கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு எழுவரை விடுதலை செய்ய, தமிழக முதல்வருக்கு விசிக வேண்டுகோள்

நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன்-03ம் தேதி அன்று, பத்தாண்டுகளுக்கும் மேல் நெடுங்காலமாக சிறைப்பட்டிருப்போர் யாவரையும் மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்ய முன்வர வேண்டும்.

கொரோனா கொடுந்தொற்றின் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் ஏற்கனவே உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதனை ஏற்கனவே ஏழு தமிழர் விடுதலை குறித்த அறிக்கையிலும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

அத்துடன் வயது மூப்படைந்தோர், கடுமையான நோய்களுக்கு ஆட்பட்டோர், வழக்குகளை நடத்த பொருளாதார வலிமையின்றி பல ஆண்டுகளாக உள்ளேயே கிடைக்கும் விசாரணை கைதிகள், பெண் கைதிகள் போன்றோரையும், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.