கொரோனாவும் தற்போதைய சிறார்களின் கல்வி நிலையும்

767 Views

 சமீப காலமாக உலகையே தன்வசத்தில் வைத்துக்கொண்டிருக்கும் கொடிய நோய் என்று எல்லோராலும் பேசப்படும் கொரோனாவானது, அது தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை அதன் பிடியை சற்றும் தளர்த்தாமல் பெறுமதியான மனிதனின் உயிருடன் விளையாடி வருகின்றது. சிறியவர், பெரியவர் என்று பாராது, தன் குணத்தை சிறிதும் மாற்றாது ஒரே வகையான தாக்கத்தைக் காட்டி வருகின்றது. இதற்கு எதிராக பலவிதமான முயற்சிகள் எடுத்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை.

“கல்வி என்பது இவ்வுலகில் பெரிதும் மதிக்கப்படும் ஒன்று. கல்வி ஒன்றே இந்த உலகை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம்” என்பது நெல்சன் மண்டேலாவின் வாக்கு. ஒரு மரத்திற்கு எப்படி அதன் வேர்கள் முக்கியமோ; அதுபோல மனிதனுக்குக் கல்வி இன்றியமையாதது. இன்றைய காலத்தில் கல்வி அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. கல்வியைக் கற்பதனால் மனிதர் உயர்ந்த இடத்தினை அடைகின்றனர். இதனால் கல்வியை எவ்வாறேனும் பெற வேண்டும் என்ற நிலைப்பாடு உருவாகிறது.

தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக வீட்டினுள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் போக்குவரத்துச் சேவைகள், வங்கிச் சேவைகள், கல்விச் சேவைகள் மற்றும் தனியார் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சுகமான வாழ்வுக்காக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தனியார்கல்வி நிறுவனங்கள் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் இயங்கி வரும் பாடசாலைகள் காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டு மந்த நிலையில் செல்கின்றது.

மாணவர்கள் அனைவரும் வீட்டில் எவ்வித கற்றல் செயற்பாடுகளும் இன்றி இருக்கின்ற அதேவேளை, கற்றலில் மந்தநிலை எற்பட்டுள்ளது. கொரோனா விடுமுறையினால் மாணவர்களுக்கும், கல்விக்குமான இடைவெளி அதிகரித்துச் செல்கின்றது. கொரோனா விடுமுறை மாணவர்களுக்கு எவ்வித பயனையும் அளிக்கவில்லை. அதற்குப் பதிலாக தொலைக்காட்சி மற்றும் விளையாட்டுடன் இவர்கள் வாழ்க்கையினைக் கழிக்கின்றனர். பாடசாலை நடைபெறாத காரணத்தால் மாணவர்கள் கல்வியை விருப்பத்தோடு கற்பதற்கான சூழல் அரிதாகவே காணப்படுகிறது. பெற்றோர்களும், பாடசாலைகள் நடைபெறாதவிடத்து தங்கள் பிள்ளைகளை கல்வியை கற்பதற்காக வற்புத்துவதும் இல்லை.

இன்றைய இடர்காலச் சூழலில் மாணவர்கள் தொடர்சியாகக் கல்வியினைக் கற்க முடியாமல் இடர்படுகின்றனர். இச் சூழலில் கற்றல், கற்பித்தல் என்பது சவாலான விடயமாவே      காணப்படுகின்றது. முதலாவதாக மாணவர் சார்ந்த சவால்களை நோக்குகின்ற போது மாணவர்களுக்கிடையே காணப்படும் வசதிவாய்ப்புக்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே வேறுபடுகின்றன. பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக அன்றாடக்கூலி வேலைகளை மேற்கொள்பவர்களாகவே காணப்படுகின்றனர். அவர்களிடம் சாதாரண தொலைபேசி ஒன்று இருப்பது கூட அரிதாகவே காணப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் வற்சப்,  வைபர் குழுக்களிலும், நிகழ்நிலை வகுப்புக்களிலும் கற்றலில் ஈடுபடுவது எவ்வாறு சாத்தியமாகும் என்பது முதலாவது வினாவாகும்.

இதேவேளை நடுத்தரக் குடும்பங்களில் பிறந்த மாணவர்களிடம் ஓரளவு தொழில்நுட்ப வசதியுள்ள தொலைபேசி காணப்பட்டாலும், அவற்றை பயன்படுத்துவதற்கான தொலைபேசிக் கட்டணங்களைச் செலுத்தும் வசதியுடன் பெரும்பாலான குடும்பங்கள் காணப்படுவதில்லை. ஓரளவு வசதியுள்ள மாணவர்கள் இதனைப் பயன்படுத்திக் கற்கின்றனர் என்பதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதே சமயம் வசதியுள்ள மாணவர்கள் உள்ள குடும்பங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள போது ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்ப வசதியுள்ள தொலைபேசிகள் தேவை. இதுவும் ஒரு பாதகமான விடயம் ஆகும்.

Pacha Kuthirai கொரோனாவும் தற்போதைய சிறார்களின் கல்வி நிலையும்

இதே வேளை இடர்காலச் சூழலில் மாணவர்கள் தமது குடும்பத் தொழில்களில் ஈடுபடுகின்றமையால் கற்றல், கற்பித்தல் மேலும் ஒரு சவாலாகவே காணப்படுகின்றது. இலங்கை கரையோரப் பிரதேசங்களைக் கொண்ட விவசாய நாடாக இருப்பதனால், பாடசாலைகள் இயங்காத இடர்காலங்களில் மாணவர்கள் தந்தை மற்றும் உறவினர்களுடன் இணைந்து மீன்பிடி, விவசாயம் போன்றவற்றில் ஈடுபடுவதுடன் ஊடாக தமது குடும்பங்களின் பொருளாதார உயர்ச்சிக்கு உதவிபுரிகின்றனர். இவர்களை இணையவழிக் கல்வியின்பால் திருப்புதல் சவாலான விடயமாகவே காணப்படுகின்றது.

எது எவ்வாறாக இருந்த போதும், மாணவர்களை ஏதோ ஒரு வழிமுறை மூலமாக ஆவது கற்றலுடன் தொடர்புபடுத்தி வைத்திருத்தல் நல்லது. கற்றல் பரந்துபட்டது. அதை வகுப்பறையில் அடைக்கக் கூடாது. மாணவனுக்கு தனது வகுப்பறையையும் தாண்டி கற்றலுக்கு பல வழிகள் உண்டு என இக்காலம் உணர்த்துகின்றது. அவற்றில் ஒன்றுதான் இணையவழிக் கல்வி. எவற்றைப் பயன்படுத்தியும் மாணவர்கள் கற்க முடியும். ஆனால் மாணவர்களை எதன் முன்பும் தொடர்ச்சியாக உட்கார வைப்பதால் மாத்திரம் முழுமையான கற்றல் நடைபெறுவதில்லை என்பதனை அனைவரும் உணர வேண்டும்.

         “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.”

 

தெய்வேந்திரம் வஜிதா

மூன்றாம் வருடம் இரண்டாம் அரையாண்டு

சமூகவியல் துறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Leave a Reply