ஐநா படையில் சிறிலங்கா – வெளிவிவகார செயலாளர் , ஐ.நா. அதிகாரிகள் நியூயோர்க்கில் பேச்சு

ஐ.நா.வின் 74 வது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் தற்போது இலங்கை தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கி வரும் வெளிவிவகார செயலாளர் ரவீநாத ஆரியசிங்க, ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்கான பங்களிப்பில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய நாடுகள் அமைதிச் செயற்பாடுகள் திணைக்களத்தின் கீழ்நிலை செயலாளர் நாயகம் திரு. ஜீன் பியர்ரே லெக்ரொய்க்ஸ் அவர்களை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (2019 செப்டம்பர் 27) சந்தித்தார்.

ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கைத் துருப்புக்கள் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளரின் உதவிப் பேச்சாளர் 2019 செப்டம்பர் 25 அன்று அளித்த அறிக்கை குறித்து தெளிவுபடுத்துமாறு வெளிவிவகார செயலாளர் கோரியதற்கிணங்க, தற்போது அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கைத் துருப்பினர்களில் 25% மாத்திரமே, தமது பதவிக் காலத்தை லெபனானில் நிறைவு செய்யும் போது மாற்றப்படுவர் என கீழ்நிலை செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

தற்போது லெபனானில் இருக்கும் அமைதி காக்கும் படையினரை மீண்டும் சரிசெய்வதன் மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படும். இலங்கை அமைதி காக்கும் படையினரை மேலும் குறைக்க முடியாது என்பதை கீழ்நிலை செயலாளர் நாயகம் லெக்ரொய்க்ஸ் உறுதிப்படுத்தினார்.

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் குறித்து எந்தவிதமான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் இல்லை என்பதனாலும், குறித்த நேரத்தில் ஊழியர்களின் தலைமைப் பொறுப்பில் அவரே இருப்பதனாலும், இலங்கை ஜனாதிபதி அவரை இராணுவத் தளபதியாக நியமித்ததாக வெளிவிவகார செயலாளர் முன்னதாக சுட்டிக்காட்டினார்.

லெப்டினன்ட் ஜெனரல் சில்வா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொகுக்கப்பட்ட அறிக்கைகளின் நம்பகத்தன்மையை இலங்கை அரசு மறுக்கின்றது என்பதை செயலாளர் வெளிப்படுத்தினார். 2011 தாருஸ்மன் அறிக்கையானது அந்த நேரத்தில் மனித உரிமைகள் சபையினால் முறையான இலக்கத்துடன் ஐ.நா. வின் ஆவணமாக வெளியிட மறுக்கப்பட்டது ஆதலால், அது மிகவும் குறைபாடுடையது என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும், செப்டம்பர் 2015 இன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணை அறிக்கையானது, ‘இது ஒரு மனித உரிமை விசாரணையாவதுடன், ஒரு குற்றவியல் விசாரணை அல்ல’ என்பதனையும், ‘கட்டளைத் தொடரின் விளக்கத்தில் வழங்கப்பட்ட பெயர்கள், இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டும் மீறல்களுக்கான நேரடி பொறுப்பு அல்லது உயர்ந்த பொறுப்பிலுள்ளவர்களிடமிருந்து கிடைத்த கட்டளை ஆகியன குற்றத்தை குறிக்கவில்லை.

தனிப்பட்ட குற்றவியல் பொறுப்பானது, உத்தரவாதமளிக்கப்பட்ட தேவையான அனைத்து செயன்முறைகளுக்கும் இணங்க, நீதிமன்றத்தால் மாத்திரமே கண்டறியப்பட முடியும்’ என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது. 2019 ஜனவரிக்கான சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் வெளியீடானது, முன்னர் வெளியிடப்பட்ட குறைபாடுள்ள தொகுப்புக்களின் மறு உருவாக்கம் ஆகும். இந்த அறிக்கைகள் எதுவும் லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவின் குற்றச்சாட்டினை நிறுவுவதற்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட முடியாது என அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக மோதல்களின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த உள்நாட்டு செயன்முறைகளான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள், இந்த இரண்டு ஆணைக்குழுக்களினதும் முன்னிலையில் நேரில் சாட்சியம் அளித்த தற்போதைய இராணுவத் தளபதியின் நடத்தைக்கு எதிரான எந்தவொரு ஆதாரத்தையும் அடையாளங்காணவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. வினால் பொதுக் களத்திற்கு வெளியிடப்பட்ட தகவல்களிலும் கடுமையான முரண்பாடுகள் உள்ளன என்று இலங்கை கருதுவதாக வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டார். அமைதி காக்கும் படையினரைக் கட்டுப்படுத்துவது குறித்த விடயம் முதலாவதாக இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டபோது, இலங்கையின் இணைந்த தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐ.நா அமைதி காக்கும் படையினர்களின் பரிசீலணை ஆகியவற்றின் தாமதம் குறித்து எந்த குறிப்புக்களும் இருக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் அமைதிச் செயற்பாடுகள் திணைக்களத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கையில், தரப்பினர்களுக்கிடையிலான ஆலோசனைகளைத் தொடர்ந்து முடிவுறுத்தலுக்கான நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்த சந்தர்ப்பத்தில், ஐ.நா. தனது கடமையை நிறைவேற்றவில்லை என்பதுடன், ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை மேற்கொண்டு, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவை இலங்கைக்கு வழங்கியது.

ஐக்கிய நாடுகள் கீழ்நிலைச் செயலாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மரியாதைக்குரிய அழைப்பின் போது இலங்கையின் நிரந்தர பிரதிநிதிக்கு தெரிவிக்கப்பட்ட தீர்மானமானது பொருத்தமற்றதாகும்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளரினால் இந்த விடயம் பொதுக்களத்திற்கு வெளியிடப்படுவதற்கு முன்னர், ஐக்கிய நாடுகள் அமைதிச் செயற்பாடுகள் திணைக்களத்தினால் இலங்கைத் தரப்பினருடன் இது குறித்து எந்த கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படாமை மேலும் வருந்தத்தக்கது.

மேலும், குறித்த இலங்கைத் துருப்புக்களை மாற்றுவதன் மூலம் இடம்பெறுவதற்கு எதிர்பார்க்கப்படும் துருப்புக்கள் பங்களிக்கும் நாடு தொடர்பான தகவல்கள் ஐக்கிய நாடுகள் அமைதிச் செயற்பாடுகள் திணைக்களத்தினால் தொழில் ரீதியாக தெரிவிக்கப்படுவதற்கு பதிலாக, லெபனானில் உள்ள இலங்கையின் தூதுவரினால் சம்பந்தப்பட்ட நாட்டின் எதிரணியினரிடமிருந்து, இராஜதந்திர வரவேற்பு நிகழ்வொன்றின் போது அறியப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அமைதிச் செயற்பாடுகள் திணைக்களத்துடனான இலங்கை அரசாங்கத்தின் தகவல் தொடர்புகளில், லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிப்பது முழுமையாக, இணைந்து ஆராயப்பட்ட செயற்பாடுகள் மூலமாக ஐ.நா அமைதிக்காப்பு பணிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இராணுவப் பணியாளர்களின் பொருத்தத்திற்கும் ஈடுபாட்டிற்கும் எந்த விதத்திலும் தொடர்புடையதல்ல, ஆதலால் தனிப்பட்ட முறையில் இந்த துருப்புக்கள் மீது தண்டனை நடவடிக்கை மூலம் அபராதம் விதிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்குதல் ஆகிய செயற்பாடுகளைத் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட தொடர்புடைய நடவடிக்கைகளில் சட்டபூர்வமாக ஈடுபடுவதனை அவர்கள் இழப்பதானது, அவர்களது சரியான எதிர்பார்ப்பை மறுப்பதாகும். இதனால், ஐ.நா. குறித்த தீர்மானத்தை அமுல்படுத்துவதன் மூலம் மனிதாபிமான அம்சத்தை கவனிக்கத் தவறிவிட்டது.

மேலும், அடையாளம் காணப்பட்ட இலங்கையின் இந்த அமைதி காக்கும் படையினர் தமது திறமையான நிபுணத்துவத்தை வழங்குவதற்கான வாய்ப்பு ஐக்கிய நாடுகள் அமைதிச் செயற்பாடுகள் திணைக்களத்தின் குறித்த நடவடிக்கை காரணமாக மறுக்கப்படுவதால், துருப்புக்களைப் பெற்றுக் கொள்ளும் நாட்டை சிரமத்திற்குள்ளாக்குவதுடன், தொடர்புடைய சேவை அமைப்பில், அமைதி காக்கும் நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கும் சமரசம் செய்வதற்கும் வழிவகுக்கும்.

மிகவும் இலகுவான இடங்களில் பணியாற்றி வரும், ஆனால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் அதிக அச்சுறுத்தல் உள்ள இடங்களில் பணியாற்றும் இலங்கை அமைதி காக்கும் படையினரை இடமாற்றம் செய்யாமல், ‘செர்ரி பழத்தை பறித்தல்’ போல ஐக்கிய நாடுகள் அமைதிச் செயற்பாடுகள் திணைக்களம் மேற்கொண்டுள்ள தீர்மானம், ஒரு புனிதமான கடமையை அரசியல் மயமாக்குவதற்கான அடையாளங்களைக் கொண்டுள்ளது என செயலாளர் ஆரியசிங்க அவதானித்தார்.

1960 முதல், ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் நீண்டகால பங்களிப்பை வழங்கி வரும், மற்றும் மிகவும் கடினமான சில பணிகளில் தொடர்ந்தும் பணியாற்றி, உயிரிழப்புகளையும் எதிர்நோக்கியுள்ள ஒரு நாட்டை மதிக்க வேண்டும், ஆதலால் ஐக்கிய நாடுகள் அமைதிச் செயற்பாடுகள் திணைக்களம் தனது முடிவை இலங்கை அரசு முன்வைத்த உண்மைகளின் பின்னணியில் மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தின் சார்பாக வெளியுறவு செயலாளர் ஆரியசிங்க கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஷெனுகா செனவிரத்ன, ஐ.நா. விற்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் இராணுவ ஆலோசகர் பிரிக்கேடியர் விஜேந்திரலால் குணதிலக்க மற்றும் ஏனைய சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் வெளிவிவகார செயலாளருடன் இணைந்திருந்தனர். ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான ராணுவ ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் கார்லோஸ் ஹம்பர்ட்டோ லொய்டி, செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியும் பெல்கிரேடில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் தலைவருமான திரு. பீட்டர் டியூ மற்றும் முன் அலுவலகத்தின் தலைவர் மார்கோ பியாஞ்சினி ஆகியோர் கீழ்நிலை செயலாளர் நாயகத்துடன் இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

28 செப்டம்பர் 2019