கேட்டலோனிய சுதந்திரம் கோரி போராடிய தலைவர்கள் சிறையில் அடைப்பு, ஸ்பெயினுக்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்

கேட்டலோனிய சுதந்திரம் கோரி ஸ்பெயினுக்கெதிராக போராடிய தலைவர்கள்  சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, ஏறத்தாழ 3,50,000 மக்கள் பார்சிலோனாவில் வீதியில் இறங்கி போராடினர்.

கேட்டலோனியா சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இவர்கள் அமைதியான ஒரு பேரணியையும் மேற்கொண்டனர்.2017ஆம் ஆண்டு கேட்டலோனியா எனும் தனி நாட்டை வலியுறுத்தி சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு சட்டத்திற்குப் புறம்பாக ஸ்பெயினில் நடந்தது.

2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்டலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தின் அதிபர் கார்லஸ் பூஜ்டியமோன் மற்றும், பிராந்தியத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டனர்.

“சுதந்திரமான, இறையாண்மை உள்ள நாடாக கேட்டலோனியாவை அங்கீகரிக்கவேண்டும்,” என்று அந்தப் பிரகடனம் வேண்டுகோள் விடுத்தது.242 கேட்டலோனிய சுதந்திரம் கோரி போராடிய தலைவர்கள் சிறையில் அடைப்பு, ஸ்பெயினுக்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்

மக்களின் விருப்பம், ஸ்பெயினிடம் இருந்து கேட்டலோனியா தனி நாடாகப் பிரிந்து செல்லவேண்டும் என்பதே என்று கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் கூறிய பூஜ்டியமோன், அதே நேரம் தாம் இந்த விஷயத்தில் பதற்றத்தைத் தணிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்பெயின் தனி நாட்டுக்கான வாக்கெடுப்பை அங்கீகரிக்கவில்லை. தலைவர்களையும் கைது செய்தது.

இதனை அடுத்து, ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாவதாக அறிவித்த தன்னாட்சி பிரதேசமான கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் அறிவித்தார்.

ஸ்பெயினின் நேரடி ஆட்சியின் கீழ் கேட்டலோனியா வருவதாகவும், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு கேட்டலோனியாவுக்கு புதிய அரசு தேர்வு செய்யப்படும் என்றும் அவர் அப்போது கூறினார்

கேட்டலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தின் அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் தலைமையிலான அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.

ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 பிரிவினைவாத தலைவர்களுக்கும், நீதிமன்ற விசாரணைகளை அடுத்து, ஒன்பது முதல் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் பிரிவினை கோரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

ஸ்பெயினில் வளமான பகுதி கேட்டலோனியா. அவர்களுக்கென தனி கலாச்சாரமும், மொழியும் இருக்கிறது. அந்தப் பகுதியில் 75 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இது சுவிட்சர்லாந்து மக்கள் தொகையைவிட அதிகம்.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த பிரச்சனையை ஸ்பெயினின் உள் விவகாரமாகக் கருதி, பிரிவினைவாத தலைவர்கள் முன் வைத்த கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டது.

Leave a Reply