சந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக் கூத்தாட்டம் -சுந்தரலிங்கம் சஞ்சீபன்

725 Views

ஈழத்து தமிழர் பாரம்பரிய கலைகள் ஈழத்தமிழர்களின் அடையாளமாகவும், பண்பாட்டுக் கருவூலமாகவும், சமுதாய அரங்கச் செயற்பாடாகவும், கொண்டாடி மகிழ்வதற்கான வெளியாகவும்  அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்தேர்ச்சியான  இயங்கியலுடன், வலுவான நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

FB IMG 1604636126013 சந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக் கூத்தாட்டம் -சுந்தரலிங்கம் சஞ்சீபன்

பாரம்பரியமாக, சந்ததி சந்ததியாக சிறப்புப் பெற்ற ஆளுமைகளிடம் இருந்து கையளிக்கப்பட்டு, பேணிப்பாதுகாத்து வருகின்றதான ஓர் கலை செயற்பாடுகளே எமது பாரம்பரிய கலை வடிவங்களாகும். இக் கலைப்படைப்புக்களில் உள்ளதான நுணுக்கங்களும், தொழில்நுட்ப முறைமையும் இன்றைய உலகில் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியும் உள்ளது. அந்த வகையிலே தமிழர்களின் பாரம்பரிய அரங்க முறைமைகளில் கூத்துக் கலையானது மிக மிக முக்கியமானதாகும்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே, மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மக்களால் பண்டைய காலந்தொட்டு பாரம்பரியமாக ஆடப்பட்டு வரும் கூத்து, தங்கள் சமூகத்தின் மண் வாசனையை பிரதிபலிப்பதாக  காணப்படுகின்றது.

FB IMG 1604636117287 சந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக் கூத்தாட்டம் -சுந்தரலிங்கம் சஞ்சீபன்

அத்துடன் எம்மவர்களிடம் இன்றும் செழிப்புடன் திகழ்வதற்குக் காரணம், எமது காரணநாயகர்களான அண்ணாவிமார்களும், கூத்துப்புலவர்களும், ஏட்டண்ணாவிமார்களும், மேஸ்திரிமார்களும், முன்னீட்டுகாரர்களும் எனப் பல ஆளுமையாளர்களையே சாரும். இவர்களின் வழி வந்தவர்களால் மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் இன்றும் கூத்துக்கள் ஆடப்பட்டுக்கொண்டு வருகின்றன.

அவற்றுள் வசந்தன் கூத்து, தென்மோடி, வடமோடி கூத்து,  மகிடிக்கூத்து, புலிக் கூத்து போன்றவை மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற கூத்துக் கலை வடிவங்களாக விளங்குகின்றன. இவ் ஒவ்வொரு கூத்தும், ஆடப்படும் அச் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும்.

மகிடி என்பது மந்திர, தந்திர விளையாட்டுக்களைக் குறித்து நிற்கின்றது. ஒரு குழுவை இன்னொரு குழு தமது மந்திர, தந்திரங்களால் வெற்றி கொண்ட கதையை மகிடிக்கூத்து  உள்ளடக்கமாகக்  கொண்டிருக்கும். ஏனைய கூத்துக்களைப் போல் இது பழகி ஆடப்படும் கூத்தன்று. இதற்கென்று எழுத்துப் பிரதியோ, திட்டவட்டமான உரையாடலோ இல்லை. எனினும் இதற்கென்று பழைய கதை உண்டு. அக்கதையே இங்கு பாரம்பரியமாக  நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அத்தோடு தற்காலத்தில் சமகால சமூக பிரச்சினைகளையும் இதில் உள்ளடக்குகின்றது.

FB IMG 1604636123502 சந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக் கூத்தாட்டம் -சுந்தரலிங்கம் சஞ்சீபன்

மகிடிக்கூத்து சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு மக்களை மகிழ்விக்கும் நோக்கோடும், பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் நோக்கோடும் ஆடப்படும் ஒரு கேளிக்கைக் கூத்தாகும். இதில் நடிகர்கள் தம் நடிப்பாலும், அரங்கச் சேட்டைகளாலும், சொற்சாதுரியத்தாலும் பார்ப்போரை எந்நேரமும் சிரிப்பில் ஆழ்த்துவர். அங்கதச் சுவையை வெளிப்படுத்துவதே இதன் முக்கிய பண்பாகும்.

கிராமிய மக்களின் மன உணர்வினையும், விரசமான உரையாடல்களையும் அதிகம் கொண்டனவாக இவ் மகிடிக்கூத்து காணப்படுகின்றது. ஈழத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களான மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலெல்லாம் மகிடிக்கூத்து ஆடப்படுகின்றது. எனினும் மட்டக்களப்பில் ஆடப்படும் மகிடிக்கூத்தானது, கதையிலும் அரங்க அளிக்கையிலும் வித்தியாசமானதும் தனித்துவமுடையதுமாகும்.

FB IMG 1604636120319 சந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக் கூத்தாட்டம் -சுந்தரலிங்கம் சஞ்சீபன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மட்டக்களப்பில் மூன்று வகையான மகிடிக் கூத்துக்கள் ஆடப்பட்டு வருவதாகக் அறிய முடிகின்றது. முதலாவது மகிடிக்கூத்தில் மலையாள தேசத்திலிருந்து தன்மனைவி காமாட்சியுடன் மட்டக்களப்புக்கு வரும் ஒண்டிப்பலி என்பவன் வருகின்ற வழியில் சில குறவர்களையும் சேர்த்துக் கொண்டு வருகின்றான்.

ஓரிடத்தில் மந்திர தந்திர விளையாட்டுக்கள் நடப்பதையறிந்து அங்கு சென்று மந்திர தந்திர விளையாட்டுக்களில் மனைவி காமாட்சியின் துணையுடன் ஈடுபட்டு, பல துன்பங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறுகின்றான்.

இரண்டாவது வகை மகிடிக்கூத்தில் மந்திர தந்திர விளையாட்டுக்களை வேடன், வேடுவிச்சி, வெள்ளைக்காரன், வெள்ளைக்காரி வந்து பார்ப்பது போலவும், இடையிற் புலி தோன்றி புலி ஆட்டம்  ஆடுவது போலவும் இம்மகிடி அமைப்புண்டு.

மூன்றாவது வகை மகிடிக்கு ஏட்டுப்பிரதி உண்டு. இதில் இரண்டு கதைகள் வருகின்றன. ஒன்று குறவன் குறத்தியரான சிங்கன சிங்கியின் கதை. இன்னொன்று அக்கா தங்கையரான காமாட்சி மீனாட்சியிட்சியினதும், மீனாட்சியின்  மகனாகக் கூறப்படும் அகத்தியர் தமது தகப்பனை தேடிக் காசிக்குச் செல்வதுமாக அமைந்த கதையாகும்.

இவ்வாறாக மூன்று வகையான கதையமைப்பைக் கொண்ட மகிடிக் கூத்துக்களும் மட்டக்ககளப்பு கிராமங்கள் தோறும் ஆடப்படுகின்றன. எனினும் இவற்றைவிட வித்தியாசமான கதையம்சம் கொண்டதொரு மகிடிக்கூத்து கோறளைப்பற்று  தெற்கு பிரதேச பிரிவில் ஆடப்பட்டு வருகின்றது. அக்கூத்து பற்றி விரிவாக அறிவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

கோறளைப்பற்று  தெற்கு  பிரதேசமானது  தனித்துவமான பல பண்பாட்டு பாரம்பரியங்களை இன்றும் பேணி வருகின்றதான  மக்கள் கூட்டத்தினை உடையதொரு பிரதேசமாகும். இங்கு கும்மி, கோலாட்டம், கரகம்  முதலிய கிராமிய  நடனங்களும், வசந்தன், மகிடி, தென்மோடி, வடமோடி  போன்ற கூத்து வகைகளும் இங்குள்ள கிராமங்கள் தோறும் ஆடப்பட்டு வருகின்றன.

அந்தவகையிலே இக்கூத்தை தொன்று தொட்டு பேணிப்பாதுகாத்து, பல கிராம  மக்கள் மத்தியில் ஒற்றுமையோடும் விசுவாசத்தோடும் நிகழ்த்தி  வரும் கிராமமாக ‘சந்திவெளி’ கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சித்திரை வருடப் பிறப்புக்காலம் வந்ததும் மகிடிக்கூத்து களைகட்ட ஆரம்பமாகிவிடும்.

IMG 20180421 151405 சந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக் கூத்தாட்டம் -சுந்தரலிங்கம் சஞ்சீபன்

இங்குள்ள கலைஞர்கள் குறிப்பிட்ட வருடம் மகிடிக் கூத்தாடுவதாக தீர்மானம் நிறைவேற்றியதும் முதலில் வீடு வீடாக சென்று இதற்கு உரிய நிதியினை வசூலிப்பது இதன் முதற் செயற்பாடாகும். பின்னர் உரிய நாள் வந்ததும் சந்திவெளி ஆலயடிப் பிள்ளையார் கோவிலின் அருகில் உள்ள திறந்தவெளியில் முதலில் இடம் பெற்றது. தற்காலத்தில் ஜீவபுரம் பத்தினி அம்மன் ஆலய முன்றலின் திறந்தவெளியில் இதற்குரிய அரங்கினை அமைத்து மக்களின் பேராதரவுடன் இம் மகிடி கூத்தை சிறப்பாக நிகழத்துவர்.

 இம் மகிடிக் கூத்தாடுவதற்கென்று குறிப்பிட்ட குழுவினர் இக்கிராமத்தில் உள்ளனர். இவர்களே தொன்றுதொட்டு இக் கூத்தினை நிகழ்த்தி வருபவர்களாவர். ஆரம்பத்தில் இம் மகிடிக்கூத்தை  முன்னின்று நடாத்தி வந்தவர் வேலுப்பிள்ளை பாலிப்போடி என்பவராவார். அவர் இறந்த பின்னர் அவரது மகனான பாலிப்போடி கமலநாதன் என்பவரே இப்பொழுது இக்கலையை முன்னெடுத்து வருகின்றார்.

அவருடன் இணைந்து அவரது தம்பியான பாலிப்போடி தவராசா என்பவரும் மற்றும் சின்னத்தம்பி பொன்னுத்துரை,  வடிவேல் மகேந்திரன், வியாகம் பூசாரி பத்தக்குட்டி, கணவதிப்பிள்ளை யோகநாதன், சிவலிங்கம்  கந்கசாமி, இராசரெத்தினம் அச்சுதன், குழந்தைவேல் சுதாகரன் போன்ற கலைஞர்களும் இக்கூத்துக் கலையினை இங்கு தற்பொழுது வளர்த்து வரும் கலைஞர்களாக உள்ளனர்.

இக் கூத்துக்கென்று தனித்துவமான கதையமைப்பு, அரங்கமைப்பு, அளிக்கை முறை என்பன உண்டு. இக்கதையில் பிராமணர்கள் வேள்வி யாகம் செய்யும் இடத்திற்கு வந்து சேரும் குறவர்கள் அப்பிராமணர்களுடன் மந்திர தந்திர விளையாட்டுக்களில் ஈடுபட்டு, இறுதியில் தோல்வி அடைவதாகவும் பிராமணர்கள் குறவர்களை வெல்வதாகவும் அமைந்துள்ளது.

இதில் கதையம்சம் என்பதை விட, மந்திர தந்திர விளையாட்டுக்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும் காண்கின்றோம். இதில் குறவர்களின் அங்க அபிநயங்கள், அவர்கள் மக்களுடன் கதைத்து பகிடிகள் செய்தல், மக்கள் அவர்களை கேலி செய்தல், அதற்கு அவர்கள் புரியாத மொழியில் பதில் சொல்வதுமாக இக் கூத்து கதையம்சம் அமையும்.

இதன் அரங்கமைப்பானது ஏனைய மகிடிக் கூத்துக்களில் இருந்து வித்தியாசமானதாகும். நிகழ்வுகளுக்கு முந்திய தினம் அமைக்கப்படும் அதன் அரங்கு பின் வரும் அமைப்பை கொண்டிருக்கும். இவ்வரங்கு நீள் சதுரமாகவும் நான்கு பக்கம் பார்வையாளரைக் கொண்ட திறந்தவெளி அரங்காகவும் இருக்கும். இதன் நான்கு பக்க எல்லைகளிலும் கம்பு நட்டு கயிறு கட்டிக்கொள்வர்.

அரங்கின் இடப்பக்கமாக குறவர்கள் வருவதற்கான ஒரு பாதை அமைக்கப்பட்டிருக்கும். இப்பாதை ஊடாக  குறவர்கள் வந்து அரங்கின் உள் செல்ல அரங்கின் முன் பகுதியில் ஒரு வாயில் அமைக்கப்பட்டிருக்கும். அரங்கின் உட்பகுதியினை நோக்குகின்ற வேளை அங்கு  பின் பக்கமாக மூன்று மடுக்கள் காணப்படும். இவை ஒவ்வொன்றும் சற்சதுர அமைப்பில் 3 அடி ஆழத்தில்  குழி தோண்டப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு மடுவையும் சுற்றி கம்புகள் கட்டி சேலையால் மறைக்கப்பட்டிருக்கும். அத்துடன் இம் மூன்று மடுக்களையும் இணைக்கும் வண்ணம் ஒரு சுரங்கப்பாதையும் காணப்படும். இதன்மேல் பகுதியை பலகை போட்டு மூடி அமைத்திருப்பர்.

அரங்கின் நடுப்பகுதியில் கொடிமரம் நீண்டு காணப்படும். கொடிமரத்திற்கு ‘கமுகு மரத்தை இலையுடன் வெட்டி வந்து நட்டிருப்பர். இக்கொடி மரத்தில் வலது பக்கத்தில் சுழலும் வண்ணம் வண்டிச்சில்லில் இராஜகும்பம் வைக்கப்பட்டிருக்கும். இதன் சுழல் கயிற்றை வெளித் தெரியாவண்ணம் நிலத்திற்கு கீழால் கொண்டு சென்று அரங்கின் எல்லையில் வைத்துக் கொள்வர். கொடிமரத்தின் முன்னால் இரண்டு பக்கமும் மூன்று கும்பங்களாக ஆறு கும்பங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.

இவையே இங்குள்ள அரங்கப் பொருட்களாகும். நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் நடிகர்களான முனிவரும்,  சீடரும் முன்மடுவின் உள் அமர்ந்திருக்க இராஜகும்பத்தில் தலமைப் பிராமணரும் ஆறுகும்பத்திற்கும் ஆறு பிராமணர்களும் அமர்ந்து கொள்வர். இவர்களை விட நிகழ்ச்சி நடப்பனையாளர் (நிகழ்ச்சி நடத்துநர்) ஒருவரும்  உடையாரும் சீடனுமாக இருவரும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு நிற்பர்.

குறிப்பிட்ட நாளன்று பி.ப. 3.00 மணியளவில் நிகழ்வுகள் தொடங்கும். முதலில் பூசாரி வந்து கொடிமரத்திற்கும்,  இராஜகும்பத்திற்கும் பூசை செய்வார். பின்னர் வேப்பிலையை ஓதி நான்கு மூலையிலும் காவலாக கட்டி விடுவார். அதன்பின்னர் நிகழ்வு தொடங்குகின்றது. முதலில் ஒருவர் தவில் அடிப்பார். அப்போது குறவர்கள் அரங்கிற்குள் வருவார்கள்.

இவர்கள் உடம்பெல்லாம் கரியைப் பூசிக்கொண்டு கந்தல் துணியைக் கட்டிக் கொண்டு மூட்டை முடிச்சுகளுடனும் வருவர். இவர்களில் இருவர் பெண்களாவர். (ஆண்களே பெண்கள் வேடமேற்றிருப்பர்.) அவர்கள் குறத்திகள் போன்று உடை ஒப்பனை செய்து கொண்டு வருவர்.  இவ்வாறு வந்து சேரும் குறவர்கள்  பிராமணர்கள் வேள்வி செய்யும் இடமான அரங்கிற்குள் வந்ததும் அங்கும் இங்கும் திரிந்து புதினம் பார்ப்பார்.

அப்போது நிகழ்ச்சி நடப்பனையாளர் “ஏய் குறவர்களே இது முனிவர் யாகம் செய்யுமிடம்; உங்களுக்கு இங்கு என்ன வேலை; சென்று விடுங்கள்.” என்பார். அதற்கு குறவர்கள் இந்த யாகத்திற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்; நாங்கள் மலையிலிருந்து வருபவர்கள்; எங்களுக்கும் மந்திர தந்திரங்கள் தெரியும்; நாங்கள் இந்த யாகத்தை அழிப்போம் என பதிலளிப்பர்.

இவ்வண்ணமாக உரையாடிக்கொண்டு குறவர்கள் முனிவர் இருக்கும் மடுவுக்குப் பக்கத்தில் செல்லும் போது நடத்துநர்,  “இதுக்குள்ள முனிவர் இருக்காருடா” என்பார்.  அப்போது முனிவரின் சீடன் பாய்ந்து மேலே வருவார். பின்பு அவர் மடுவின் முன்னால் தேங்காய் ஓதி வெட்டுவார். வெட்டியதும் பெரிய முனிவரும் மேலே வருவார். நீளமான சடாமுடியும் நீளமானதாடியும் உடம்பில் புள்ளிகள், வேட்டியை கொடுக்காகக் கட்டிக் கொள்வது என்பன முனிவர்களது ஒப்பனையாகும்.

இவர்களுக்குரிய ஒப்பனை மடுவுக்குள்ளேயே நடக்கும். முனிவர் வெளியே வந்ததும் உடனே நடத்துனர் முனிவரிடம் சென்று “இந்தக் குறவர்கள் உங்கள் யாகத்தை அழிக்கப் போகிறார்களாம்.” என்பார். அதற்கு முனிவர் “அப்படியா அதையும் பார்ப்பமே!” என தயாராகுவார். முரண்பாடு தொடங்கும்.

இதற்கிடையில் நிகழ்வுகளை நகைச்சுவையாகக் கொண்டு செல்வதற்காகவும் நடைபெறுபனவற்றை பார்ப்போருக்கு அவ்வப்போது தெரியப்படுத்துவதற்காகவுமாக உடையார் என்னும் பாத்திரம் தொழிற்படும். இவர் பாரதியார் போல கோட்சூட் போட்டு தலைப்பாகை மீசையும் வைத்துக் கொள்வார். இவர் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் இவர்கள் இப்படி செய்து விட்டார்கள்.

அவர்கள் அப்படி செய்து விட்டார்கள் என பார்ப்போருக்கு அறிவிப்பதுடன், இவர்கள் இப்படி செய்வதால் இவர்களிலே எழுதவா? மேலே எழுதவா? என வழக்கு எழுதுபவர் போல பார்ப்பவரைக் கேட்பார். அவர்கள் கீழ் எழுதச் சொன்னால் கீழே குனிந்து பின்பக்கம் எழுதுவதும், மேல் எழுதச்சொன்னால் மேலே கைகளை உயர்த்தி எழுதுவதும் நகைச்சுவை பயப்பதாக இருக்கும்.

இவருடன் இவரது சீடனும் இணைந்து நகைச்சுவையைத் தோற்றுவிப்பான். இவரது சீடன் இவருக்குப் பின்னால் கதிரையுடன் திரிவான். இவரை இருக்கச் சொல்வான். இவர் இருக்கும் போது கதிரையின் பக்கம் இழுப்பான். அப்போது உடையார் கீழே விழுவார். இவ்வாறாக இவர்களிருவரும் நிகழ்வு முடியும் வரை அரங்கில் நின்று நகைச்சுவை புரிவர்.

குறவர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையே தோன்றிய முரண்பாட்டில் முதலில் குறவர்கள் மந்திரம் சொல்லி முன்னாலிருக்கும் இரு கும்பங்களையும் எடுத்து விடுவர். (ஒவ்வொரு கும்பத்தையும் எடுக்கும் போது அருகில் உள்ள கும்பத்திற்குரிய பிராமணர்கள் பின்னால் விழ வேண்டும். தலைமைப் பிராமணர் அவர்களை தண்ணீர் தெளித்து எழுப்பி விடுவார். பின்னர் அவர்கள் அங்கிருந்து அகலுவர்.) இவ்வாறு கும்பங்களை எடுத்ததும் கோபம் கொண்ட முனிவர் குறவர்களுக்கு குளவிகளை ஏவி விடுவர். அப்போது குறப்பெண்கள் தவிர மற்றையோர் குளவி குத்துவது போல் விழுந்து அபிநயப்பார்கள்.

அப்போது குறப்பெண்கள் “இதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம். மற்றவர்களை நாங்கள் எமது சிறுநீர் கழித்து எழுப்பி விடுவோம்” எனக் கூறி தங்கள் இடுப்பில் கட்டியுள்ள நீர் போத்தல்களால் தண்ணீர் பாய்ச்சி எழுப்பி விடுவர். எழுந்ததும் குறவர்கள் மகிழ்ச்சியுடன் மேலும் இரு கும்பங்களை எடுப்பது மட்டுமன்றி முனிவர்கள் இருவருக்கும் குளவிகளையும் குத்த வைப்பர். அப்போது முனிவர்களும் குளவி குத்துவது போல் அபிநயிப்பார்கள்.

IMG 20201028 WA0049 சந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக் கூத்தாட்டம் -சுந்தரலிங்கம் சஞ்சீபன்

அவ்வேளையில் தலைமைப் பிராமணர் சென்று மந்திரம் சொல்லி அவர்களை விடுவிப்பார். இதற்கிடையில் நகைச்சுவைப் பாத்திரமாக தொழிற்படும் நடத்துநர் முனிவர்களிடம் சென்று நகைச்சுவையாக “என்ன குளவி குத்த ஏவி விட்டார்களாமே!” என்று கேட்பார். அதற்கு முனிவர்கள் “இல்லை இல்லை நாங்கள் சும்மா விளையாடினோம்” என்பார்கள்.

அதன் பின்னர் முனிவர்களிருவரும் குறத்திகளிருவரையும் கண்டு அவர்களில் மையம் கொள்வர். குறவர்களை பழிவாங்கும் நோக்கோடு மந்திரம் சொல்லி வசியம் செய்து குறத்திகளிருவரையும் முனிவர்கள் கூட்டிச் சென்று, பின்னாலுள்ள இரு மடுக்களிலும் மறைத்துக் கொள்வர்.

அப்போது கவலையுடன் குறத்திகளை தேடித்திரியும் குறவர்களுக்கு, நடத்துனர் குறத்திகள் எங்குள்ளனர் எனக் காட்டுவார். இருவரும் முனிவர்களுடன் மடுவுக்குள் சல்லாபிப்பதைக் கண்ட குறவர்கள் மந்திரம் ஓதுவர். அப்போது குறத்திகளிருவரும் முனிவர்களைத் தூக்கி வந்து வெளியே போட்டு அடித்து விட்டு குறவர்களுடன் சேர்ந்து கொள்வர்.

பின்னர் குறவர்கள் ஐந்தாவது ஆறாவது கும்பத்தையும் எடுத்து விடுவர். அப்போது நடத்துநர் முனிவர்களிடம் சென்று “எல்லாக் கும்பத்தையும் எடுத்து விட்டார்கள். இராஜ கும்பம் மாத்திரமேயுள்ளது.” என்பார். உடனே முனிவர் மந்திரம் சொல்லியதும் குறவர்கள் இருவர் இருவராக பின் பக்கம் ஓடுவர். அப்போதும் குறத்திகள் தமது போத்தல் தண்ணீரால் தெளித்து குறவர்களை விடுதலை செய்து விடுவார். பின்பு குறவர்கள் இராஜகும்பத்தை எடுக்கச் செல்வர்.

அப்போது முனிவர்களின் மந்திரத்தால் இராஜகும்பம் சுழலும். (அரங்க எல்லையில் ஒருவர் மறைவாக இருந்து இதனை சுழல வைப்பார்.) குறவர்கள் ஓதி எறிய இராஜகும்பம் நிற்கும். பின்னர் குறவர்கள் இராஜகும்பத்தையும் எடுத்து விட தலைப்பிராமணர் பின்னால் விழ சீடர் அவரை தண்ணீர் தெளித்து எழுப்பி விடுவார்.)  இறுதியாக குறவர்கள் கொடிமரத்திற்கு செல்வர். அங்கு சென்று “இம்மரத்தை நாங்கள் பிளப்போம்.” என்பார்கள்.

அதற்கு முனிவர்கள் “அவ்வாறு பிளந்தால் அதை நாங்கள் ஒட்டவைப்போம்.” என்பார்கள். இது அங்கே செய்து காட்டப்படும். (மரம் ஏற்கனவே பிளந்து ஒட்டுவதற்கேற்ப தயார் படுத்தப்பட்டிருக்கும்.)  அது முடிந்ததும் “கொடிமரத்திற்கு கீழ் மடையிலுள்ள சாராயத்தையும் கள்ளுப் போத்தலையும் நாங்கள் எடுப்போம்” என குறவர்கள் கூற,  அதற்கு முனிவர்கள் “அவ்வாறு எடுத்தால் நாங்கள் உங்களை கொடி மரத்துடன் இணைத்துக் கட்டுவோம்” என்பார்கள். அப்போது குறவர்கள் சாராயம், கள்ளை எடுக்கச் செல்ல முனிவர்கள் நடத்துனர்கள் எல்லோரும் சேர்ந்து குறவர்களை கம்பத்துடன் கட்டுவர்.

IMG 20201028 WA0050 சந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக் கூத்தாட்டம் -சுந்தரலிங்கம் சஞ்சீபன்

கடைசியில் குறவர்கள் முனிவர்களிடம் மன்னிப்புக் கேட்டு “உங்கள் பெயர் சொன்ன இடத்திற்கும் நாங்கள் இனி வரமாட்டோம். இது சத்தியம் எங்களை விட்டு விடுங்கள்” என்பார்கள். அதன் பின்னர் குறவர்கள் விடுதலை செய்யப்படுவர். இவ்வாறானதொரு மகிடிக்கூத்து ஏனைய பிரதேச மகிடிக் கூத்திலிருந்து தனித்துவமானதொரு கூத்தாக நடத்தப்பட்டு வருகின்றது.

இக்கூத்தில் பங்குபற்றும் கலைஞர்கள் தொடர்ந்தும் அதே பாத்திரத்திங்களேற்று நடித்து வருகின்றனர். பேச்சுக்கள் முன்னாயத்தம் இன்றி நகைச்சுவையை வெளிப்படுத்தும் வண்ணமாக அமைகின்றது.

இந்த வகையில் ஈழத்து தமிழர் தம் பண்பாடுகளும் பாரம்பரிய கலைகளும் மறைந்து கொண்டு வரும் சினிமாவில் மோகம் கொள்ளும் இந்தக் காலகட்டத்தில், கோறளைப்பற்று பிரதேச பிரிவில் இம்மகிடிக் கூத்துக் கலையானது சிறப்பாக ஒவ்வொரு வருடமும் மக்களை ஒன்றுபடுத்தி ஓர் சமூக ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தி  நடாத்தப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும். இவ் மகிடிக்கூத்தானது இவ்வாறாக வெற்றியுடன் நடைபெற மிக முக்கிய காரணம் இளைஞர்களின் ஈடுபாடானது மிக மிக வரவேற்கத்தக்கதாக காணப்படுகின்றமையே ஆகும்.

இம் மகிடிக் கூத்துக்கலையை வளர்க்கும் கலைஞர்களைத் தொடரந்தும் நாம் ஊக்கப்படுத்த வேண்டியது நம் எல்லோரதும் கடமையும் ஆகும். அத்தோடு பிரதேசத்திற் காணப்படும் ஏனைய கூத்து வடிவங்களையும் பயில் நிலைக்கு கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகும். அத்தோடு தொடர்ந்து எதிர்கால சந்ததியினரின் கைகளில் ஒப்படைக்க வேண்டியமை தலையாய கடமையாகும்.

Leave a Reply