கத்தாரில் முதல் பொதுத் தேர்தல் அறிவிப்பு

கத்தாரின் மன்னருக்கு வழிகாட்டும் ஷுரா சபையின் உறுப்பினர்கள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என கத்தாரின் மன்னர் ஷேக்-தமிம்-பின்-அல்- தனி அறிவித்துள்ளார் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மன்னராட்சி நடைமுறையில் இருக்கும் பல நாடுகளில் கத்தாரும் ஒன்று. கத்தார் மன்னருக்கு வழிகாட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஷுரா சபை என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கத்தாரின் அரசுக்கு அறிவுரை வழங்கும் உச்சபட்ச அதிகாரம் பெற்ற ஆலோசனைக் குழுவான ஷுரா சபையின் உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க உத்தரவிட்டுள்ளார் கத்தார் மன்னர்.

2004-ம் ஆண்டில் இருந்தே இந்த தேர்தல் ஒத்திவக்கப்பட்டு, மன்னரே ஷுரா சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த முறை பொதுத் தேர்தலின் மூலம் மக்கள் 30 ஷூரா சபை உறுப்பினர்களை தேர்வு செய்வார் எனவும் அதில் 15 பேர் ஷுரா சபையின் உறுப்பினர்களாக மன்னரால் நியமிக்கப்படுவார் எனவும் அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலை நடத்த கமிட்டி ஒன்று அமைக்கப்பட உள்ளது. அந்த கமிட்டியின் தலைவராக பிரதமார் இருப்பார் எனவும் மன்னர் அறிவித்துள்ளார். 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த தேர்தல்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் சில உள்ளூர் ஆட்சி அமைப்புகளுக்கான  தேர்தல்களை நடத்துகின்றன. ஆனால, கத்தாரின் ஷூரா குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் மன்னரால் தான் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி கத்தாரின் அண்டை நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமீரகம் மற்றும் பக்ரைன் போன்ற நாடுகள் கத்தாரின் மீது பொருளாதாரத் தடை விதித்திருந்தன. இது போன்ற அவதூறுகளை தவிர்ப்பதற்காக மன்னருக்கு அறிவுரை வழங்கும் ஆலோசனைக் குழுவை மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

இந்த தேர்தலை பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஷேக்  தமிம் 2013-ம் ஆண்டு கத்தார் மன்னராக பொறுப்பேற்ற பின்பு ஜனநாயகத்தன்மை, தொழிலாளர் உரிமை மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் என பல தளங்களில் மாற்றங்களை முன்னெடுத்துள்ளார்.

49-வது ஷுரா சபையின் கூட்டதை தொடங்கி வைத்து பேசிய மன்னர் ”கத்தாரை வழிநடத்தும் ஷூரா சபையை வலுப்படுத்த தேர்தல் ஒரு முக்கியமான அம்சம் என கூறியுள்ளார். மேலும் ”மக்களின் பங்களிப்பின் மூலம் சட்டமன்ற நடைமுறைகளை இன்னும் வலுப்படுத்தலாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் ”நமது அரசியலமைப்பு முறை இந்த சமூகத்தின் அமைப்பில் இருந்து கட்டப்பட்டுள்ளது. இங்கு பல கட்சிகளைக் கொண்ட அமைப்பு இல்லை என்றாலும் நேர்மையான மற்றும் முற்போக்கான எமிரெட்ஸ் முறையே பாராம்பர்யமாக இங்கு இருக்கிறது” என கூறியுள்ளார்.

கத்தாரினுடைய அதிகார வர்க்கத்தை இந்த தேர்தல் மூலம் மாற்ற வாய்ப்புள்ளதாக கத்தாரைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் மஜித் அல் அன்சாரி ராய்ட்டர்சிடம் கூறியுள்ளார். அரசின் மீது மக்களுக்கு எந்தக் கோபமும் இல்லை என்று கூறிய அவர் எளிதில் அணுகக் கூடியவராகவும் மன்னர் உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.