கொரோனா திரிபு குறித்து டெல்லி முதல்வரின் கருத்துக்கு  சிங்கப்பூர் ஆட்சேபம்

297 Views

“சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் திரிபு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் இது மூன்றாம் அலையாக அது வரக்கூடும்.”

இதன் காரணமாக சிங்கப்பூர் உடனான விமான போக்குவரத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்தியத் தூதரை இன்று அழைத்த சிங்கப்பூர் அரசு, கொரோனா திரிபை சிங்கப்பூர் உடன் தொடர்பு படுத்துவதற்கு தமது கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் “டெல்லி முதலமைச்சர் இந்தியாவுக்காக பேசுபவர் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.

பொறுப்பற்ற கருத்துகள் நீண்ட நாட்களாக இருக்கும் உறவுகளை பாதிக்கும் என்றும் அரவிந்த் கேஜ்ரிவாலை கடுமையாக சாடியுள்ளார்.  சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் வலுவான கூட்டாளிகளாக இருப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் திரிபு போன்று சிங்கப்பூரில் சில திரிபுகள் காணப்படுவதாகவும், அவை குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாகவும் சிங்கப்பூரர்களை அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளையர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply