம்பரில் நாட்டைவிட்டு குடும்பத்தோடு வெளியேறினேன். 2007இல் சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் உதவியோடு ஜெனீவாவில் எனது மகனின் படுகொலையை பதிவு செய்துள்ளேன். ஐ.நாவின் மனித உரிமைச் சபையில் எனது மகனின் படுகொலை சம்பந்தமான விவரங்களை பகிரங்கமாகச் சொல்லியுள்ளேன்.

trinco students CI சர்வதேச அல்லது கலப்பு நீதிமன்ற விசாரணையை நான் கோரி வருகிறேன் -டாக்டர் மனோகரன்

அதன்பின் அதற்கான அறிக்கையை தொடர்ச்சியாக மனித உரிமைச் சபையில் சமர்ப்பித்து, நீதிகோரி வருகின்றேன். 2015இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறீலங்கா அரசாங்கமும் ஐ.நா மனித உரிமைச் சபையில் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இது சம்பந்தமான செயற்பாடுகள் யாவும் மார்ச் 2021 வரை பிற்போடப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் சிறீலங்கா அரசாங்கத்திடமிருந்து நீதி கிடைக்காதென்ற காரணத்தால், மனித உரிமை ஆணையாளரிடம், சர்வதேச விசாரணை அல்லது கலப்பு நீதிமன்ற விசாரணையை நான் எழுத்து மூலம் கோரி அதற்கான தொடர் அழுத்தத்தைக் கொடுத்து வருகிறேன்.

கேள்வி:

இன்றைய நிலையில் எமது 5 இளையோரின் தலைமுறையை அழித்தது தமிழின அழிப்பே என்று தனியாக நின்று வாதாடி, அதனை முன்னேற்றகரமான கட்டத்துக்கு நகர்த்தி உள்ளீர்கள். இது சம்பந்தமான உங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்?

பதில்:

இந்த நிகழ்வு இடம்பெற்ற காலம் யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டு, சர்வதேச அனுசரணையுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதேநேரம், சிறீலங்கா ஆயுதப்படையினரே எங்கள் தமிழ் இளைஞர்கள் மீது குண்டுத் தாக்குதலை நிகழ்த்தி விட்டு – மிகவும் அண்மித்த தூரத்திலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு – இவர்களைப் படுகொலை செய்ததை இனவழிப்பின் ஒரு அங்கமாகவே நான் பார்க்கிறேன். அண்மித்த தூரத்திலிருந்த நிராயுதபாணிகளை கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவதற்கன வாய்ப்பிருந்தும், அவர்களைப் படுகொலை செய்ததை இனப்படுகொலையாகவே நான் கருதுகின்றேன். இதேவேளை அவ்விடத்தில் 500இற்கு மேற்பட்ட மூவின மக்களும் கூடியிருந்தார்கள். அதில் தமிழ் இளைஞர்களை மட்டும் தெரிவு செய்து, படுகொலை செய்ததை இனவழிப்பென்றே நான் கருதுகின்றேன்.

14 ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை எதுவித தீர்ப்பும் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்வது பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள், நிகழ்த்தியவர்கள் பெரும்பான்மையினரான சிங்களவர்கள் என்பதால் மட்டுமே. பல தமிழ் இளைஞர்கள் குற்றமிழைத்தவர்களென சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எந்தவித விசாரணைகளுமின்றி பல்லாண்டுகளாக சிறையில் வாடுகின்ற போதும், இந்த 5 மாணவர்களுக்கு எதிராக குற்றமிழைத்த அதிரடிப் படையைச் சேர்ந்த 13 படையினரையும் விசாரணையை முடிவுக்கு கொண்டு வராமல் விடுதலை செய்து, வெளியே சுதந்திரமாக நடமாட அனுமதித்திருப்பதும் இனவழிப்பின் ஓர் அங்கமே. மேற்குறிப்பிட்ட  சகல காரணங்களை வைத்தும் இதனை நான் இனவழிப்பின் ஒரு அங்கமாகவும், மனித உரிமை மீறலாகவும் கருதியே இந்த வழக்கை முன்னெடுத்து வருகிறேன்.

கேள்வி:

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகளைத் தொலைத்து நிற்கும் எம்மக்களுக்கும், தாயகத்திலுள்ள சமூக நிறுவனங்களுக்கும் நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்:

தங்கள் உறவுகளை நீதிக்குப் புறம்பான வகையில் இழந்த மக்கள் வாய்மூடி மௌனமாக இருப்பது மேலும் மேலும் இனவழிப்புத் தொடரவே வழிவகுக்கும். எனவே இதனை இல்லாதொழிக்க துணிச்சலாக முன்வந்து ஐ.நா சபையில் நீதி கேட்டு முறைப்பாடு செய்ய வேண்டும். வழக்குகளை முன்னெடுக்க முடியாமலிருக்கும் சாதாரண பொதுமக்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும், ஒத்தாசைகளையும் வழங்க எமது சமூக முன்னேற்ற நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புக்களும் முன்வந்து காத்திரமாக செயலாற்ற வேண்டும்.

கேள்வி:

எமது அரசியல்வாதிகளுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்:

எமது அரசியல்வாதிகளின் கடமைகளில் முதன்மையானது இப்படியான உறவுகளை இழந்த மக்களை உரிய முறையில் அணுகி, அவர்களுக்கான நீதியை ஐ.நா வரை சென்று பெற்றுக் கொடுக்க வேண்டியதே. தேர்தல் காலத்தில் வீடு வீடாகச் சென்று உங்களுக்கான ஆதரவினைக் கோருகின்ற நீங்கள் அவர்களது துயர்துடைப்புப் பணிகளுக்காகவும் வீடு வீடாகச் சென்று உதவி புரிவதே சிறந்ததென நான் கருதுகின்றேன். உங்கள் பதவிகளுக்காக நேரத்தை செலவிடும் நீங்கள் மக்கள் பணிக்காக அந்த நேரத்தை செலவிடுவது நல்லதென்பதே எனது கருத்து.

கேள்வி:

புலம்பெயர்தேச தமிழர் மனித உரிமை அமைப்புக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்:

புலம்பெயர்ந்து செயற்படும் தமிழ் மனித உரிமை அமைப்புக்கள்; பாதிக்கப்பட்ட எங்களது மக்களுக்காக ஒன்றிணைந்து செயற்றிட்டங்களை உருவாக்கி சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவர வேண்டும். தாயகத்தில் இயங்கும் மனித உரிமை அமைப்புக்கள் சுயாதீனமாகச் செயற்பட முடியாதிருப்பதால், புலம்பெயர் தேசங்களில் உங்களைச் சூழவுள்ள சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை அணுகி தாயகத்தில் எங்கள் மக்கள் அனுபவிக்கும் மனித உரிமை மீறல்களையும் இன்னல்களையும் உயர் மனித உரிமை அமைப்பான ஐ. நா மனித உரிமைச் சபைக்கு அவைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

கேள்வி:

மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் அரசுகளே பெரும்பாலும் மனித உரிமைகளை மீறுகின்றன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை என்னும் அரசுகளின் அரசியல் கூட்டு எப்படி சமநீதி வழங்குமென எதிர்பார்க்கலாம்?

பதில்:

ஐ.நா பாதுகாப்புச் சபையில் உள்ளது போல், வீட்டோ அதிகாரம் ஐ.நா மனித உரிமைச் சபையில் பாவிக்க முடியாது. எனவே எமது மனித உரிமைக் கோரலை தொடர்ச்சியாக அழுத்தமாக முன்னெடுக்கும் போது, நிட்சயமாக நியாயமான தீர்வு மனித உரிமை ஆணையாளரால் வழங்கப்படுமென்பதே எனது திடமான நம்பிக்கையாகும்.