காத்தான்குடி- தனிமைப்படுத்தல் பகுதியை நீக்குவதற்கான அறிவிப்பு சட்ட ரீதியற்றது

421 Views

காத்தான்குடி தவிசாளரினால் வெளியிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் பகுதியை நீக்குவதற்கான அறிவிப்பானது சட்ட ரீதியற்றது எனக் கூறிய  கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன், காத்தான்குடி பிரதேசம் தொடர்ந்து சிவப்பு வலயமாகவே இருந்துவருவதாக தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஊடக சந்திப்பில்  வைத்தியர் அழகையா லதாகரன் மேலும் கூறியுள்ளதாவது, “கிழக்கு மாகாணத்தில் நேற்று 2,767 சுகாதாரதுறை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ளது. அதனூடாக பாரியளவிலான எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

இதேவேளை கடந்த 24மணித்தியாலத்தில் கல்முனை பிராந்தியத்தில் இரண்டு மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 16தொற்றாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனா செயலணியின் அறிவுறுத்தல் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி அறிவிப்பினை உள்ளூராட்சிமன்ற தலைவர்கள் நீக்குவதற்கான அதிகாரம் இல்லை. காத்தான்குடி தவிசாளர் மேற்கொண்ட நடவடிக்கை சட்டரீதியற்றவை.

காத்தான்குடி பகுதியில் கொரோனா செயலணி நேற்றும் இன்றும் ஒன்றுகூடி பரிசோதனைகள் தொடர்பில் ஆராயும்போது ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் முடிவடையவில்லை. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ள பகுதியில் ஒரு நாளைக்கு குறைந்தது 150க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படவேண்டும். அவ்வாறு செய்யும்போதுதான் உண்மையான நிலைவரத்தினை அறியமுடியும். இரண்டு வாரங்களுக்கு முன்பாக காத்தான்குடியில் எட்டு கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தாக்கமானது முற்றுமுழுதாக நீங்கவில்லை.

எங்களைப்பொறுத்தவரையில் அங்குள்ள மக்களை பாதுகாப்பதே எமது உண்மையான நோக்கமாகும். அதனடிப்படையில் எதிர்வரும் மூன்று தினங்களில் இங்கிருந்து இரண்டு விசேட அணிகளை அனுப்பி மொத்தமாக 800க்கும் மேற்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பகுதி சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்காரணமாக அன்டிஜன்,பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன் பின்னர் அந்த பகுதிகளை விடுவிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply