ரணில் அரசு நடைமுறைப்படுத்தாத ஐ.நாவின் தீர்மானம் – நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்கிறார் கோத்தா

சிறீலங்காப் படையினர் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரை செய்து 2015 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை தமது புதிய அரசு ஏற்றுக்கொள்ளாது என சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

இன்று (15) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நா தீர்மானத்தை முன்னைய அரசே மேற்கொண்டிருந்தது. அது மட்டுமல்லாது, அது ஒரு உத்தியோகபூர்வமற்ற அறிக்கையாகவே நான் கருதுகின்றேன். ஆனால் என்ன பிரச்சனையாக இருந்தாலும், ஐநா மனித உரிமை அமைப்புடன் இணைந்து பணியாற்றி அதனை தீர்ப்பதற்கு நாம் விரும்புகின்றோம்.

ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக எமது கட்சி முன்னரே எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தது. 13,800 விடுதலைப்புலிகள் சரணடைந்திருந்தனர், நாம் அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்திருந்தோம். அதனை அனைத்துலக கண்காணிப்பாளர்களின் உதவியுடன் மேற்கொண்டோம்.

பழைய பிரச்சனைகளில் தொங்கி நிற்காது நாம் முன்னகர வேண்டும். அதற்கான நேரம் இது. எல்லா மக்களும் உரிமைகளுடன் வாழ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கோத்தபாயாவின் இந்த நடவடிக்கை மேற்குலகத்திற்கும், சிறீலங்காவுக்குமான விரிசல்களை மேலும் அதிகரிப்பதுடன், ஐ.நா அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டிய சூழ்நிலையை உருவாக்கலாம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.