கட்சியின் தலைமைப் பதவி கோட்டாபயவுக்கு வழங்கப்பட வேண்டும் – மீண்டும் வீரவன்ச

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கட்சித் தலைமை பதவி வழங்கப்படவேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ஸ மீண்டும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தற்போதைய அரசை ஆட்சிக்கு கொண்டு வரஉதவிய பௌத்த பிக்குகளுக்கும் இடையே நேற்றுமுன்தினம் மாலை ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடல் ஸ்ரீஅபயராம விகாரையில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களுடன் பேசிய அமைச்சர் விமல் வீரவன்ஸ, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு அரசியல் பலத்தை வழங்குவதற்காக கட்சிக்குள் தலைமைப் பதவியை வழங்கவேண்டும். பொது ஆணையுடன் உருவாக்கப்பட்ட அரசாங்கம் பொருத்தமான முறையில் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிக்குகள் உள்ளனர் – என்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் உதய கம்மன்பில, அரசாங்கம் எதிர்கொள்ளும் அரசியல் சவால்கள் குறித்து வெளிப்படையான கலந்துரையாடலை நடத்தியதாகவும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறினார். வெளி சக்திகளால் உருவாக்கப்பட்ட உள் சவால்களும் உள் மற்றும் வெளிப்புறச் சவால்கள் உள்ளன. அதன்படி எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.