காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகளவுக்குக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை ; கனடா எம்.பி.

220 Views

“காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகளவுக்குக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. இங்கு 1980 க்குப் பின்னர் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்” என கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Garnett Genuis தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி கனடாவில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் நீண்ட நடை பவனிக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். ரொறன்ரோ, மொன்றியல் பகுதிகளிலிருந்து பாராளுமன்றத்தை நோக்கி தமிழர்கள் இந்த நடை பவனியை மேற்கொண்டுவருகின்றார்கள்.

“வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கடத்தல் என்பன சர்வதேச உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும், சமூகங்களிலும் முக்கியமான ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினர் இந்த விடயம் தொடர்பில் குறிப்பாகவும் மனித உரிமை விவகாரம் குறித்து பொதுவாகவும் என்னைப் போன்ற அரசியல்வாதிகள் பேச வேண்டும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்கள்.

இப்போது ஒரு தொகையான மக்கள் இந்த விடயம் தொடர்பில் வழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கனடிய அரசாங்கத்தைக் கேட்பதற்காக ரொறொன்ரோவிலிருந்து ஓட்டோவாவுக்கும், கியூபெக்கிலிருந்து ஓட்டாவாவுக்கும் நடைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள். இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த நடைபவனியை மேற்கொண்டுள்ள மக்களுக்கு எமது கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாகவும், அதன் தலைவர் Erin O’Toole சார்பாகவும் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

இலங்கையிலும் உலக நாடுகளிலும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எமது கன்சர்வேட்டிவ் கட்சி கோரிவந்திருக்கின்றது. ஸ்ரேபன் ஹாபர் கொழும்பு மாநாட்டை 2013 இல் புறக்கணித்ததைத் தொடர்ந்து- அடிப்படை மனித உரிமைகளை மீறியவர்கள் மீது தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்திருந்தோம்.

இந்த நடைப்பவனியை மேற்கொண்டுள்ள மக்களுக்கு நான் மீண்டும் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் கொடுக்கப்போகும் மகஜருக்கு கனடிய அரசாங்கத்திடமிருந்து பதில் கிடைக்கும் என நம்புகின்றேன்.”

Leave a Reply