காணாமற் போன பனிப்பாறைக்கு அஞ்சலி செலுத்திய சுவிஸ் மக்கள்

517 Views

சுவிற்சர்லாந்தில் உள்ள பனிப்பாறை ஒன்று காணாமல் போனதைக் குறிக்கும் விதமாக ஏராளமான மக்கள் அதற்கு அஞ்சலி செலுத்தினர். இந்தப் பனிப்பாறை பருவநிலை மாற்றத்தின் காரணமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

பிசோல் பனிப்பாறை வடகிழக்கு சுவிற்சர்லாந்தின் க்ளாரஸ் ஆல்ப்ஸ் இல் உள்ளது. இந்த பனிப்பாறையானது 2006ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 80% காணாமல் போய்விட்டது. இதற்கு புவி வெப்பமயமாதல் தான் காரணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நாவில் விவாதிக்க உலகத் தலைவர்களும், இனம் செயற்பாட்டாளர்களும் நியுயோர்க்கில் கூடியிருக்கும் இந்த சூழலில், ஆல்பஸ் மலையில் ஏறி மக்கள் அந்தப் பனிப்பாறைக்காக அஞ்சலி செலுத்தினர்.

2050ஆம் ஆண்டுக்குள் சுவிற்சர்லாந்தில் உள்ள பாதிக்கும் அதிகமான பனிப்பாறைகள் இல்லாமல் போகும் என்கிறார்கள் வல்லுநர்கள். 8850 அடி உயரத்தில் அமைந்துள்ள அந்த மலையில் கறுப்பு உடை அணிந்து சூழலியலாளர்கள் ஏறி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வை பருவநிலை பாதுகாப்பிற்கான சுவிஸ் மன்றம் ஒருங்கிணைத்தது.

சுவிஸ் தனது கரியமில வெளியேற்றத்தை 2050ஆம் ஆண்டிற்குள் சுழியமாக குறைக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறான நிகழ்வு நடப்பது இது முதல்த்தடவை அல்ல. 2014ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் 700 வயது பனிப்பாறை இறந்து விட்டதாகக் கூறி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

 

Leave a Reply