காவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்

கடமையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரைக் காணொளி எடுக்கின்ற செயற்பாட்டைக் குற்றச்செயலாக வகைப்படுத்தும் உத்தேச பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை நீக்க வேண்டும் எனக் கோரி, ஆயிரக்கணக்கான மக்கள் அண்மை நாட்களாக பாரிஸ் நகர வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். வீதிகளில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மக்கள் வெளிப்படுத்திய கோபாவேசம், சட்டவரைபின் குறிப்பிட்ட பகுதியை தாம் மீள எழுதுகின்றோம் என்று அரசு அறிவிப்பை மேற்கொள்வதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சட்டத்தை முழுமையாகக் கைவிடுவதே அரசு உண்மையில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடாகும்.

             காவல்துறையைச் சேர்ந்த தனிநபர்கள் செய்கின்ற தவறான செயற்பாடுகளை இப்படிப்பட்ட காணொளிகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது மட்டுமல்லாது, பிரெஞ்சு சமூகத்திலும் அரச நிறுவனங்களிலும் நிலவுகின்ற கட்டமைப்பு ரீதியிலான இனவாதத்தை பகிரங்கப்படுத்தி, அவை பற்றிய ஒரு விவாதத்தைத் தோற்றுவித்திருக்கின்றன. உண்மையில் இந்த விடயம் தொடர்பாக அதிக கவனயீர்ப்பும், அதிக ஊடகப்பதிவுகளும் ஒளிநாடாக்களும் அதே வேளையில் அதிகமான பொறுப்புக்கூறலும் கொண்டுவரப்பட வேண்டுமேயொழிய, இவை எந்த வகையிலும் தடுக்கப்படவோ குறைக்கப்படவோ கூடாது.

             சில வாரங்களுக்கு முன்னர், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு இசையமைப்பாளரான மிஷேல் செக்கிளேர் (Michel Zecler) என்பவர் காவல் துறையினரால் மிகவும் குரூரமாக அடித்துத் துன்புறுத்தப்படுகின்ற நிகழ்வை, அப்படிப்பட்ட ஒரு காணொளி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. செக்கிளேரின் இசைக் கலையகத்தில் (music studio) மூன்று காவல்துறையினரால் பல நிமிடங்களாக அவர் காலால் உதைக்கப்படுவதையும், கைகளால் குத்தப்படுவதையும் காண்பிக்கும் காணொளி லூப்சைடர் செய்தி நிறுவனத்தால் (Loopsider News) வெளியிடப்பட்டது. நான்காவது காவல்துறை உறுப்பினர் கண்ணீர்ப் புகையைக் கொண்ட உருளையைக் கட்டடத்துக்குள் எறிவதையும் அக்காணொயில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

             இறுதியில் துப்பாக்கி முனையில் செக்கிளேர் கலையகத்துக்கு வெளியே பலவந்தமாகக் கொண்டுசெல்லப்படுவதை, செக்கிளேரின் அயலவர்களால் எடுக்கப்பட்ட காணொளிகளிலும் இசைக்கலையகத்தின் சிசிரிவி (CCTV) ஒளிப்படக் கருவிகளால் எடுக்கப்பட்ட காணொளிகளிலும் பார்க்கக்கூடியதாகவிருக்கிறது. தற்போதைய கோவிட்-19 நோய்ப்பரம்பல் சூழமைவின் நடைமுறைக்கேற்ப, நாற்பத்தொரு வயது நிரம்பிய இந்த இசைப்படைப்பாளர் முகக்கவசம் (mask) அணிந்திருந்தாரா என்பது தொடர்பான ஒரு கருத்து முரண்பாட்டின் காரணமாகவே இந்த சம்பவம் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.

             இந்தக் காணொளிகள் மட்டும் இல்லையென்றால், குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாகக் மிஷேலே தங்களை முதலில் தாக்கியதாகவும், வன்முறையை அவரே முதலில் தொடங்கியதாகவும் கூறுகின்ற காவல்துறையினரின் கதையையே தனது நண்பர்களும் குடும்பத்தவர்களும் கேட்டிருப்பார்கள். அதுமட்டுமன்றி அவையே உண்மை என்றும் அவர்கள் நம்பியிருப்பார்கள் என்று மிஷேல் தெரிவிக்கிறார். ஒருவேளை அவர் சிறையிலும் அடைக்கப்பட்டிருப்பார். மிஷேல் இன்று சுதந்திரமாக உலவுவதற்கு இக்காணொளிகளே அடிப்படைக் காரணமாகும்.

             புதிய பாதுகாப்புச் சட்டத்தின் காரணமாக செக்கிளேரைப் பாதுகாத்தவர்கள் செய்ததைப் போன்று, காணொளிகளை எடுத்து வெளியிடுகின்றவர்கள் எதிர்காலத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படக்கூடிய ஆபத்து இருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

             கடமையில் ஈடுபடுகின்ற காவல்துறையினரை உடலியல் ரீதியாகவோ அன்றேல் உளவியல் ரீதியாகவோ பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடிய விதத்தில் அவர்கள் தொடர்பான காட்சிகளை வெளியிடுவோரின் செயற்பாடு, குற்றவியல் செயற்பாடாகக் கருதப்பட்டு குறிப்பிட்ட உத்தேச சட்டத்தின் 24வது பகுதியின் படி, அப்படிப்பட்டவர்களுக்கு, ஒரு வருட சிறைத்தண்டனையும் 45,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும்.

             குறிப்பிட்ட சட்டம் வரையறை இல்லாது மிகவும் விரிவாக இருப்பதன் காரணமாகவும் அதன் மொழிநடை தெளிவற்று இருப்பதன் காரணமாகவும் பிரெஞ்சு மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பாக அச்ச உணர்வைத் தோற்றுவித்திருப்பதாக ஊடகவியலாளர்களும் சிவில் சமூகக் குழுக்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றன.

             ‘தீய நோக்கோடு” காவல் துறையினரைக் காணொளி எடுப்பவர்களுக்கே குறிப்பிட்ட சட்டம் பொருந்தும் என்று காகிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் போது, ஆர்ப்பாட்டங்களின் முன்னணி வரிசைகளில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்படும் போது, காணொளி எடுப்பவர்களின் நோக்கம் எதுவாக இருக்கும் என்ற முடிவை காவல் துறையினரே எடுப்பார்கள். அதற்கு ஏற்றவகையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மேல் வழக்குத் தொடரப்படும் நிலை இருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், சட்டத்துக்கு முரணான வகையில் காவல் துறையினர் நடக்கும் போது அவர்களைக் காணொளியில் பதிவு செய்யும் செயற்பாடு, சட்டத்துக்கு முரணானதாகக் கருதப்பட்டு, அப்படிக் காவல்துறையினர் மேற்கொள்ளும் வன்முறைகளையும் தவறான செயற்பாடுகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயற்சிப்பவர்கள் குற்றவாளிகள் என வரையறை செய்யப்படுவார்கள்.

             நீதிமன்றுகள் இப்படிப்பட்ட ஒரு சட்டத்துக்கு எப்படி விளக்கம் கொடுக்கும் என்றோ எதிர்ப்புப் போராட்டங்களை அமைதிப்படுத்த அச்சட்டத்தை அரசு எப்படி மீளவும் எழுதப் போகின்றது என்பது தொடர்பாகவோ இன்னமும் தெளிவாகவில்லை. ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களை உரிய முறையில் கவனத்திலெடுத்து சட்டத்தில் காத்திரமான முறையில் உருப்படியான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எண்ணுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறலாம்.

             நிறுவனமயமாக்கப்பட்ட இனவாதம் மிக அதிகளவில் காணப்படும் ஒரு நாட்டில் குறிப்பிட்ட இனங்களுக்கு எதிரான காவல் துறையின் மிருகத்தனமான செயற்பாடுகள் மக்களால் தெரிவு செய்யப்படும் அதிகாரிகளால் இன்னும் மறுதலிக்கப்படும் சூழலில், வெள்ளை இனத்தைத் தவிர்ந்த ஏனைய இனத்தவர்களுக்கு இந்தச் சட்டம் மிகவும் மோசமான ஒரு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காணொளிகளைப் பதிவு செய்வதே, பிரான்சு நாட்டைப் பொறுத்தவரை காவல்துறையினரின் வன்முறைச் செயற்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதற்கு, கறுப்பின மற்றும் பழுப்பு (brown) நிற மக்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு வழியாகும்.

             கறுப்பின மக்களையும் பழுப்பு நிற மக்களையும் இலக்கு வைத்து பிரான்சில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனவேறுபாடுமிக்க துஷ்பிரயோகமான அடையாளத்தைப் பரிசோதிக்கின்ற செயற்பாட்டை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்ற ஒரு அறிக்கையை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) கடந்த ஜூன் மாதத்திலே தான் வெளியிட்டிருக்கிறது. வெள்ளை இனத்தவர்களுடன் ஒப்பிடும் போது, கறுப்பினத்தவர்கள் 3.3 தொடக்கம் 11.5 தடவைகள் அதிகமாகவும், அதே வேளையில் அராபியர்கள் 1.8 இலிருந்து 14.8 தடவைகள் அதிகமாகவும் தடுத்து நிறுத்தப்படும் நிலை இருப்பதாக திறந்த சமூக நீதிச் செயற்பாடு (Open Society Justice Initiative) ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

             உண்மையில் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், காவல்துறையில் ஒரு சில கறுப்பாடுகள் மட்டும் இருக்கின்றன என்பதற்கப்பால், இது கட்டமைக்கப்பட்டதொன்று என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியதாகும். இது பிரான்சின் காலனீய காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்ற ஒரு கட்டமைப்பு ரீதியிலான பிரச்சினை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும், ‘பிரெஞ்சு காவல்துறையினர் தேவைப்படும் அளவான வன்முறையையே பயன்படுத்துகின்றார்கள்” என்று பிரான்சின் உள்துறை அமைச்சரான ஜெரா தர்மானின் (Gerard Darmanin) ஜூலை மாதம் தெரிவித்திருக்கிறார்.

             உண்மையிலே இங்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது என்பதை மறுதலிப்பதற்கப்பால், பிரெஞ்சு பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்களையும் இனவாதத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றவர்களின் வாயை அடக்க பிரெஞ்சு அதிகாரிகள் முனைப்பாக செயற்படுவதை இங்கு அவதானிக்கலாம்.

             வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்கள் அதிகமாக வாழுகின்ற புறநகர்ப்பகுதிகளிலும் சிறுநகரங்களிலும் நடைபெறுகின்ற வன்முறைகளைக் காணொளியாக்குகின்ற ஊடகவியலாளர்களை நீண்ட காலமாகவே பிரெஞ்சு அரசு இலக்கு வைத்து வருகின்றது. அத்துடன் இந்தக் கசப்பான உண்மையை வெளிக்கொணர்கின்ற ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கு அதிக அதிகாரத்தை கொடுப்பதற்கென்றே புதிய பாதுகாப்புச் சட்டம் தெளிவாக வரையப்பட்டிருக்கின்றது என்பதையும் காணக்கூடியதாகவிருக்கிறது.

             எடுத்துக்காட்டாக, 2019 ஜூன் மாதத்தில் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாத தொழிலாளிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் காணொளிப்படம் எடுத்ததற்காக, ‘La-bas Si J’suis’  என்ற செய்தி இணையத்தளத்தில் பணிபுரியும் ஒரு செய்தியாளரான தாஹா புஹாவ்ஸ் (Taha Bouhafs) என்பவரை மிகவும் வன்முறையான வகையில் பிரெஞ்சு காவல் துறையினர் கைதுசெய்ததுடன் அவரது அலைபேசியையும் பறிமுதல் செய்திருந்தனர். காவல் துறையினரை அவமதித்ததாகவும் கலகத்தைத் தூண்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த ஊடகவியலாளர், அடுத்த நாள் விடுதலை செய்யப்பட்டார். பிரெஞ்சு காவல்துறையினரின் வன்முறையைக் வெளிக்கொணரும் செயற்பாட்டில் பிரெஞ்சுப் பாதுகாப்புப் படையினரின் கோபத்தைச் சம்பாதித்தது புஹாவ்ஸைப் பொறுத்தவரையில் இது முதற் தடவையல்ல.

             பிரெஞ்சு அதிபரான இம்மானுவேல் மக்ரோனின் (Emmanuel Macron) பணிமனையில் பணிபுரிவோரின் உதவிப் பொறுப்பாளராகவிருக்கின்ற அலெக்சான்டர் பெனல்லா (Alexander Benalla) என்பவர் 2018இல் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைத் தாக்கிய போது மேற்குறிப்பிட்ட ஊடகவியலாளரால் எடுக்கப்பட்ட படம் குறிப்பிட்ட அந்த அதிகாரி மீது விசாரணை மேற்கொள்ளப்படக் காரணமாக அமைந்ததால், அக்கணத்திலிருந்து பிரெஞ்சு காவல்துறையினர் அந்த ஊடகவியலாளரைத் துன்புறுத்த ஆரம்பித்தனர்.

             குறிப்பிட்ட இனங்களுக்கு எதிராக பிரெஞ்சுக் காவல் துறையினர் மேற்கொள்கின்ற வன்முறைகளை வெளிக்கொணர்கின்ற புஹாவ்ஸம், அவரைப் போன்ற ஊடகவியலாளர்கள் பலரும் கடந்த சில வருடங்களாகப் பிரெஞ்சு காவல்துறையினரால் இலக்கு வைக்கப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் பிரெஞ்சு அரசின் ஆதரவுடனேயே நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

             ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தமது பணியைச் செய்வதற்கு புதிய பாதுகாப்புச் சட்டத்தின் 24ஆவது பகுதி தடையாக அமையும் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்ட போது, ‘ஒவ்வொரு பிரெஞ்சுப் பிரசையுமே தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று அழைக்க முடியாது” என்று ஆட்சியதிகாரத்தில் இருக்கின்ற ஒரு கட்சியான ‘பயணிக்கும் குடியரசு’ (The Republic on the Move) என்ற கட்சியைச் சார்ந்த  ஓரோ பேர்ஜ் (Aurore Berge) என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

             ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள முடியாதவாறு தடைகளைக் காவல்துறையினர் ஏற்படுத்திய நிகழ்வுகளைக் காணொளிகளாக்கி பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த போது, மக்ரோன் நிர்வாகம் குறிப்பிடத்தக்க வகையில் தங்களை நியாயப்படுத்தியிருக்கிறது. ஆர்ப்பாட்டங்களின் போது, காவல்துறையினர் மேற்கொண்ட மிருகத்தனமான செயற்பாடுகள் தொடர்பான காணொளிகளைச் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பிரெஞ்சு அரசுக்கு மிக அதிக தலையிடியை ஏற்படுத்திய மஞ்சட் சட்டைக்காரர்களுக்கு (Gilet Jaunes)  எதிராகக் கொண்டுவரப்பட்டதே இந்தப் புதிய சட்டமாகும். பொதுமக்கள் முன்னெடுக்கின்ற ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்யும் அரசின் செயற்பாடு தொடர்பான விழிப்புணர்வையும், உரையாடல்களையும் மட்டுப்படுத்தும் வகையில் சட்டங்களை வரைகின்ற அரசின் செயற்பாடு, நாட்டில் இனங்களுக்கான நீதியை நிலைநாட்டுவது தொடர்பாக உருவாகும் இயக்கங்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறிக்குள்ளாக்கியிருக்கிறது.

             என்றோ தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய இனங்களுக்கான நீதிக்கான போராட்டத்தின் நடுவில் இன்று பிரான்சு நாடு இருக்கிறது. நாட்டின் பிரசை ஒவ்வொருவரும், தமது தோலின் நிறம் எதுவாக இருந்தாலும், பாதுகாப்புணர்வைக் கொண்டிருக்கும் ஒரு நாடாக பிரான்சு விளங்க வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் பிரசைகள் இன்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். இனவாதத்துக்கு எதிராகப் பிரான்சில் உருவாகியிருக்கும் இயக்கம் நாளுக்கு நாள் பலமாகிக்கொண்டே வருவதுடன், இந்தக் கட்டமைப்பு ரீதியிலான இனவாதத்தை ஒரு முடிவுக்கொண்டு வரவேண்டும் என மக்கள் அரசுக்கு அழுத்தத்தையும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

             ‘கறுப்பின மக்களின் உயிர்களும் முக்கியமானவை” (Black Lives Matter) என்ற போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்து, நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் இந்த வருடம் ஜூன் மாதத்தில் பாரிசின் வீதிகளில் இறங்கினார்கள். நாடு முழுவதும் பல வாரங்களாக இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இனங்கள் தொடர்பான நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கை மிகப் பலமாகிக்கொண்டு செல்கின்ற வேளையிலும், அரசியல்வாதிகள் இப்பிரச்சினையைத் தொடர்ந்தும் அலட்சியப்படுத்திக் கொண்டிருப்பது மட்டுமன்றி, வெள்ளையினத்தைச் சாராத மக்களைத் துன்புறுத்துகின்ற காவல்துறையினரைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்குப் பதிலாக பொதுமக்களையும் அவர்களுக்கு ஆதரவு தர முன்வருபவர்களையும் குற்றவாளிகளாக்கும் சட்டங்களை இயற்றுவதில் முனைப்பாக இருக்கின்றனர்.

             காவல்துறையினர் மேற்கொள்ளுகின்ற வன்முறையை ஆவணப்படுத்துவது ஒரு வகையான போராட்டமாகும். நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற கட்டமைப்பு ரீதியிலான இனவாதத்தை காவல் துறையினர் மேற்கொள்ளும் மிருகத்தனமான செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதுடன், நாட்டிலும் பன்னாட்டளவிலும் கவனத்தை ஈர்க்கும் செய்திகளாகி, இப்பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அழுத்தத்தை அரசுக்குக் கொடுக்கிறது. இனவாதம் தொடர்பாக நாளுக்கு நாள் வளர்ந்துவருகின்ற விவாதத்தையும் இனங்களுக்கான நீதி தொடர்பாக நாட்டில் முன்வைக்கப்பட்டு வரும்  கோரிக்கையையும் தடைசெய்வதில் அரசு முனைப்பாக இருக்கின்றது என்பதையே புதிய பாதுகாப்புச் சட்டம் வெளிப்படுத்துகிறது.

             இதன் காரணமாகவே பிரெஞ்சு மக்கள், 24வது பகுதியை மாற்றுவதற்குப் பதிலாக அதனை முற்றுமுழுதாகக் கைவிடவும் நாட்டில் உள்ள கட்டமைப்பு ரீதியிலான இனவாதத்தை ஒழித்து, பிரான்சில் வதிகின்ற வெள்ளை இனத்தவரல்லாதவர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள காயங்களை ஆற்றக்கூடிய சட்டங்களையும் கொள்கைகளையும் உருவாக்குவதில் அரசு கவனஞ்செலுத்துவதற்கான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

நன்றி: அல்ஜசீரா