கீழடி – சிந்து சமவெளி- சங்க இலக்கியம் இவை ஒரே புள்ளியில் இணைகின்றன சிந்துவெளி தொடர்பான ஆய்வாளர் ஆர். பாலகிருஸ்ணன்

929 Views

கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும், சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஸ்ணன் பிபிசிக்கு அளித்த பேட்டியிலிருந்து தொகுக்கப்பட்டது.

கீழடி முடிவுகள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் முடிவுகள் குறித்து கூறும் போது,

இப்படி பரபரப்பாக விவாதிக்கப்படுவதற்கு காரணமே, சமீப காலமாக இம்மாதிரி அகழாய்வு முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை என்பது தான். ஆதிச்ச நல்லூரில் 1904ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு மேற்கொண்டதன் பின்னர் மீண்டும் 2004இல் தான் ஆய்வுகள் மேற்கெள்ளப்பட்டன.

அதனால் அதன் விரிவான விளக்கங்கள் யாருக்கும் தெரியவிலலை. ஆனால் கீழடி தொடக்கத்திலிருந்தே பொது மக்களின் கவனத்தை ஈரத்திருப்பதால், இப்போது வெளியாகியிருக்கும் முடிவுகள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

keelady2 கீழடி – சிந்து சமவெளி- சங்க இலக்கியம் இவை ஒரே புள்ளியில் இணைகின்றன சிந்துவெளி தொடர்பான ஆய்வாளர் ஆர். பாலகிருஸ்ணன்2010இல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா முன்பாக நான் சிந்துவெளி தொடர்பாக ஒரு ஆய்வுக்கட்டுரையை முன்வைத்தேன்.

கொற்கை- வஞ்சி – தொண்டி போன்ற தமிழகத்திலுள்ள இடப்பெயர்கள், சிந்துவெளிப் பகுதியில் அடையாளம் தெரியாத இடப்பெயர்களாக இப்போதும் இருப்பதைக் கண்டறிந்து, என்னுடைய ஆய்வை அப்போது முன்வைத்தேன். அஸ்கோ பர்போலா, சங்காலியா, ஐராவதம் மகாதேவன், சவுத்வர்த் ஆகிய அறிஞர்கள் ஏற்கனவே இடப்பெயர்களை வைத்து சிந்துவெளி ஆய்வுகளை நடத்த முடியும் எனக் கூறியவர்கள்தான்.

அதைத்தான் நானும் பின்பற்றினேன். அப்போதுதான் கொள்கை – வஞ்சி – தொண்டி இடப்பெயர்கள் இருந்தன. ஆனால் அப்போதும்கூட வெறும் இடப்பெயர் சார்ந்த ஒரு ஆய்வாகத்தான் இது இருந்ததே தவிர அகழ்வாராய்ச்சி சார்ந்த ஆதாரம் எதுவும் இருந்திருக்கவில்லை. அம்மாதிரியான ஒரு ஆதாரத்தை கீழடி கொடுத்திருக்கின்றது.

கீழடியையும் சிந்து சமவெளி நாகரிகத்தையும் நீங்கள் எப்படி தொடர்புபடுத்துகின்றீர்கள் என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கையில்,

சிந்து சமவெளி நாகரிகத்தின் முதிர்ச்சியான காலகட்டம் கி.மு 2500. கி.மு 1900 காலகட்டத்தில் அது நலிவடைய ஆரம்பித்தது. இப்போது கீழடியில் கிடைத்த தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்து கிட்டத்தட்ட கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. ஆதிச்ச நல்லூரில் செய்யப்பட்ட தெர்மோலூமிசென்ஸ் உள்ளிட்ட ஆய்வுகளில் அது கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. நாம் சங்க காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டு என வரையறுக்கின்றோம். அதிலிருந்து தான் தமிழகத்தில் வரலாற்றுக் காலம் தொடங்குகின்றது.

சிந்து சமவெளி நாகரிகம் நலிவடைந்தது, கி.மு 1900இல் தமிழக வரலாற்றுக் காலம் கி.மு 600இல் தொடங்குவதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் கி.மு.1900இற்கும், கி.மு 600இற்கும் இடையில் சுமார் 1300 ஆண்டுகால இடைவெளி இருக்கின்றது.

keelady1 கீழடி – சிந்து சமவெளி- சங்க இலக்கியம் இவை ஒரே புள்ளியில் இணைகின்றன சிந்துவெளி தொடர்பான ஆய்வாளர் ஆர். பாலகிருஸ்ணன்அதுபோல, மொஹஞ்சதாரோ – ஹரப்பா போல, குஜராத்தில் சிந்துவெளி நகரங்களாக தேசல்பூர், லோதல், தோலாவிரா ஆகிய இடங்கள் இருக்கின்றன. அதற்குத் தெற்கே மகாராஷ்டிராவில் தைமாபாத் என்ற இடம் இருக்கின்றது. 1960களின் தொடக்கத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம் தான் சிந்துவெளி நாகரிகத்தின் தெற்கு எல்லையாகக் கருதப்பட்டது. அதற்குத் தெற்கே சிந்துவெளி தொடர்பாக எந்த இடமும் இதுவரை கண்டறியப்படவில்லை.

சிந்துவெளி இலட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த இடம். அவர்கள் எங்கே போனார்கள் என்பது முக்கியமான கேள்வி. அந்த நாகரிகம் ஏன் அழிந்தது, எப்படி அழிந்தது என்ற விவாதம் இப்போது தேவையில்லை.

ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் என்ன ஆனார்கள்? சிலர் அங்கேயே தங்கியிருப்பார்கள். சிலர் வேறு இடங்களுக்குப் போயிருப்பார்கள். வேறு மொழிகளைப் பேச ஆரம்பித்திருப்பார்கள். அப்படி வெளியேறியவர்கள் அப்போதிருந்த அடையாளங்களைத் தொடர்ந்து தக்க வைத்திருப்பார்கள். அல்லது எடுத்துப் போயிருப்பார்கள். நம்பிக்கைகள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவையும் மாறாமல் இருந்திருக்கும்.

Killady 2 கீழடி – சிந்து சமவெளி- சங்க இலக்கியம் இவை ஒரே புள்ளியில் இணைகின்றன சிந்துவெளி தொடர்பான ஆய்வாளர் ஆர். பாலகிருஸ்ணன்இந்தியாவில் ஆராய்ச்சியைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் புரியாத புதிராக இருக்கின்றது. முதல் கேள்வி, சிந்துவெளி மக்கள் பேசிய மொழி என்ன? அவர்கள் யார்? அவர்கள் நாகரிகம் எப்படி அழிந்தது? இரண்டாவது கேள்வி இந்தியாவைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியமான கேள்வி இல்லையென்றாலும் தமிழர்களுக்கு முக்கியமான கேள்வி.

தமிழர்களுக்கு எப்போதுமே தம்முடைய, தோற்றம், தாம் எங்கிருந்து வந்தோம் என்ற கேள்வி இருந்துகொண்டேயிருக்கின்றது. சிலர் மத்தியதரைக் கடல் என்று சொல்வார்கள். சிலர் குமரி கண்டம், லெமூரியாக் கண்டம் என்று சொல்வார்கள். ஆனால், தோற்றம் குறித்து தமிழர்களிடம் ஒரு கூட்டு மனநிலை இருந்துகொண்டே இருக்கின்றது. முதல் சங்கம், கடைச் சங்கம், கடற்கோள், அழிவு, புலம்பெயர்வு என தங்கள் தோற்றம் குறித்த கேள்வி அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது.

சிந்துவெளி எப்படி அழிந்தது, தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள் ஆகிய இரண்டு கேள்விகளுமே வெவ்வேறான, தொடர்பில்லாத கேள்விகளைப் போல இருக்கின்றன. ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டு கேள்விகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதில் ஒரு புதிருக்கு தெளிவான விடை கிடைத்தால், இன்னொரு புதிருக்கும் விடை கிடைத்துவிடும்.

இந்த ஆய்வு முடிவுகளை வைத்து, சங்க காலம் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்வதாகச் சொல்லப்படுவது பற்றி கூறும் போது,

நாம் வரலாற்றுக் காலம், வரலாற்றிற்கு முந்தைய காலம் எனப் பிரிப்பது எழுத்து தோன்றியதை வைத்துத் தான். எழுத்தின் தோற்றம் தான் இரண்டையும் பிரிக்கின்றது. தமிழகத்தில் வரலாற்றின் தொடக்க காலம் என்பது தமிழ் பிராமி என்ற தமிழி எழுத்துக்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கருதுகோள் இருந்தது. சங்க இலக்கியத்தையும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகத்தான் கருதினார்கள்.

ஆனால் இம்மாதிரி ஒரு இலக்கியம் எழுதப்படுவதற்குப் பின்னணியில் ஒரு சிறப்பான மரபு இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியத்தில் பல நூல்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அந்த நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஒரு பெரிய நூலை எழுத முடியும். சங்க இலக்கியம்கூட திடீரெனத் தோன்ற முடியாது. சங்க இலக்கியத்தில் சொல்லப்படுவது நிகழ்காலப் பதிவுகள் அல்ல. கடையேழு வள்ளல்களைப் பற்றிப் பேசுகின்றோம் என்றால், அவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, வாழ்ந்ததாக அர்த்தமல்ல. சமகாலப் பதிவாகவும் இருந்திருக்கலாம். அல்லது அதற்கு முன்னரான காலகட்டத்தைச் சேர்ந்த நினைவுகளாகவும் இருந்திருக்கலாம். ஆக, அந்த நிகழ்வுகளுக்கு, அது பற்றி இலக்கியத்திற்கு வயதை நிர்ணயிப்பது மிகக் கடினம்.

இப்போது கீழடியில் கிடைத்த பொருட்கள் குறிப்பாக எழுத்துக்கள் கிடைத்த அதை படிவத்தில் கிடைத்த சில பொருட்கள் கரிம ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் வயது கி.மு.580 எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே எழுத்தறிவு இருந்த காலம் அல்லது சங்க காலம் என்பது கங்கைச் சமவெளியில் வரலாறு தொடங்கிய காலத்திற்கு சமமாக இருக்கின்றது.

Keeladi featured கீழடி – சிந்து சமவெளி- சங்க இலக்கியம் இவை ஒரே புள்ளியில் இணைகின்றன சிந்துவெளி தொடர்பான ஆய்வாளர் ஆர். பாலகிருஸ்ணன்சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியை இந்தியாவில் எந்த இலக்கியத்தில் அதிகமாக பார்த்தறிய முடியும் என்ற கேள்வியை முன்வைத்தால், அதாவது சிந்துவெளி தொடர்பான நினைவுகளைக் கொண்ட இலக்கியம் எங்கிருக்கின்றது என்று பார்த்தால், சங்க இலக்கியத்தில் தான் இருக்கின்றது. சங்க இலக்கியத்தைப் போல நகரங்களைக் கொண்டாடிய  இலக்கியம் வேறு இல்லை.

நகர வாழ்க்கை மட்டுமல்ல, ஒரு வகையான பல்லின மக்கள் சேர்ந்து வாழக்கூடிய ஒரு வாழ்க்கை, கடல் வணிக மரபு, தாய்த் தெய்வ வழிபாடு, விளையாட்டிற்கான முக்கியத்துவம் அகியவை அந்த நாகரிகத்தின் குணாதிசயங்களைக் குறிப்பிடும் குறியடாக நம் முன் நிற்கின்றன. அப்படி சிந்துவெளிக்கென்று சில விடயங்களை நாம் அடையாளமாகக் குறிப்பிட்டால், அந்த நான்கைந்து விடயங்கள் காத்திரமாகப் பேசப்பட்டது சங்க இலக்கியத்தில்தான். அதற்குப் பின்னர் இது போன்ற குணாதிசயங்களுடன் பொருட்கள் கிடைப்பது கீழடியில்தான். அதனால்தான் சிந்துச் சமவெளி – சங்க இலக்கியம் – கீழடி ஆகிய மூன்றையும் ஒரு புள்ளியில் இணைக்கின்றோம்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக கொற்கை – வஞ்சி – தொண்டி குறித்து பேச ஆரம்பிக்கும் போது இப்படி கீழடி போல ஒரு இடம் கிடைக்குமென யாரும் நினைக்கவில்லை. தவிர, கீழடி கிடைத்திருக்கும் இடத்தைப் பார்ப்போம். இந்த இடம் மதுரைக்கு அருகில் இருக்கின்றது. மதுரை ஒரு சாதாரண நகரமல்ல. சங்க இலக்கியத்தில் மதுரைக் காஞ்சி என ஒரு தனி இலக்கியம் இருக்கின்றது. அதில் மட்டுமல்லாமல் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் மதுரையும் நான்மாடக் கூடலும் பேசப்படுகின்றது. பரிபாலட் வைகையைப் பற்றிப் பேசுகின்றது.

தமிழுக்கும் மதுரைக்கும் இடையிலான தொடர்பு சங்க இலக்கியத்தில் பேசப்படுகின்றது. சங்கப் புலவர்களின் பெயர்கள் ஊர்களை வைத்தே அறியப்பட்டன. அப்படி அதிக புலவர்கள் இருந்தது மதுரையில்தான். “மாங்குடி மருதன் தலைவன் ஆக உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் புலவர் பாடாதுவரைக என் நிலவரை” என புறநானூறில் ஒரு பாடல் வருகின்றது. அப்படியானால், ஒரு புலவரை தலைவனாக வைத்து மற்ற புலவர்கள் கூடி, கவிதைகள் குறித்து பேசுவது, விவாதிப்பது என்பது சங்க இலக்கியத்தில் பதிவாகியிருக்கின்றது.

மதுரையைச் சுற்றி நிறைய இடங்கள் தமிழ் – பிராமி கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அந்த நகரம் இடைக்கால இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் வருகின்றது. ஆகவே அந்த நகரத்திற்கு 2600 வருட தொடர்ச்சி இருக்கின்றது. அப்படி ஒரு நகரத்திற்கு அருகில் அகழாய்வில் ஒரு நகர நாகரிகம் கிடைப்பது சாதாரணமானது அல்ல. ஆகவே, நம் தொன்மத்திலிருக்கும் சில மரபுகளை இந்த ஒற்றுமை இணைக்கின்றது. அதுதான் இதில் முக்கியம்.

கீழடியில் பெரும்  எண்ணிக்கையில் பானை ஓடுகளில் கீறல்கள் கிடைத்திருக்கின்றன. 1001 பானை ஓடுகள் இப்படிக் கிடைத்திருக்கின்றன. இதன் முக்கியத்துவம் என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

எழுத்து வடிவத்தை எடுத்துக் கொண்டால், இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப் பழைய எழுத்து வடிவம் சிந்துவெளி எழுத்து வடிவம் தான். சிந்துவெளி எழுத்துக்களை இன்னும் நம்மால் படிக்க முடியவில்லை. பொதுவாக, படிக்க முடிந்த எழுத்துக்களுக்கு அருகில், படித்தறிய முடியாத எழுத்துக்கள் கிடைத்தால், இதை வைத்துப் படிக்க முடியும். சுமேரியாவில் அப்படித்தான் படிக்க முடிந்தது. ரொஸட்டா ஸ்டோன் என்ற இருமொழி கல்வெட்டின் உதவியுடன் அவை படிக்கப்பட்டன. ஆனால், சிந்துவெளியில் அப்படி ஒரு விடயம் கிடைக்காததால், சிந்துவெளியைப் படிக்க முடியவில்லை.

அதற்கடுத்து, அசோகன் பிராமியும் தமிழ் பிராமியும் கிடைத்திருக்கின்றன. இவற்றைப் படிக்க முடியும். இவை இரண்டிற்கும் நடுவில் ஒரு இணைப்புச் சங்கிலி இருந்திருக்க வேண்டும். அவைதான் பானையில் செய்யப்படட கீறல்கள் (Graffiti markers) இந்தக் கிறுக்கல்கள் இரண்டு விதமாக இருக்கும். பானையைச் செய்தவர் எழுதியிருப்பார். அது பானை ஈரமாக இருக்கும் போதே எழுதப்பட்டிருக்கும். வாங்கியவர் எழுதியிருந்தால், பானை சுடப்பட்ட பின்னர் எழுதப்பட்டிருக்கும். கீழடியில் கிடைத்திருப்பது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அப்படி எழுதக்கூடியவர்கள் நிறையப்பேர் இருந்திருக்க வேண்டும். அவர்கள் பெரிய அளவில் கற்றறிந்தவர்களாகவோ, புலவர்களாகவோ இருந்திருக்க வேண்டியதில்லை. சாதாரண மக்களாகவும் இருக்கலாம்.

இந்த பானைக் கீறல்களை சிந்துவெளி முத்திரைகளுக்கும் தமிழ் பிராமி எழுத்துக்களுகக்கும் இடையிலான ஒரு இணைப்புச் சங்கிலியாக நாம் பார்க்க முடியும். இந்தப் பானைக் கீறல்களில் சிந்துவெளியில் உள்ள கீறல்களைப் போன்ற கீறல்களும் சில பானை ஓடுகளில் கிடைத்திருக்கின்றன. ஆகவே அதன் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்க முடியும். மேலும் இம்மாதிரி கீறல்களுடன் கூடிய பானை ஓடுகள், இந்தியாவின் பிற பகுதிகளிலும், தமிழகத்திலும், இலங்கையிலும் கிடைத்திருக்கின்றன. அவற்றில் 75 சதவீதம் தமிழகத்தில்தான் கிடைத்திருக்கின்றது.

கீழடியில் மட்டுமல்ல, கொற்கை, அழகன்குளம் ஆகியவற்றிலும் இம்மாதிரி பானை ஓடுகள் கீறல்களுடன் கிடைத்திருக்கின்றன. கீழடியில், தமிழ் பிராமி கிடைத்த படிநிலைக்குக் கீழே இவை கிடைத்திருக்கின்றன. ஆகவே அவை தமிழ் பிராமிக்கு முந்தய காலமாக இருக்கலாம். ஆகவே இந்தக் கீறல்கள் மிக முக்கியமானவை.

கீழடியில் சமய வழிபாடு சார்ந்த பொருட்கள் கிடைக்கவில்லையென ஆய்வறிக்கை கூறுவதால், அங்கு வாழ்ந்த மக்கள் சமய நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எனச் சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

அப்படிச் சொல்ல முடியாது. கீழடியில் அகழாய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இடம் 110 ஏக்கர் மட்டுமே. வைகை நதிக்கரையில் இதுபோல 293 இடங்கள் இப்படி அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இதுவரை கீழடியில் மூன்று – நான்கு ஏக்கர்கள்தான் தோண்டப்பட்டிருக்கின்றன. மீதியைத் தோண்டும் போது என்ன கிடைக்குமெனத் தெரியாது.  இப்போதுவரை வழிபாட்டுக்கூடம் போன்றவற்றிற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.

ஆனால், இது சங்க காலத்துடன் தொடர்புடைய இடம் என்பதால் இதை, எச்சரிக்கையுடன்தான் அணுக விரும்புவேன். சங்க கால மக்களை வழிபாடு அற்றவர்கள் எனச் சொல்ல முடியாது. சங்க இலக்கியமே, குறிஞ்சி, முல்லை, மருதம் என ஐவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு இடத்திற்கு ஒரு கடவுள் இருந்தார்கள். தவிர, நடந்து செல்லும் பாதையைப் பாதுகாக்கும் தெய்வங்கள், மரத்தில் இருக்கும் தெய்வங்கள், காட்டில் உள்ள தெய்வங்கள் இருந்தன. பெரும்பாலும் தாய்த் தெய்வ வழிபாடு இருந்தது. இதற்கான ஆதாரம் பிறகு கிடைக்கலாம்.

ஆனால், நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இம்மாதிரியான வழிபாடு அந்த சமூகத்தின் மையப் பொருளாக இல்லை என்பதைத்தான். சங்க இலக்கியத்தை முழுதாகப் படித்துப் பார்த்தால், அந்தக் கால வாழ்க்கை என்பது, Celebration of life ஆகத்தான் இருந்திருக்கின்றது. அந்த இலக்கியம் வாழ்க்கையைக் கொண்டாடுகின்றது. தினசரி வாழ்வைக் கொண்டாடுகின்றது. இப்போது கிடைத்திருக்கும் பொருட்கள் அந்த வாழ்வை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், எதிர்கால அகழாய்வுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும்.

கீழடியில் விளையாட்டுப் பொருட்கள் அதிகம் கிடைத்திருப்பது குறித்து அதிகம் பேசப்படுகின்றதன் முக்கியத்துவம் பற்றி கேட்டதற்கு,

killady9 கீழடி – சிந்து சமவெளி- சங்க இலக்கியம் இவை ஒரே புள்ளியில் இணைகின்றன சிந்துவெளி தொடர்பான ஆய்வாளர் ஆர். பாலகிருஸ்ணன்அதில் இரண்டு மூன்று விடயங்கள் இருக்கின்றன. அந்த மக்கள் நிலையான வாழ்வை வாழ்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் பொருளாதாரம் உபரிப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். உள்நாட்டு வணிகம் – வெளிநாட்டு வணிகம் ஆகிய இரண்டிற்கும் கீழடியில் ஆதாரம் கிடைத்திருக்கின்றது. ஆகவே, இங்கு வேளாண்மை சார்ந்த, கால்நடை வளர்ப்பு சார்ந்த, வணிகம் சார்ந்த ஒரு பொருளாதாரம் இருந்திருக்க வேண்டும். அதில் உபரி இருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வரலாம். அப்போது தான் விளையாட்டிற்கு நேரம் கிடைக்கும். அது நாகரிகத்திற்கான முக்கியமான அடையாளம். சிந்து வெளியிலும் இதுபோல விளையாட்டுப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. தவிர, சங்க இலக்கியம் விளையாட்டுக்கள் குறித்து நிறையப் பேசுகின்றது. அதை உறுதிப்படுத்துவது போல இந்தப் பொருட்கள் இருக்கின்றன.

கீழடி குறித்து பேசும் போது, ஆதிச்ச நல்லூர் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. அந்த இடம் தொல்லியல் ரீதியில் எவ்வளவு முக்கியமான இடம் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

அலெக்ஸான்டர் ரீ முதன் முதலில் 1904இல் ஆதிச்ச நல்லூரில் அகழாய்வைத் தொடங்கிய போது, சிந்து சமவெளியே கண்டறியப்படவில்லை. 1920களில்தான் சிந்துவெளியில் ஆர்.டி.பேனர்ஜி, எம்.எஸ். வாட்ஸ் ஆகியோர் அகழாயிவில் ஈடுபட்ட பின்னர், சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி குறித்த ஒரு அறிக்கையைக் கொண்டு வருகின்றார். அலெக்ஸான்டர் ரீ அந்த காலகட்டத்தில் அதை ஒரு புதைமேடாகத்தான் பார்த்தார். அதாவது இறந்தவர்களைப் புதைப்பதற்கான ஒரு இடமாகப் பார்த்தார். ஆனால், அப்போதே அவர் 30 இடங்களில் இங்கு அகழாய்வு மேற்கொள்ள முடியுமென கண்டறிந்தார்.

ஆனால், அதற்குப் பின்னர் 100 வருடம் அங்கு ஏதும் ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது ஆச்சரியமானது. 2004இல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆய்வு முடிவு தற்போது வரை வெளியாகவில்லை.

ஆனால், கீழடி, ஆதிச்ச நல்லூர் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பார்க்க வேண்டியதில்லை. தமிழகத்தில் உள்ள பல நதிக்கரைகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழக அரசைப் பொறுத்தவரை ஆதிச்ச நல்லூரிலும் ஆய்வுகள் நடக்குமெனச் சொல்லியிருக்கின்றனர். அது மகிழ்ச்சியளிக்கின்றது.

 

 

Leave a Reply