கார்த்திகைச் செல்வன் பூத்த இத்திருநாள்!

435 Views

கார்த்திகைச் செல்வன் பூத்த இத்திருநாள்!

உலகத்தமிழரை உயரவைத்த ஓர்
உன்னத சக்தி இப்பூமியில் உதித்த
திலகத் திருநாள் இன்றைய பெருநாள்!
நிலவின் குளிரும் கதிரின் ஒளியும்
தமிழர் உரிமைக் குரலின் ஒலியும்
ஒருமைப் பொருளாய் உயிரினில் ஏந்தி
உதயமாகிய ஒப்பற்ற அருள்நாள்!

கார்த்திகைச் செல்வன் பிரபாகரனவன்
பூத்த இத்திருநாள் பூகோளம் வாழும்
நாற்றிசைத் தமிழர்க்கும் நல்லொளி யூட்டி
ஆற்றல் வழங்கும் அற்புத நன்னாள்!

அடிமைத் தளையின் இருளிற் தவித்து
அவலப்பட்டு அலைந்து குலைந்து
விடிவைத்தேடிய முதுதொல்குடியின்
விளக்காய் வீர வரலாற்றுப் பிறப்பாய்
மடியிற் தவழ மாதேவன் அனுப்பிய
முழக்கம் இந்தத் தரணியில் வந்துதன்
முகம்காட்டிய நற் திருநாள் இதுவாம்!

கொடியும் படையும் கொற்றத் திறனும்
கொண்டோர் தமிழன் வன்னிப்பரப்பில்
வடிவம் கொண்டு வான்வரை உயர்ந்து
இடிபோற் பகைவர் இதயம் புகுந்து
எம்தாய்நிலத்தின் எல்லை காத்துப்
படிமேற் படிகள் பலவும் ஏறிப்
பரணிப்பாவிற் கணிகள் சேர்த்து
முடிவேயில்லாப் பெருவாழ்வெய்தி
மூச்சாய்ப் பேச்சாய் எம்முள் நிறைந்தான்!

ஈகமும் தியாகமும் இன்னலும் இழப்பும்
இறைமையைக் காக்கும் இளமைவேகமும்
தாயகத் தாகமும் தாங்கியே மாவீரர்
ஆகிய அனைத்து மானிட யாகமும்
சாகாத சக்தியாயச் சரித்திரம் படைத்துச்
சோதியாய் எம்முள் சுடரென எழுந்தது!

அழிவான் தமிழன் ஈழத்தில் என்று
அடக்குமுறைகளை ஆட்சியாய் மாற்றும்
விழிகள் ஒருநாள் விடுதலை பெற்று
நடக்கும் தமிழரை நிச்சயம் காணும்!
பொழிவான் தமிழன் பேருரை உலகப்

பேரவை தனிலே பேரிகை முழங்கி!

இல்லங்கள் தோறும் ஒளிவிளக்கேற்றி
இறவா இனம்யாம் என்றிணைந்திடுவோம்!
உள்ளத்தின் அன்பினால் உலகினை அணைத்து
உரிமைகள் ஈட்டும் நெறிகளை அறிவோம்!
நல்லவை நடக்கும் நாளை நமதெனும்
நம்பிக்கையோடு நம்கடன் புரிவோம்!

– புலவர் சிவநாதன்-

Leave a Reply