“இலங்கையில் ஜனநாயகம் இல்லை“ – கொளத்தூர் மணி

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால்  முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் பின் இன்று வரையிலும் அதே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இன சுத்திகரிப்பு வேலைகளிலும் சத்தங்களின்றி செயற்பட்டு வருகின்றது.

அதே நேரம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசாக உலகின் கவனத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முனைகிறது.

அவ்வாறான சலுகைகளில் ஒன்றுதான் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நினைவு கூரல் அனுமதிகள். ஆனால் தற்போது  அடக்குமுறைக்கு துணைபோகும்  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிரிவினை வாதத்தை தூண்டல் அல்லது புலிகளை மீள்கட்டியெழுப்புதல் நடவடிக்கை என கூறி தனிப்பட்ட நபர்கள், மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு பெற்று நினைவுகூரல் நடவடிக்கைக்கு தடை விதித்தல் மூலம் அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாக தொடர்ந்தும் மீறி வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் ‘இலக்கு மின் இதழ்’ கண்ட நேர்காணலை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.

“தம் இனத்தின் முன்னோர்களுக்கும், தம் இனத்தின் வீரர்களுக்கும், அவர்கள் மறைவுக்குப் பின்னர் அவர் தம்  பணிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்த நடுகல் நாட்டுவது தமிழினத்தின் ஓர் சீரிய மரபாகும்.

நடுகல்லே அன்றி “நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”  என்று புறநானூறு கூறுகின்றது.

தம்முயிரைக் கருதாமல் மக்கள் நல்வாழ்வுக்கு, அமைதியான, கண்ணியமான சுதந்திர வாழ்க்கை வாழ்வதற்கு இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு தங்களது நன்றிகளைக் காட்ட, மரியாதை செலுத்த அவர் தம் கல்லறையில் கூடுவது என்பது மானுட குலத்திற்கு உள்ள ஒரு பண்புமாகும்.

அதன் அடிப்படையில்தான் ஈழத்திலும் மக்களின் உரிமை வாழ்வுக்கு உயிரிழந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து தமது நன்றியை, தமது  மரியாதையைச் செலுத்த உருவாக்கப்பட்ட நாள்தான் மாவீரர் நாள் ஆகும்.

உலக நாடுகள் அனைத்திலும், எந்த தடை சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், மத ஊர்வலங்களுக்கும், திருமண ஊர்வலங்களுக்கும், இறுதி ஊர்வலங்களுக்கும் விதிவிலக்கு அளித்தேதான் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் தமது நன்றி உணர்வைக் காட்ட ஒன்று கூடுவதற்கு கூட தடை விதிப்பது என்பது சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு மட்டுமே உள்ள ஆணவமாகவே இந்த தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

எங்கள் கொளத்தூர்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சி எடுத்த புலியூரில் எல்லா பயிற்சிப் பாசறைகளுக்கும்  பொறுப்பாக இருந்த லெப்.கேணல் பொன்னம்மான் நினைவாக நாங்கள் எழுப்பிய ஒரு நினைவுக் கூடம் 1990ஆம் ஆண்டு தான் திறக்கப்பட்டது.

1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்தது. ராஜீவ் படுகொலையில் தமிழ்நாட்டில் பல்வேறு தடை ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தபோதும்கூட, நாங்கள் பொன்னம்மான் நினைவு கூடத்திற்கு முன்னர் ஒன்று திரண்டு  நடத்துகிற அந்த மாவீரர் நாளை தடைசெய்யவில்லை.

அத்தோடு செல்வி ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற ஆண்டு அது. புலி ஆதரவாளர்களைத் தேடித்தேடி கைது செய்தனர் என்ற போதிலும்,  மாவீரர் நாளை அனுசரிப்பதை தடை செய்யவில்லை. ஆனால் இலங்கை அரசு இந்த நினைவு கூரல் தடை ஊடாக ஜனநாயகத்தை முற்று முழுதாகவே குழிதோண்டிப்  புதைக்கின்றதைத்தான் நாம் உணர்கின்றோம்.

எது எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டில் நாம் ஆண்டுதோறும் முன்னெடுக்கின்ற மாவீரர் நாள் நிகழ்வுகளை விட கூடுதலாகவும் பல்வேறு இடங்களிலும் அதை நடத்துவதன் வழியாக தமிழ் இனத்தின் விடுதலைக்கு தம் இன்னுயிரை ஈந்த அந்த மாவீரர்களுக்கு உரிய வகையில் மரியாதை செலுத்துவோமாக!” என்றார்.