கிழக்கு அரசியல்வாதிகளின் உண்மை தோற்றத்தை புரிந்து கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது

449 Views

கிழக்கு மாகாணம் செல்வம் கொழிக்கும் மாகாணம். அனைத்து வளங்களையும் கொண்ட மாகாணம். இந்த மாகாணத்தின் வளங்கள் பொருளாதார நிலையினை பெருக்கக் கூடிய நிலையில் இருந்ததன் காரணமாகவே அந்நியரின் ஆட்சியானது இந்த நாட்டில் உருவாகுவதற்கு காரணமாக அமைந்தது.

வடகிழக்கு மாகாணத்தின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தபோதிலும், அது தமிழர்களின் மாகாணமாக ஆகிவிடக் கூடாது என்பதில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர்.

தமிழர்கள் மத்தியில் காலங்காலமாக காணப்பட்ட ஒற்றுமையீனத்தையும், சுயநலத்தினையும் கொண்டு தமிழர்களின் தாயகத்தினை இலகுவில் கூறுபோடும் செயற்பாடுகளை சிங்கள அரசுகள் முன்னெடுத்து வந்தன.

அதன் காரணமாகவே இந்த நாட்டில் ஆயுதப் போராட்டங்கள் தோற்றம் பெற்றன. இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில், தமிழர்களின் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபகரிப்பு காரணமாகவே அதிகளவான தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடி, தாயக மீட்புக்காக விதையாகிப் போனார்கள். இந்த இழப்புகள் இன்று எமது இளையோரின் எண்ண ஓட்டங்களில் எவ்வாறு உள்ளது என்பது பல்வேறு கேள்விகளை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பி நிற்கின்றது.

இன்று கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், அதிகளவான இளைஞர்கள் அபிவிருத்தி என்னும் பாதை நோக்கிச் சென்று பேரினவாதத்தின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கும் நிலை தோன்றியுள்ளது.

கடந்த காலத்தில் தமிழ் இளைஞர்களின் போராட்டம் என்ன நோக்கத்திற்காக நடாத்தப்பட்டது; அந்த நோக்கம் நிறைவேற எவ்வாறான முன்னெடுப்புகள் செய்யப்பட வேண்டும்; எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வழிகாட்டல் இல்லாத நிலையும் இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.

தமிழ் தேசியத்தினை நோக்காக கொண்ட கட்சிகள் கிழக்கில் மேற்கொண்ட கடந்தகால நகர்வுகள், சில கட்சிகளின் கிழக்கு தொடர்பான அசமந்தப் போக்குகள் இதற்கு காரணமாக அமைந்தன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், சிங்கள தேசம் இன்று தமிழர்களின் தமிழ் தேசிய உணர்வில் இருந்து இளைஞர்களை திசைதிருப்புவதற்கு கையில் எடுத்துள்ள ஆயுதமாக முஸ்லிம் எதிர்ப்பு காணப்படுகின்றது.

தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் உள்ள வளசமநிலையினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம்கள் உயர்நிலையில் உள்ளனர், தமிழர்கள் கீழ் நிலையில் உள்ளனர். கடந்த காலத்தில் அரசாங்கத்தினை ஆதரித்து முஸ்லிம்கள் தங்களை வளர்த்துக் கொண்டார்கள், அரசாங்கங்களை எதிர்த்துக்கொண்டு தமிழர்கள் அனைத்தையும் இழந்து விட்டார்கள் என்ற வகையிலான பிரசாரங்கள் திட்டமிடப்பட்ட வகையில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் பின்னணியில் இலங்கை புலனாய்வுத்துறையின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் சில புலம்பெயர் தமிழர்கள் இருப்பதுதான் மிகவும் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விடயமாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா துரத்தப்பட்ட போது அதனைப் பயன்படுத்தி புலம்பெயர் தேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சில தமிழர்கள் தங்களது செயற்பாடுகளை இன்று கனகச்சிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.

முகப்புத்தகங்கள் ஊடாகவும், போலி இணையத்தளங்கள் ஊடாகவும் வட்சப் உட்பட்ட குழுமங்கள் ஊடாகவும் உதவி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு, அதன் ஊடாகவும் மிகவும் கனகச்சிதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் தமிழ் தேசியத்தின்பால் செயற்பட்ட தமிழ் இளைஞர்கள் பலர் மூளைச் சலவை செய்யப்பட்டு அபிவிருத்தி அரசியல் நோக்கி நகர்த்தப்பட்டனர்.

இவ்வாறான செயற்பாடுகளின் விளைவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தின் வீழ்ச்சியில் பெரும்பங்காற்றியது. தமிழ் தேசியத்தை நோக்கி செயற்படும் கட்சிகளின் தவறான செயற்பாடுகளை சிங்கள தேசம் சரியாக பயன்படுத்தி தனது நோக்கத்தினை நிறைவேற்றிக் கொண்டது.

அபிவிருத்தி மூலம் மட்டுமே கிழக்கினை மீட்க முடியும் என்ற நம்பிக்கையினை சிங்கள தேசம் தமிழ் இளைஞர்கள் மீது திணித்தபோதும், சிங்களத்தின் மறுபக்கத்தினை இன்று தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்ளும் அல்லது தமது நோக்கம் பிழையானது என்பதை அறிந்து கொள்ளும் நிலை இன்று மிக விரைவாகவே ஏற்பட்டுள்ளது.

வியாழேந்திரன், பிள்ளையான், கருணா போன்றவர்களை தங்களது மீட்பர்களாக நம்பி அவர்கள் பின்சென்ற தமிழ் இளைஞர்கள், அவர்கள் யாரின் கைப்பொம்மைகளாக இயங்குகின்றார்கள் என்ற உண்மையினை புரிந்து கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது.

முஸ்லிம் எதிர்ப்புக்கு அப்பால் சிங்கள தேசம் கிழக்கில் முன்னெடுத்துள்ள ஆக்கிரமிப்பு செயற்பாடுகளே இன்று தமிழ் இளைஞர்கள் தங்களது கடந்தகால போராட்டத்தினை நினைத்துப் பார்க்க வைத்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடப்பதற்கு முன்பாகவே கிழக்கு மாகாணத்தினை ஆக்கிமிப்பு செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்களிடம் இருந்து தமிழர்களை பாதுகாப்பதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு பதிலாக தமிழர்களிடம் உள்ளதை பிடுங்கும் செயற்பாடுகளை மிகவும் கனகச்சிதமாக சிங்கள தேசம் முன்னெடுத்து வருகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் செய்யப்பட்டதன் பின்னர் இந்த நடவடிக்கைகள் மிகவும் வேகமாக முன்னெடுத்து வரப்படுகின்றது.

குறிப்பாக வாகரை, வாழைச்சேனை, கிரான், செங்கலடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மிகவும் வளமிக்க காணிகளில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண ஆளுநர் வெளிப்படையாகவே முன்னெடுத்து வருகின்றார்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் குடியேற்றங்களை மேற்கொள்ளவும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் தேசியத்தினை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் மட்டுமே செயற்படும் நிலையுள்ளது.

இவற்றினை தட்டிக்கேட்க முடியாத வகையில் தமிழ் இளைஞர்களினால் நம்பிக்கை கொள்ளப்பட்ட வியாழேந்திரன், பிள்ளையான், கருணா போன்றவர்கள் இருப்பதன் காரணமாக அபிவிருத்தி அரசியலில் இளைஞர்கள் வெறுப்படையும் நிலையேற்பட்டுள்ளது.

உரிமையில்லாத அபிவிருத்தியில் எந்தவிதமான நன்மையும் ஏற்படப் போவதில்லையென்பதை பல ஆண்டுகளாக தமிழ் தலைவர்கள் கூறிவந்துள்ளனர். அந்த நிலையென்பது இன்றும் மாற்றம் பெறாத நிலையே இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் விரைவாக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பதற்கு தமிழ் தேசியத்தினை நேசிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது இன்றைய காலத்தில் மிகவும் முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது.

வடக்கில் இணைந்து செயற்படுவதற்கு முன்வரும் தமிழ் தேசிய கட்சிகள் கிழக்கில் அவ்வாறான இணைவுகளை மேற்கொள்வதற்கு முன்வராத காரணமும் தமிழ் இளைஞர்கள் பாதை மாறிச் செல்வதற்கு ஒரு காரணமாக அமைகின்றன.

எனவே கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகப்பூமி அதனை பாதுகாக்க வேண்டியது தமிழ் இளைஞர்களினதும் தமிழ் தேசியத்தினை நேசிக்கும் கட்சிகளினதும் முக்கியமான கடமையாகும். அதனை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை தமிழ் தேசியத்தினை நேசிக்கும் ஒவ்வொரு தமிழ் மக்களின் மனங்களிலும் ஏற்பட்டுள்ளது.

-மட்டு.நகரான்-

Leave a Reply