கச்சத் தீவும் தமிழின உரிமை அரசியலும் – தியாகு

கச்சத் தீவும் தமிழின உரிமை அரசியலும் - தியாகுஇந்தியப் பொதுத் தேர்தலுக்கான பரப்புரையில் தமிழ்நாட்டில் கச்சத்தீவுச் சிக்கல் மீண்டும் பேசுபொருளாயிற்று. 1974ஆம் ஆண்டு சூன் 06ஆம் நாள் இந்திய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி அது வரை இந்தியாவின் இறைமைக்கு உட்பட்டிருந்த கச்சத்தீவு சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்து 1976ஆம் ஆண்டில் இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான எல்லையை முழுமையாக மதித்து நடக்க வேண்டும் என அதிகாரிகள் மட்டத்தில் செய்து கொண்ட உடன்படிக்கை கச்சத்தீவின் மீதான சிறிலங்காவின் இறைமையை முழுமையாக்கிற்று.

கச்சத்தீவு இவ்விதம் சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்பட்ட போது இதற்குத் தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படவில்லை, தமிழ்நாடு சட்டப் பேரவையின் ஒப்புதலும் பெறப்படவில்லை. அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதி அவர்களிடம் தகவல் தரப்பட்டதோடு சரி. அவரது எதிர்ப்போ தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்போ இந்திய அரசால் மதிக்கப்பெறவே இல்லை. நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் இரா செழியனும், அதிமுக சார்பில் நாஞ்சில் மனோகரனும், கச்சத்தீவு சிறிலங்காவுக்குத் தரப்பட்டதை வன்மையாகக் கண்டித்துப் பேசினார்கள். பார்வர்டு பிளாக் தலைவரும் கச்சத்தீவு இடம்பெற்ற இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான பி.கே. மூக்கையாத் தேவர் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்துப் பேசினார். கச்சத்தீவு தொடர்பான இந்தியத் தலமையமைச்சர் இந்திரா காந்தியின் முடிவை சிறந்த அரசதந்திர நகர்வு என்று போற்றிய ஒரே ஒரு தமிழ்நாட்டுத் தலைவர் மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த பி. இராமமூர்த்திதான்.

அது என்ன அரசதந்திரம்? பன்னாட்டு அரங்கில் தனிமைப்பட்டிருந்த இந்திரா அம்மையார் இலங்கைத் தலைமையமைச்சர் சிறிமா பண்டாரநாயக்கா அம்மையாரின் ஆதரவைப் பெறுவதற்கு விலையாகத்தான் கச்சத் தீவை எடுத்துக் கொடுத்தராம்.

kachchathiv 2022.2.18 கச்சத் தீவும் தமிழின உரிமை அரசியலும் - தியாகுகச்சத்தீவு இலங்கைக்குத் தரப்பட்டதை எதிர்த்த போதும், அன்றும் இன்றும் அதை மீட்க வேண்டும் என்று குரல்கொடுக்கும் போதும் தமிழகத் தலைவர்கள் “இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவு” என்றுதான் பேசி வருகின்றனர். தமிழ்ச் சிற்றரசராகிய இராமநாதபுரம் சேதுபதியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த கச்சத்தீவு எப்போது எப்படி இந்தியாவுக்குச் சொந்தமானது? தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இந்தியா எடுத்து இலங்கைக்குக் கொடுத்து விட்டது என்பதே உண்மை. கடைத் தேங்காயும் வழிப் பிள்ளையாரும் கதைதான்! தமிழ்நாட்டின் இறைமையை இந்தியப் பேரரசு மதிக்கவில்லை என்பதே இச்சிக்கலின் சாறம். எனவே கச்சத்தீவு மீட்புக்கான போராட்டம் என்பது தமிழ்த் தேச இறைமை மீட்புக்கான போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.

மறுபுறம் கச்சத்தீவு இப்போது இலங்கையில் யாழ் மாவட்டம் நெடுந்தீவு பிரதேசச் செயலகத்தின் கீழ் இருந்து வருகிறது. அதாவது தமிழீழத் தாயகத்தின் ஆட்சிப் புலத்தில் உள்ளது. தமிழீழப் போராட்டத்தில் 1983 கறுப்பு சூலை தொடக்கம் சிங்கள இனவழிப்புப் படைகள் தமிழ்நாட்டு மீனவர்களைக் கொன்று குவித்த கொடுமை பெருமளவுக்குக் கச்சத்தீவு சூழ நடந்தேறியது. இப்போதும் சிங்கள அரசின் பண்பாட்டுப் படையெடுப்பு, கட்டமைப்பியல் இனவழிப்பு ஆகியவற்றின் கூறாகவே சில காலம் முன்பு கச்சத் தீவில் ’புத்தர் எழுந்தருளினார்’.

கச்சத்தீவின் வருங்காலம் பற்றித் தமிழக மக்கள் போலவே தமிழீழ மக்களும் கவலை கொள்ள வேண்டும். ஆனால் தமிழீழத் தாயகத்தின் அரசியல் தலைவர்கள் கச்சத்தீவு பற்றி வாய்திறப்பதே இல்லை. ஒரு புறம் சிங்களப் பேரினவாத அரசையோ மறுபுறம் இந்திய வல்லரசையோ முகம்பார்த்துப் பேசும் நிலையில்தான் அவர்கள் இருப்பதாகத் தெரிகிறது.

எந்த இந்திய அரசும் கச்சத்தீவைத் தமிழ்நாட்டுக்கு மீட்டுக் கொடுக்கும் என நான் நம்பவில்லை. அண்மையில் பாரதிய சனதா கட்சி தமிழ்நாட்டில் கச்சத் தீவு பற்றிப் பேசியது இழிவான தேர்தல் தந்திரம் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. காங்கிரசு – திமுக கூட்டணி மீது குற்றம் சுமத்துவதும், இரு கட்சிகளுக்குமிடையே சண்டை மூட்டுவதுமே நோக்கம். கச்சத்தீவு தொடர்பான 1974 உடன்படிக்கையை முறையாக நீக்கம் செய்யாமல் பன்னாட்டுச் சட்டங்களின் படி இந்தியா கச்சத்தீவை மீளப் பெற முடியாது. உலக நீதிமன்றத்துக்குச் சென்றாலும் எளிதில் வெற்றி கிட்டாது. எந்தச் சிங்கள அரசும் மெய்யாகவே இதற்கு இணங்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. சிங்களப் பேரினவாத மனநிலையை எதிர்த்து இதைச் செய்யக் கூடிய சிங்களத் தலைவர் எவருமில்லை. சென்ற ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு கூறியது: கச்சத்தீவை மீட்பது என்றால் இராணுவப் படையெடுப்புதான் நடத்த வேண்டும், அந்தப் பேச்சுக்கே இடமில்லை.

1708737383 கச்சத் தீவும் தமிழின உரிமை அரசியலும் - தியாகுஇறைமை மீண்ட தமிழ்நாடும் இறைமை மீண்ட தமிழீழமும்தான் எதிர்காலத்தில் இரு நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பு, மக்கள் நலன், இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தில் அமைதி ஆகிய தேவைகளையும் பிற காரணிகளையும் கணக்கில் கொண்டு கச்சத்தீவுச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டியிருக்கும்.

ஆனால் கச்சத்தீவுச் சிக்கலில் தொடர்புடையதாக இருக்கும் மீனவர்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை உள்ளது. பாக்கு நீரிணையின் இருகரையிலும் – தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் – அடர்ந்து வாழ்வோர் மீனவர்களே. இங்கும் தமிழ் மீனவர்கள், அங்கும் தமிழ் மீனவர்கள். மீனவர்களின் மீன்பிடித் தேவையோடு ஒப்பிட்டால் அந்த நீர்ப்பரப்பு மிகக் குறைவானது. மீன் பிடிக்கப் படகோட்டும் போதும் வலை வீசும் போதும் துல்லியமாக எல்லைகளுக்குள் நிற்க இயலாது. இரு தரப்பிலும் எல்லை மீறல் இருக்கவே செய்யும். தமிழர்கள் மோதிக் கொள்வதையே இந்திய, சிங்கள அரசுகள் விரும்புகின்றன. இருதரப்பு மீனவர்களும் தமது சங்கங்களைக் கொண்டு பேச்சு நடத்தித் தமிழ்த் தோழமையோடு இணக்கம் காண வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்களில் ஒருபிரிவினர் பயன்படுத்தக் கூடிய வலைகள் தொடர்பாகத் தமிழீழ மீனவர்கள் கொண்டுள்ள ஆழமான மனவருத்தத்தை அலட்சியம் செய்வதற்கில்லை. அதே போல் மீன்பிடிப் பருவங்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகளும் கசப்புகளும் பேசித் தீர்க்கப்பட வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களுக்குள்ளேயே இவ்வாறான வேற்றுமைகளும் பூசல்களும் இருக்கும் போது இருநாட்டு மீனவர்களுக்கிடையே சிக்கல்கள் இருப்பதில் வியப்பில்லை. கடலன்னை வாரி வழங்கும் செல்வத்தை ஒரு தரப்பே அளவுமீறி வழித்து விடாமல் தமிழன்னையின் புதல்வர்கள் தமக்குள் பகிர்ந்து பல்லுயிர் ஓம்ப வழிகாண வேண்டும். இந்தத் தமிழிணக்கத்துக்கு அரசுகள் செய்யும் இடையூறுகளுக்கும் முகங்கொடுக்க இருதரப்பிலும் நம் மக்கள் அணியமாக வேண்டும்.

இரு புறமும் தமிழர்கள் உரிமை பெற்று தமிழர் கடலில் இனிமை பொங்கும் போது கச்சத்தீவும் மீனவர் முரணும் கடந்த கால வரலாறாகிப் போகும்.

————————

தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்,
சென்னை, 27.04.2024
[email protected]