மேய்ச்சல் தரை விவகாரத்தில் ஆளுநரின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது- கருணாகரன்

மட்டக்களப்பு மாவட்ட மயிலன்தனை மாதனை  மேய்ச்சல்
தரை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகளை விடுத்து ஆளுநர் எடுத்துள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட மயிலன்தனை மாதனை  மேய்ச்சல்
தரை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஷ தலைமையிலான குழு  ஒன்று அமைக்கப்பட்டு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த செயற்பாட்டுக்கு எதிராக மட்டக்களப்பு ஆளுநர் தீர்மானம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கருத்து தெரிவிக்கையில்,

“மாவட்டத்தில் மேய்ச்சல் தரை பிரச்சனை பெரிய பிரச்சனை உருவெடுத்துள்ளதுடன் பேசும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

ஏறாவூர்பற்று பிரதேச செயலப் பிரிவின் கீழ் உள்ள மயிலத்தனை மாதனை மேச்சல்தரை பிரதேசத்துக்குள் திட்டமிட்டு அயல் மாவட்ட சிங்கள மக்களை கொண்டுவந்து சேனைப் பயிர் செய்கை என்ற பேர்வையிலே ஒரு குடியேற்ற நிகழ்வை நிகழ்த்திக் கொள்வது வேதனைக்குரிய விடயமாகும்.

கடந்த 21 ம் திகதி ஒக்டோபர் மாதம் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திலே நானும் எனது சக நாடாளுமன்ற உறுப்பினரும் சந்தித்து கலந்துரையாடலின் அடிப்படையில் 23 ம் திகதி சமல் ராஜபக்ஷவின் அலுவலகத்தில் வடக்கு கிழக்கைச் சோந்த கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொது ஜன பெரமுனை 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொலநறுவையைச் சேர்ந்த மகாவலி அதிகாரசபையின் இராஜாங்க அமைச்சர் சிறிபால சம்பத் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர், செயலாளர் உட்பட அதிகாரிகள் கலந்துரையாடியதன் நிமிர்த்தம் இந்த மயிலத்தனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு காணப்படமுடியாத இடத்தில் இந்த மாதம் 2ம் திகதி வெலிகந்தை மகாவலி காரியாலயத்தில் காலை 9 மணிக்கு கூட்டம் நடாத்துவதாகவும் அந்த குழுவிலே 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அம்பாறையில் 3 பொதுஜன பொரமுனை உறுப்பினர்களும் பொலநறுவை மாவட்டத்தில் இராஜங்க அமைச்சர் சிறிபால சம்பத், அம்பாறை மட்டக்களப்பு அரசாங்க அதிபர்கள் மற்றும் ஏறாவூர்பற்று கிரான் பிரதேச செயலாளர்கள் மகாவலி அதிகாரசபை பணிப்பாளர் உட்பட ஒரு குழுவை அமைத்து பிரச்சனைக்குரிய மயிலத்தனை மடு பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று அந்த குழு ஒரு தீர்கமான முடிவை எடுக்கவேண்டும் என்ற ரீதியிலே அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அந்த வகையில் நாட்டில் நடைபெறும் அசாதாரண சூழ்நிலையில் நேற்று முன்தினம் வெலிகந்தையில் நடைபெற இருந்த கூட்டம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது என அறிய கிடைத்தது.

இருந்தும் கடந்த மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் சம்மந்தப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அதன் பின்னர் 30ம் திகதி ஊடகங்களுக்கு 500 ஏக்கர் நிலத்தை சேனைப்பயிர் செய்கைக்காக கொடுக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சம்மந்தபட்ட அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரின் தலைமையிலே நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு முரனாக அமைச்சரினால் ஏற்படுத்தப்பட்ட குழு 2ம் திகதி கூடுவதற்கு முன்னதாக கிழக்கு மாகாண ஆளுநர் தன்னிச்சையாக அப்படி ஒரு தீர்மானத்தை எடுத்திருப்பதானது வேதனைக்குரிய விடயம்.

ஒரே நாடு ஒரே சட்டம் என ஜனாதிபதி கூறியிருக்கும் இந்த வேளையில் சம்மந்தப்பட்ட அமைச்சரினால் கூட்டப்பட கூட்டத்தையும் அவரினால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்காக உருவாக்கப்பட்ட அந்த குழுவையும் உதாசீனம் செய்து அமைச்சரையும் அந்த குழுவையும் அவமதித்து ஆளுநர் எடுத்திருக்கும் தீர்மானம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த அடிப்படையில் நேற்று உடனடியாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சிறிபால சம்பத், மகாவலி அதிகாரசபை ஜெனரல் ஆகியோருக்கு இந்த பிரச்சனைக்கு சம்மந்தப்பட் அமைச்சார் சமல் ராஜபக்ஷ தலையிட்டு அவரினால் உருவாக்கப்பட குழு மீண்டும் கூடி ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும்வரை அந்த பிரதேசத்தில் நடைபெறும் சேனைப்பயிர் செய்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு நான் வேண்டி கடிதங்கள் அனுப்பியுள்ளேன். எனவே அமைச்சர் சமல் ராஜபக்ஷ முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.