நேற்று இன்று நாளை – தாஸ்
எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்ட எமது தாயகத்திலே நேற்று முழுமையான வளப் பாதுகாப்புடன் ஒவ்வொரு வளத்தினதும் உச்சப் பயன்பாடுகளின் முழுமையான பயனை நாடும் நாட்டு மக்களும் பயன்பெறக் கூடிய வகையில் நன்கு திட்டமிடப்பட்ட செயற் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மரம் தறித்தல் மிகவும் கண்டிப்புடன் தடை செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் மக்களின் தேவை கருதி வனவள பாதுகாப்பு பிரிவின் ஊடாக மரக்காலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவை நடைமுறையில் இருந்ததுடன், மரநடுகைக்காக பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் பத்து இலட்சம் மரங்கள் தொடர்ச்சியாக பராமரிப்பு செய்யப்பட்டு வந்தன. ஆனால் இன்று எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி மரங்கள் யாவும் அழிக்கப்பட்டு வருகின்றது. அதாவது காடுகள் காடுகளாகவே காட்சி தரும். ஆனால் அதன் உட்புறத்தில் உள்ள நீண்ட மரபினைக் கொண்ட அரிய வகை மரங்கள் அழிக்கப்பட்டு வெற்றிடங்களே காணப்படுகின்றன.
மன்னராட்சிக் காலத்திலிருந்தே வடிகால்களோடு கூடிய குளம் அமைத்து, அதன் மரபுவழி வேளாண் செயல் முறையையும் அடிப்படையாகக் கொண்டு புதிய தொழில்நுட்ப முறைமையுடாக பயிர்ச்செய்கை செய்து வந்த நாம், நீர்ப் பயன்பாட்டிற்கான குளங்கள், ஆறுகள், வாய்க்கால்கள், கழிவு வாய்க்கால்கள் என்பன முழுமையாக மக்களின் ஒத்துழைப்போடு பராமரிப்புச் செய்யப்பட்டு, அதன் முழுப் பயனும் நாட்டிற்கும், மக்களுக்கும் சேரக்கூடிய ஏதுநிலை உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று இந்த நிலைமை காணப்படவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர் உற்பத்திக்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது. 100 விழுக்காடு பயிர்ச் செய்கைக்காக முன்கூட்டியே தூய விதைகள், உள்ளீடுகள், நோய் நீக்கிகள் போன்ற தேவைகள் முன்கூட்டியே திட்டமிட்டு, உற்பத்தி தொடங்க முன்பே கையிருப்பில் வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு ஒவ்வொரு அங்குல நிலமும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதுடன் தட்ப வெப்ப காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றுப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டமையால் மிகவும் பெரிய அளவு பொருளாதாரத்தடை இருந்த போதும் பட்டினிச் சாவு ஏற்படாமலும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமலும் எம் மக்கள் வாழக்கூடிய கூழ்நிலை ஏற்பட்டது. பசுமை வேளாண்மை உருவாக்கப்பட்டதுடன், மாற்று சக்தி வளமேம்பாடும் உள்ளுர் விதைகள் பேணுகை நிலையம், பயிரமுதம் எனப்படும் இயற்கை உரவகை உற்பத்தி நிலையங்களும் அன்று உருவாக்கப்பட்டது.
இன்று திறந்த பொருளாதார நிலை காணப்பட்ட போதும், தூய விதைகள், பசளை இன்றி விவசாயிகள் படு ஏமாற்றத்துடன் தொழில் செய்து வருகின்றனர். வங்கிகளில் பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்த முடியாமல் மிகவும் மனக்குழப்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். உழைப்பிற்கேற்ப இலாபம் இன்மை காணப்படுகின்றது. உழுந்து 300 ரூபாவிற்கு விவசாயிகளிடம் பெறப்பட்டு 1700 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. இதனால் பாடுபட்டு உழைத்த பயிர்ச் செய்கையாளர்களும் இதனை நுகரும் மக்களும் பாதிப்படைகின்றனர். இச் சூழலின் ஊடாக விதைகள் உரிய காலத்தில் மானிய விலையில் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதோடு, மக்களின் நுகர்வுப் பயன்முறை வீழ்ச்சி காணுகின்ற போது நாளை எம் மக்களின் ஊட்டச்சத்தற்ற வாழ்க்கையின் ஊடாக நீண்ட வாழ்நாளில் தாக்கம் ஏற்படும். எனவே மக்கள் ஒன்றிணைந்து மரபுவழி தூய விதை நெல், சிறுதானியங்கள் என்பவற்றை தாங்களாகவே நிலையான பொறிமுறையுடாக பேணிப் பாதுகாத்து பயன்படுத்த வேண்டும்.
எமது மக்கள் ஒருங்கிணைந்த விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற கூட்டப் பண்ணைச் செய்கை திட்டங்களில் ஈடுபட வேண்டும்.
“வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல்லுயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்”
என்ற ஔவையாரின் பாடல் வரிகள் போல் ஒற்றுமையாக கூட்டுணர்வுடன் வேலை செய்தோம். இன்று அந்த நிலை மலையேறி விட்டது. இருப்பினும் இப் பண்பியல்புகளை மீளவும் உருவாக்குவதோடு, ஊர்கள் தோறும் சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கம் போன்ற செயல்முறைகளை கட்டமைத்து ஊக்கமளிக்கப்படும் போது, நாம் தன்னிறைவான வாழ்வை அடைய முடியும். ஆகவே நாளைய விடிவை நோக்கி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். பல ஆயிரக் கணக்கில மரநடுகை செய்தது போன்று நிலவளம், நீர்வளங்களின் உச்ச பயன்பாட்டை பயன்படுத்தி தன் நிறைவான வாழ்வை நோக்கி மீண்டும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.