இலங்கை மாகாண சபைகள் ஒழிக்கப்படுகிறதா? -கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்

இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் அமல்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கடந்த சில தினங்களாக அதிகம் பேசப்படுகின்றது.

இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி தமிழ் சேவையில் வெளியான செய்தி கட்டுரையில் இலங்கையில் அமல்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அதில்,

“எளிதான செயல் கிடையாது”

மாகாண சபைகளை ரத்து செய்வது என்பது தீயுடன் விளையாடுவதை போன்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவிக்கின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தத்தை ரத்து செய்வது இலகுவான விடயம் கிடையாது என அவர் கூறியுள்ளார். அவ்வாறு 13வது திருத்தம் ரத்து செய்யப்படுமாக இருந்தால், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் பாரிய விரிசல் ஏற்படக்கூடும் என மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நாட்டில் கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளை, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் வரை மீண்டும் செயற்படுவதற்கான யோசனையொன்றை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அரசாங்கத்திற்கு முன்மொழிய தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை அண்மையில் எட்டியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் எண்ணத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க இடமளிக்க முடியாது என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என அவர் கூறுகின்றார்.

இரண்டு நாடுகளின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு முறைமை இதுவென அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த ஒப்பந்தத்தின் ஊடான அதிகார பகிர்வு முறைமை தமிழர்களுக்கு ஏற்றதாக இல்லாத போதிலும், இந்த முறையை அடிப்படையாகக் கொண்டே அர்த்தமுள்ள அதிகார பகிர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறுகின்றார்.

இந்த உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம், பல்வேறு சந்தர்ப்பங்களில் சர்வதேசத்திற்கு வழங்கியுள்ளமையினால், மாகாண சபை முறைமையை இல்லாது செய்வதற்கு அனுமதி வழங்க முடியாது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

மாகாண சபை முறைமையை அர்த்தமுள்ளதாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், மாகாண சபை முறையை அர்த்தமுள்ளதாக வலுப்படுத்தி, இனப் பிரச்சினைக்கான தீர்வாக அது அமைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசியலமைப்பிலுள்ள ஒரு விடயத்தை, ஒரு தரப்பின் நிலைப்பாட்டிற்கு அமைய இல்லாதொழிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

இரண்டு நாடுகளுக்கு இடையில் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்றின் விளைவாக வந்த ஒரு மாற்றமே, மாகாண சபை முறைமையை என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கையின் இனப் பிரச்சினை விவகாரம், இந்தியாவையும் பாதித்துள்ளதாக கூறிய ரவூப் ஹக்கீம், அதன் விளைவாகவே இந்த முறைமை ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறுகின்றார்.

ஒரு சில குழுவினரின் கருத்துக்களை நம்பி, இராஜதந்திர ஒப்பந்தமொன்றை மீறுவதன் ஊடாக பாரிய தவறை அரசாங்கம் இழைப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் அமையப் பெற்ற முக்கியமான அம்சம் இந்த 13வது திருத்தம் என அவர் கூறுகின்றார்.

மாகாண சபை முறைமை குறித்து, பெரும்பான்மையினர் மாத்திரம் தீர்மானமொன்றை எட்ட முடியாது என கூறுகின்ற ரவூப் ஹக்கீம், இந்த விடயத்தில் கட்டாயம் சிறுபான்மையினரையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

13வது திருத்தத்திற்கும் அப்பால் சென்ற அதிகார பகிர்வை வழங்குவதாக சர்வதேசத்திற்கு அரசாங்கம் கூறி, காலத்தை கடத்தியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் விடயத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க முடியாது எனவும், அவ்வாறு மாகாண சபை முறைமை இல்லாதொழிக்க முயற்சிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவிக்கின்றார்.

அரசாங்கத்திற்குள்ளேயே இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுகின்றமையினால், தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபை முறைமையை அவர்களினால் இல்லாதொழிக்க முடியாது என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் சார்பில் நாடாளுமன்ற பதவிகள் கிடைக்காத தரப்பினர், மாகாண சபையின் ஊடாகவே தமக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

நாட்டுக்காக அன்றி, தமக்கான அங்கீகாரத்திற்காக அரசாங்கம் மாகாண சபை முறைமையை பாதுகாக்கும் என தாம் நம்புவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

மாகாண சபை இல்லாதொழிக்கப்படும் என வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியிலேயே அவர் இதனைக் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் பிற்போட தாம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். நாட்டில் காணப்படுகின்ற கோவிட் வைரஸ் தாக்கத்தை அடுத்தே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

நன்றி – பிபிசி தமிழ்