“நல்லிணக்கம் சமாதானத்தை பேசிக்கொண்டு சர்வதேசத்தில் நிதியை திரட்டிக்கொண்டு இங்கு இங்கு தமிழர்கள் தாயகத்தினை கபளீகரம் செய்கின்ற,நில உரிமையினை பறிக்கின்ற,தங்களது வருமானத்தை ஈட்டுகின்ற உரிமையினை பறிக்கின்ற செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் பௌத்த விகாரைகளை அமைத்தல்,நிலங்களை அபகரித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் ஊடாக தமிழர் தாயகத்தினை கபளீகரம் செய்து இந்த நாடு பௌத்த நாடு என்பதை இந்த நாடு நிரூபித்து நிற்கின்றது.எந்தவொரு நாடு எந்த கொள்கையில் பயணிக்கின்றதோ அதன் விளைவுகள்தான் அங்கே அடிமட்டத்தில் வெளிப்படுத்தி நிற்கின்றது.
திணைக்களங்கள் மகாவலி அபிவிருத்தி சபையாகட்டும் அனைத்து கட்டமைப்புகளும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளினாலேயே இயக்கப்படுகி;ன்றன.இவற்றின் பேரிலேயெ அபகரிப்புகள்,
ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன.இதற்கு அவர்களுக்கு பக்கபலமாக பாதுகாப்பு படையினர் இராப்பகலாக இணைந்திருக்கின்றனர். நீதியை நிலைநாட்டவேண்டிய பொலிஸார் நீதிக்கு விரோமாக நடக்கின்றனர்.சிங்கள பிக்கு ஒருவர் தமிழர்களை வெட்டிக்கொல்வேன”; என அடாவடியாக சொல்லிக்கொண்டிருக்கும்போது அவருக்கு எதிராக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை, கைதுசெய்யப்படவுமில்லை.
ஆனால் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து அமைதியான முறையிலே கால்நடைபண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்திருக்ககூடிய சூழ்நிலையிலே அவர்களை வீதியில் வழிமறித்து அடாவடியாக இலங்கை பொலிஸார் ஒரு பயங்கரவாத செயற்பாட்டை முன்னெடுத்திருந்தது. தெற்கிலே ஒரு நீதி வடகிழக்கிலே ஒரு நீதி,சிங்களவர்களுக்கு ஒரு நீதி,தமிழர்களுக்கு ஓரு நீதி என்பது வெளிப்படையாக இந்த நாட்டை துண்டாடியுள்ளது.
இந்த விதத்தில் நாங்கள் இவற்றினை பொறுத்துக்கொண்டிருக்கமுடியாது என அண்மையில் மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட அருட்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பில் கடந்த 57நாட்களையும் தாண்டிய வகையில் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.இந்த போராட்டத்தினை அடக்கியொடுக்குவதற்கு பல்வேறு வகையான யுக்திகள் கையாளப்பட்டுவருகின்றன.கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கான ஆதரவு தளத்தினை இல்லாமல்செய்து அவர்களின் போராட்டத்தினை மழுங்கடிப்பு செய்வதற்கான மிகவும் திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்னறன.
குறிப்பாக இன்று மயிலத்தமடுவில் பொலிஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.ஒரு புறம் பண்ணையாளர்களின் தொடர்ச்சியான போராட்;டங்கள்,பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் மற்றும் பல்வேறு வகையான செயற்பாடுகள் காரணமாக குறித்த பொலிஸ் நிலையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று இந்த பொலிஸ் நிலையம் என்ன நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தினை செயற்படுத்தாமல் அங்குள்ள அத்துமீறிய சிங்கள பயிர்ச்செய்கையாளர்களுக்கு ஆதரவான போக்கினை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பாக இந்த பொலிஸ் காவல் நிலையம் மயிலத்தமடுவில் அமைத்தது தமிழர்களையும் சர்வதேச சமூகத்தினையும் அரசாங்கத்திற்கு வால்பிடிக்கும் அரசின் கைக்கூலிகளையும் ஏமாற்றுவதற்கான செயற்பாடு என்பது தற்போது புலனாகிவருகின்றது.
இன்றைய தினம் மயிலத்தமடு,மாதவனையில் உள்ள கால்நடை பண்ணையாளர்களின் கூடாரங்களுக்கு சென்ற மயிலத்தமடுவில் உள்ள பொலிஸார் அங்குள்ளவர்களின் விபரங்களை கோரியுள்ளதுடன் அவர்களின் அடையாள அட்டையின் பிரதியையும் கோரியுள்ளனர். அத்துடன் அங்குள்ள கால்நடைகளை வெளியில் நடமாடவிடாம் அடைத்துவைக்குமாறும் அங்குள்ள சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களுக்கு கால்நடைகளால் தொந்தரவு ஏற்படுவதாகவும் பொலிஸாரினால் கூறப்பட்டுள்ளது.அவ்வாறானால் அங்குள்ள சட்ட விரோத குடியேற்றவாசிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கா அங்கு பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டது என்ற கேள்வியை இன்று அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் கேட்கின்றனர்.
சட்ட விரோத குடியேற்றக்காரர்களை அப்புறப்படுத்தி அங்கு கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை ஒப்படைக்கவேண்டிய பொலிஸார் இன்று சட்ட விரோத குடியேற்றக்காரர்களுக்கு முழு ஆதரவு வழங்கும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்களத்தின் செயற்பாடுகளும் அவ்வாறான நிலையிலேயே உள்ளது.
அண்மையில் ஜனாதிபதி மட்டக்களப்பு விஜயம்செய்தபோது தமது கால்நடை பண்ணைகளுக்குரிய காணிகளை மீட்டுத்தருமாறு அமைதியான முறையில் கால்நடை பண்ணையாளர்களும் பொது அமைப்புகளும் போராட்டம் நடாத்தியிருந்தன. இந்த போராட்டத்தின்போது அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு அமைதியான முறையில் போராட்டம் நடாத்தியவர்களை உணர்ச்சிவசப்படவைத்து போராட்டத்தினை உக்கிரமடையச்செயது
இன்று அங்கு போராட்டம் நடாத்தியவர்களுக்கும் அந்த போராட்டத்தில் செய்தி சேகரிக்கச்சென்றவர்களுக்கும் எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் அதே தினத்தில் மட்டக்களப்பு நகரில் ஜனாதிபதியின் கட்வுட்டுக்கு தும்புத்தடியினால் அடித்து பொலிஸாரை தாக்கியவாறு போராட்டம் நடாத்திய அத்துமீறிய குடியேற்றவாசிகளுக்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கும் எந்தவித வழக்கும் தாக்கல்செய்யப்படவுமில்லை,
அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுமில்லை.அன்றைய தினம் பொலிஸ் அதிகாரியின் தொப்பியை கழட்டியெறிந்தும் பொலிஸாரின் சின்னங்களை கட்ட முற்பட்டும் பொலிஸார் தரக்குறைவாக பேசியும் போராட்டம் நடாத்திய பிக்குவிற்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் இல்லை.ஆனால் தமது நில உரிமையினையும் தமது பறிக்கப்பட்ட காணி கோரி அமைதியான முறையில் போராட்டம் நடாத்தியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்றுதான் கடந்த 02ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான போராட்டம் முன்னெடுத்தபோது அங்கு எந்தவிதமான பொலிஸ் பிரசன்னமும் இல்லாமல் அவர்களது போராட்டத்திற்கு எந்த இடையுறும் இல்லாமல்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திலிருந்து சித்தாண்டி வரையில் மாணவர்கள் பேரணியாக வந்தபோதும் எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்காத பொலிஸார் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் முன்னெடுக்கவந்தபோது அதனை தடுப்பதற்கு முயற்சிகள் எடுத்தது ஏன் என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடாத்துவதற்கு முந்தைய தினம் குறித்த போராட்டத்திற்கு தடைவிதிக்குமாறு ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் சந்திவெளி பொலிஸாரினால் கோரப்பட்ட நிலையில் போராடும் ஜனநாயக உரிமையினை யாரும் மறுக்கமுடியாது என நீதிமன்றம் தடைவிதிப்பதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் மறுநாள் பல்கலைக்கழக மாணவர்கள் சித்தாண்டிக்கு அருகில் உள்ள முறுக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன்பாகவிருந்து அமைதியான முறையில் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.
அமைதியான முறையில் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் சித்தாண்டியை நெருங்கிய சந்தர்ப்பத்தில் அங்குவந்த சந்திவெளி பொலிஸார் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டபோது அங்கு மாணவர்கள் மத்தியில் சற்று குழப்பம் ஏற்படும் சூழ்நிலையிருந்தது.
எனினும் மாணவர்கள் குறித்த பேரணியை அமைதியான முறையில் மேற்கொண்டுபோராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்து அங்கு போராட்டக்காரர்களுடன் இணைந்து வீதியில் போக்குவரத்து இடையுறு ஏற்பாடாமல் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து போராட்டங்களை முன்னெடுத்தபோதும் அங்கு பொலிஸார் அச்சுறுத்தும் வகையிலேயே செயற்பட்டதை காணமுடிந்தது.
அப்பகுதியில் பெருமளவான கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு அங்கு போராட்டம் நடாத்துபவர்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதும் மாணவர்கள் பொறுமையாக மிகவும் அமைதியான போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இவ்வாறான நிலையில் அப்பகுதியில் குறித்த மாணவர்களினை போராட்ட இடத்தில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டபோதிலும் அப்பகுதியில் பெருமளவான ஊடகவியலாளர்களிருந்த காரணத்தினால் பொலிஸார் கைதுசெய்யும் செயற்பாடுகளை தவிர்த்திருந்தனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்ற நிலையில் அங்கிருந்து ஊடகவியலாளர்கள் கலைந்துசென்ற பின்னர் அவர்களை துரத்திச்சென்று சந்திவெளி பொலிஸார் மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.அவர்களை கைதுசெய்து பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டில் தமிழ் மக்கள் பொலிஸ் மீதும் இலங்கையின் சட்டத்தின் மீதும் வைத்திருந்த நம்பிக்கையினை முற்றாக அழித்திருக்கின்றது.இலங்கையின் ஜனநாயக வரம்புகள் என்பது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வேறுபட்டது என்பதை இலங்கை காவல்துறை நிரூபித்துள்ளது.
இன்று புலம்பெயர் தேசத்தில் உள்ள மக்களிடமே கிழக்கின் இருப்பு தங்கியுள்ளது. சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் அழுத்தங்களும் செயற்பாடுகளுமே கிழக்கினை பாதுகாக்கும் ஆயுதமாக மாறும் என்பது எங்களது நம்பிக்கையாகும்.இன்று முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் முற்றிலுமாக மனித உரிமைகளுக்கே மாறானதாக மாறியிருக்கும்போது இந்த நாட்டில் தமிழ் மக்கள் எவ்வாறு நீதியைப்பெற்றுக்கொள்ளமுடியும் என்ற நிலையுருவாகியுள்ளது.
இவற்றினை கருத்தில்கொண்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது. மட்டக்களப்பில் மயிலத்தமடு,மாதவனையில் அத்துமீறிய குடியேற்றக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு கால்நடை பண்ணையாளர்களுக்கு நீதி வழங்கப்படும் வரையில் எனது எழுத்துக்கள் என்பது அவர்கள் சார்ந்ததாகவேயிருக்கும்.