காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் புதைத்தது நீங்களா?- சுரேந்திரன் கேள்வி.

535 Views

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டி எடுப்பதாயின் அவர்களை மண்ணுக்குள் புதைத்தது தொடர்பில் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமது உறவுகளை தொலைத்துவிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனவேதனைகளோடு வீதியோரங்களில் வருடக்கணக்கில் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை நோக்கி அமைச்சர் விமல் வீரவன்ஸ காணாமல் போனவர்களை மண்ணிற்குள்தான் தோண்டி எடுக்க வேண்டும் என கூறியிருப்பது ஒரு கொடிய இனவாத கருத்தையும் விஞ்சிய ஒரு மனிதநேயமற்ற கருத்தாகும்.

மனித மனம் படைத்த அல்லது மனித நேயமுள்ள ஒருவன் எதிரியைக்கூட இவ்வாறு கூறமாட்டான். வெறும் தேர்தல் வெற்றிக்காக சிறுபான்மை இனத்தவர்கள் மீது தனது கொடூர முகத்தை காட்டும் விமல் வீரவன்ஸ போன்றவர்களை வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறானவர்களை மனித இயல்புள்ள அனைவரும் நிராகரிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணிற்குள்தான் தோண்டி எடுக்கவேண்டுமென கூறும் நீங்களா எமது உறவுகளை மண்ணிற்குள் புதைத்தீர்கள் ? என்ற சந்தேகம் தற்போது எமக்கு எழுந்துள்ளது. எமது மக்கள் உங்களிடம் கோரிநிற்பது யுத்தத்தின்போது ஆயுதமேந்தி போராடி காணாமல் போனவர்களை அல்ல பெரும்பாலும் சர்வதேச யுத்த நியமங்களுக்கு அமைய சரணடைந்தவர்களையும் பெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களையுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும் அவர்களை நீங்கள் மண்ணுக்குள் புதைத்திருந்தால் நீங்கள்தான்
குற்றவாளிகள் என்பதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

சம்பிரதாயத்தற்கு கூடிக் கலையும் சபையாக மாறிவருகின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அவையில் இவ்வாறனவர்களின் கருத்துக்களை ஆதாரங்களாகவும் வாக்குமூலங்களாகவும் சமர்ப்பித்து உறவுகளை இழந்து வாடும் எமது மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க நாம்
அனைவரும் முன்வரவேண்டும் .

ஒரு நாட்டில் வாழும் ஒரு இனக்குழுமத்தை சார்ந்த மக்களை விசாரணைக்கென அழைத்துச் சென்றுவிட்டு அவர்களை மண்ணிற்குள் தேடிப்பாருங்கள் என்று சொல்வது ஒட்டுமொத்த மனித உரிமையின் அடிப்படைகளையும் கேள்விக்குட்படுத்தும் மிலேட்சைத்தனமான செயலாகவே சர்வதேசம் நோக்கவேண்டும் இன்று இவ்வாறு சொல்லத் துணிந்தவர்கள் நாளை என்ன செய்யப்போகிறார்கள் என்பதையும் மனித உரிமை அமைப்புக்களும் ஐக்கிய நாடுகள் சபையும் ஊகித்துக்கொள்ளவேண்டும்.

சமத்துவத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் இவ்வுலகில் தொடர்ந்தும் அடிப்படைவாதம் பேசும் விமல்வீரவன்ஸ போன்றவர்களை நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் கண்டும் காணாமல் இருப்பதும் இந்த நாட்டினது எதிர் காலத்திற்கு உகந்ததாக அமையாது என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply